அறிவியல் முத்துக்கள் (33)

வானத்தில் மிதக்கும் மேகங்கள்

Cloudsநீராவியைச் சுருக்கி (water vapour condensing) உருவாகின்ற நுண்ணிய நீர்த்துளிகள் அல்லது பனித்துளிகளின் சேர்க்கையால் மிகப் பெரிய அளவில் அமைவனவே மேகங்களாகும். இம்மேகங்கள் மிகப் பெரிய வடிவில் இருப்பினும், கீழே தரையிலிருந்து மேல்நோக்கி இடம் பெயரும் வெப்பக் காற்றின் எழுச்சியினால் அவை தாங்கிக்கொள்ளப்படுகின்றன. மேகங்களுக்கு உள்ளேயும் கூட, மேல்நோக்கி எழும் வலிமையான காற்று வீசுவதால், நீர்த்துளிகள் அல்லது பனிப்படிகங்கள் சீராக அசைந்து செல்கின்றன; இதனால் மேகங்கள் மிதந்து செல்வதுடன், தமது வடிவங்களையும் அவ்வப்போது மாற்றிக்கொண்டே நகர்கின்றன.

செடி கொடிகளுக்கு மண்

Crop soilவாழ்ந்துகொண்டிருக்கும் எந்த ஓர் உயிரினத்தையும் போன்றே, தாவரங்கள் உயிர் வாழவும் வளர்ச்சியுறவும் காற்று, சூரிய ஒளி ஆகியவற்றுடன் நீர் மற்றும் ஊட்டச்சத்துகள் ஆகியன தேவை; இவற்றைத் தாவரங்கள் அவற்றின் வேர்கள் வழியே பெறுகின்றன. நிலத்தில் வளரும் தாவரங்களுக்கு ஈரப்பசையையும் ஊட்டச்சத்தையும் மண்தான் அளிக்கிறது. மேலும் அவ்வப்போது நிகழும் வெப்பநிலை மாற்றங்களிலிருந்து வேர்களைக் காப்பாற்றுவதும் மண்தான். ஆனால் மிக முக்கியமாக, தாவரங்களைத் தரையில் உறுதியாக நிலைத்திருக்குமாறு ஆதரவளிப்பதும் மண்ணே. இருப்பினும், நீரில் வளரும் நீலோற்பவம் (hyacinth) மற்றும் மரங்களில் வளரும் ஒளிர்வண்ணச் செடிகள் (orchids) ஆகியவை மண்ணின் ஆதரவின்றியே வளர்கின்றன; இவை தமக்கு வேண்டிய ஊட்டச்சத்துகளை, தாம் வளரும் தண்ணீர் மற்றும் மரம் ஆகியவற்றிலிருந்தே பெறுகின்றன.

செடிகள் பூத்தல்

Flowersபெரும்பாலான தாவரங்கள் விதைகளை உருவாக்கி அவை மூலம் தம் இனத்தைப் பெருக்குவதற்காகக் கையாளும் இயற்கை உத்தியே அவற்றின் பூத்தல்/மலர்தல் என்னும் செயல்பாடாகும். பூவின் எல்லாப் பாகங்களுமே ஏதோ ஒரு வகையில் இனப்பெருக்கச் செயல்முறையில் பங்கேற்கின்றன. மகரந்தக் குழலில் (stamens) நூலிழை போன்ற தண்டுகள் (stalks) உள்ளன; இவை மகரந்தத்தை/பூந்தாதுவை (pollen) உற்பத்தி செய்யும் பூந்தாதுப் பைகளைத் (anthers) தாங்கி நிற்பவை. மையத்திலுள்ள பிறப்புறுப்பு (pistil), கருப்பையையும் (ovary) ஒட்டும் இயல்புடைய சூலக முகட்டையும் (stcky stigma) கொண்டுள்ளது. பல்வேறு வண்ணம் கொண்ட பூவிதழ்கள் (petals) பூச்சிகளையும் பூந்தாதைத் தூவும் பிற உயிரினங்களையும் கவர்ந்திழுக்கும் சமிக்ஞைகளாக விளங்குகின்றன. தேன் அல்லது இனிய நீர்மப் பொருளுக்காக (nector) மலர்களை நாடும் பூச்சிகள் அல்லது பறவைகள் பூந்தாதுவை/மகரந்தத்தை சூலக முகட்டில் விழுமாறு செய்து கருவகத்திலுள்ள (ovary) கருமுட்டையைக் (egg) கருவுறச் (fertilization) செய்கின்றன. பின்னர் கருவகம் வளர்ச்சியுற்று விதைகளைக் கொண்ட பழமாக மாறுகின்றது; இவ்விதைகள் நிலத்தில் விதைக்கப்பெற்று தாவர இனங்கள் பெருகுகின்றன.

About The Author