அறிவியல் முத்துக்கள் (26)

இரவில் ஒளிரும் விலங்குகளின் கண்கள்

Glowing Eyesபூனை மற்றும் இரவில் செயல் புரிகின்ற பிற விலங்குக் குடும்பத்தை சேர்ந்தவற்றினுடைய விழித் திரையின் (retina) பின்னணியில் “டேப்டம் லுசிடம் (tapetum lucidum)” எனப்படும் ஒரு படலம் உள்ளது. விழித்திரையில் விழும் ஒளியைப் பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்த சிறப்பு உயிரணுக்கள் இப்படலத்தில் உள்ளன. இந்தப் படலம் தான் இவ்விலங்குகளின் கண்கள் இருளில் ஒளிர்வதற்குக் காரணமாக அமைகிறது. இருளில் கிடைக்கும் சிறிதளவு ஒளியைச் சேகரிப்பதில் விலங்குகளுக்கு உதவுவதிலும் கூட இந்த டேப்டம் படலம்தான் உதவி புரிகிறது.

மனிதர்களின் தோலில் நிற வேறுபாடு

Human Skin Colorதோலின் அடிப்படலத்தில் (lowest layer) அமைந்துள்ள நிறமி உயிரணுக்களால் (pigment cells) உற்பத்தி செய்யப்படும் மெலானின் (melanin) எனப்படுகின்ற கருமை நிறமியால் தோலின் நிறம் அமைகிறது. உலகின் அனைத்து இன மக்களுக்கும் நிறமி உற்பத்தி உயிரணுக்கள் ஒரே அளவில்தான் அமைந்துள்ளன; ஆனால் அவை உற்பத்தி செய்யும் மெலானின் அளவு மட்டும் வேறுபடுகிறது. வெப்பப் பகுதியில் (tropical region) வாழும் கருமை நிற மக்களிடம் மெலானின் எனப்படும் கருமை நிறமி மிகுதியாக இருக்கும்; இதற்குக் காரணம் இப்பகுதியில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்வீச்சின் (ultra violet radiation) அடர்த்தி வலிமையாக இருப்பதே ஆகும். இவ்வாறு கூடுதலாக அமைந்துள்ள மெலானின், புற ஊதாக் கதிர்வீச்சின் ஆபத்திலிருந்து தோலைப் பாதுகாக்கிறது. புவியின் நடுக்கோட்டிற்குத் தொலைவில் அமைந்துள்ள அட்சரேகைப் (latitude) பகுதியில் வாழும் மக்களிடம் குறைவான கருமை நிறமி அமைந்திருப்பதால் அவர்களின் தோல் வெளிறிய நிறத்தில் அமைந்துள்ளது. வெளிறிய நிறம் கொண்ட இத்தோல், இப்பகுதியில் சூரிய வெளிச்சத்தின் குறைவான அடர்த்தியின் காரணமாக டி-வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்தை உடலில் உற்பத்தி செய்கிறது. தோலின் நிறத்திற்குக் காரணமாக அமையும் பிறவற்றில் தோலின் இரத்த நாளங்களில் செல்லும் இரத்தம் மற்றும் தோல் திசுவில் அமைந்துள்ள இயற்கையான மஞ்சள் வண்ணத் தடங்கள் (yellowish tinge) ஆகியனவும் அடங்கும்.
  
கொட்டாவி (yawning)

Yawningகொட்டாவி எவ்வித முயற்சியுமின்றி நமக்கு வருவது. நமது நுரையீரல்களுக்குள் (lungs) உயிர்வளியைச் (oxygen) செலுத்தும் ஓர் அனிச்சைச் செயலாகும் (reflex action) இக்கொட்டாவி. களைப்பு, சோர்வு, மன அழுத்தம் அல்லது நீண்ட நேரம் சோம்பி இருத்தல் ஆகியவற்றால் குறைவான மூச்சிழுத்தல் (breathing) காரணமாக உடலுக்குத் தேவையான அளவில் உயிர்வளி எனப்படும் ஆக்சிஜன் கிடைக்காமல் போகக் கூடும். இரத்தத்தில் உள்ள அதிக அளவு கரியமில வாயுவினால் (carbon-di-oxide) கொட்டாவி உண்டாவதாகக் கருதப்படுகிறது. வாயை அகலமாகத் திறந்து கொட்டாவி விடுவதன் காரணமாக இரத்தத்தில் உயிர்வளியின் அளவு அதிகரித்துக் களைப்பைப் போக்க இயலுகிறது.

About The Author