அறிவியல் முத்துக்கள் (24)

நறுமண உணவைக் (spicy food) காணும்போது வாயில் நீர் ஊறுவது/சுரப்பது

Spicy Foodமசாலா கலந்த நறுமண உணவைப் பார்த்தாலோ அல்லது முகர்ந்தாலோ நாவில் நீர் சுரப்பது ஓர் அனிச்சைச் செயலாகும் (reflex action). நாம் உண்ணும்போது நாவிலுள்ள உமிழ்நீர் (saliva) சுரப்பிகள் சுறுசுறுப்படைகின்றன. உமிழ்நீரிலுள்ள நொதிப்பொருட்கள் (enzymes) உணவு செரிப்பதற்குத் துணை புரிகின்றன. ஆனால், சில நேரங்களில் வாயில் உணவு இல்லாத நிலையிலும் கூட சுரப்பிகளிலிருந்து ஏராளமாக உமிழ்நீர் சுரப்பதுண்டு. சுவையான நறுமணம் மிக்க உணவைப் பார்க்கும்போது அல்லது முகரும்போது அதனை உண்பதற்கு எதிர்பார்த்து இவ்வாறு நிகழ்கின்றது.

நறுமணமிக்க உணவைப் பார்க்கும்போது அல்லது முகரும்போது, நரம்பு உயிரணுக்கள் தூண்டப்பட்டு சமிக்கைகள் (signals) மூளைக்கு அனுப்பப்படுகின்றன; அவை உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுவதால் நாவில் உமிழ்நீர் சுரக்கின்றது.

நமக்கு நீர் வேட்கை (thirsty) உணர்வு உண்டாவது

Thirstyநமது உடலின் எடையில் 60% நீரின் எடையேயாகும். மூச்சு விடுதல் (exhalation), வியர்வை (perspiration), மற்றும் சிறுநீர் (urine) ஆகியவற்றின் காரணமாக நமது உடலிலிருந்து நீர் தொடர்ந்து வெளியேறுகிறது. அதே வேளையில் நம் உணவிலிருந்து பெருமளவு நீரை நாம் பெறுகிறோம்; ஆனால், மீதமுள்ள நீர் நமது உடலின் தேவைகளுக்குப் போதுமானதல்ல. எனவேதான் நாம் அவ்வப்போது நீர் அருந்த வேண்டியுள்ளது. அதிக வியர்வை அல்லது போதுமான நீர் அருந்தாமை ஆகியவற்றால், நீரின் சமச்சீர்மை பாதிக்கப்படும்போது இரத்தத்திலுள்ள உப்பின் அளவு மாறுபடுகின்றது. இம்மாற்றத்தின் காரணமாக மூளையிலுள்ள வேட்கை மையம் (thirst centre) தூண்டப்பெற்று நமக்கு நீர் வேட்கை உணர்வு உண்டாகிறது.

உடலின் வெப்ப அளவை அறிய, வெப்பமானியை (Thermometer) நாவின் அடியில் வைத்து அளப்பது

Thermometerநாவின் அடிப்பகுதி, அக்குள் (armpit) மற்றும் பெருங்குடலின் அடிப்பகுதி (rectum) ஆகிய இடங்களில் வெப்பமானியை வைத்து உடலின் வெப்பநிலையை அளவிடுவர். இதற்கு முக்கிய காரணம் வெப்பக் கூருணர்வுத் தன்மை கொண்ட (heat sensitive) வெப்பமானியின் குமிழ்ப் பகுதியை வெளிப்புறத்துக்குத் தெரியாத உடற்பகுதிகளில் வைத்து, உடலின் வெப்பநிலையைத் துல்லியமாக அளவிட வேண்டும் என்பதே; மேலும் இவ்வுடற்பகுதிகளில் வெப்பமானியின் பகுதிகள் எல்லாப் பக்கங்களிலும் முழுமையாக மூடியிருக்கும். அக்குள் பகுதியை எளிதாக அணுக இயலுவதால், வெப்பமானி உடையும் ஆபத்தும் மிகக் குறைவு. எனவே குழந்தைகளின் உடல் வெப்பநிலையை அளவிட, இவ்வுடற்பகுதி மிகவும் ஏற்றதாகும். இதே காரணத்துக்காகவும் மிக மிக மென்மையான தோற்பகுதி இருப்பதால் வெப்பக்கடத்தல் திறன் சிறந்து விளங்கும் நிலையில் துல்லியமான வெப்பநிலையை அளவிட முடியும் என்பதாலும், வயது வந்தவர்களுக்கு நாவின் அடிப்பகுதி, வெப்பமானியை வைக்க ஏற்ற பகுதியாக அமைகிறது.

About The Author