அறிவியல் முத்துக்கள் (29)

வானிலை (climate) இடத்துக்கு இடம் மாறுபடுதல்

Climateஒரு குறிப்பிட்ட இடத்தின் பதிவு செய்யப்பட்ட நீண்ட நாளைய சராசரி தட்பவெப்ப நிலையே (weather) வானிலை எனப்படுகிறது. இது முக்கியமாக இருப்பிடத்தின் புவியியலைப் (geographical location) பொறுத்ததாகும்; புவிநடுக்கோட்டிலிருந்து (equator) ஓர் இடம் எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது, கடலுக்கு அருகிலுள்ள பகுதியா, கடல் மட்டத்திலிருந்து இடத்தின் உயரம் எவ்வளவு, நில உருவியல் (topography) ஆகியன வானிலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துபவை. புவிநடுக்கோட்டிற்கு அருகிலுள்ள பகுதிகளில் வெப்பம் கூடுதலாக இருக்கும்; அட்சரேகைப் (latitude) பகுதிகளில் வெப்பம் குறைவாக இருக்கும். சமவெளிப் பகுதிகளை விட மலையுச்சிப் பகுதிகளில் குளிர் மிகுந்திருக்கும். கடலோரப் பகுதிகளில் பொதுவாக ஈரப்பதமான வானிலையே நிலவும். 

மூடுபனி (fog) 

Fogபூமிக்கு அருகிலுள்ள காற்றில் மிதக்கும் சின்னஞ்சிறு நீர்த்துளிகளின்/நீர்த்திவலைகளின் (tiny water droplets) சேர்க்கையே மூடுபனியாகும். சுற்றுச்சூழலின் வெப்பநிலையில் திடீர்ச் சரிவு ஏற்படும்போது, காற்றின் ஈரப்பதம் / ஈரக்கசிவு (moisture) குளிர்ச்சியடைந்து சின்னஞ்சிறு நீர்த்துளிகளாக மாறத் துவங்குகிறது. வெப்பநிலை குறைவாக இருக்கும் வரை இந்த நீர்த்திவலைகள் காற்றினால் மூடுபனியாக வைத்துக்கொள்ளப்படுகின்றன. காற்றின் வெப்பநிலை உயரும்போது இந்த சின்னஞ்சிறு நீர்த்திவலைகள் ஆவியாகி (evaporate) மூடுபனி மறைந்து போகிறது. 

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் அலைகள் (tides) காணப்படுவதில்லை

Tidesநிலவின் ஈர்ப்பு விசையின் (moon’s gravitational force) காரணமாக பூமியில் அமைந்துள்ள கடல்களில் அலைகள் உண்டாகின்றன. உண்மையில் நிலவின் ஈர்ப்பு ஆற்றல் நிலம், மலை போன்ற அனைத்தையும் கவர்ந்திழுக்கிறது; நிலையாகவும் உறுதியாகவும் அமைந்திருப்பதால் அவை அசைந்து கொடுப்பதில்லை. ஆனால் கடல்களின் நிலைமை வேறானது; நிலவின் ஈர்ப்பு விசையால் நிலத்தில் அமைந்துள்ள பெரும் கடல்பகுதியின் நீர் ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்கு இடம் பெயர முடிகிறது. இவ்விடப்பெயர்ச்சியே அலைகளாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுள்ள நீரின் பரப்பும் கன அளவும் கடலோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவாக இருப்பதால், கடலில் ஏற்படுவது போன்று அலைகள் உண்டாக முடிவதில்லை.

About The Author