அறிவியல் முத்துக்கள் (38)

பாரசூட்கள் (parachutes) எவ்வாறு தரையிறங்குகின்றன?

Parachutes"எதிரிடையாக இயங்கும் இரு விசைகளைச் சமன்படுத்துதல் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில்தான் பாரசூட் இயங்குகிறது. கீழே விழும் எந்த ஒரு பொருளின் மீதும் இரண்டு விசைகளின் தாக்கம் இருக்கும். அவ்விசைகள் முறையே ஈர்ப்பு விசை (gravity) மற்றும் காற்றின் தடை என்பனவாகும்.

ஈர்ப்புவிசை பொருளைப் பூமியை நோக்கி ஈர்க்கும்; காற்றுத்தடை பொருளை மெதுவாகக் கிழே விழச் செய்யும். காற்றுத்தடையின் விசையானது கீழே விழும் பொருளின் மேற்பரப்புக்கு நேர் விகிதத்தில் இருக்கும்; அதாவது மேற்புறம் பரப்பளவு மிகுதியாக உள்ள பொருள் மெதுவாகக் கீழே இறங்கும். பாரசூட்டின் பரந்து விரிந்துள்ள மேற்கவிகையானது (canopy) காற்றுத்தடை விசையால் விரைந்து கீழிறங்குவது தாமதப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக பாரசூட் மெதுவாகவும் மென்மையாகவும் தரையிறங்குகிறது.

தீ எச்சரிக்கைக் கருவி (Fire alarm) எவ்வாறு செயல்படுகிறது?

Fire Alarmதீ பரவுவதற்கு முன்னரே அது பற்றிய எச்சரிக்கையைத் தெரிவிக்கும் ஒரு பாதுகாப்புச் சாதனமே தீ எச்சரிக்கைக் கருவியாகும். பெரும்பாலான தீ எச்சரிக்கைக் கருவிகள் வெப்பம், புகை அல்லது தீப்பிழம்பு (flame) ஆகியவற்றைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையில் தான் செயல்படுகின்றன. வெப்பத்தைக் கண்டறியும் கருவி, தீயின் காரணமாக ஏற்படும் வெப்பநிலை உயர்வை உணர்ந்து, எச்சரிக்கைக் கருவியைத் தூண்டிவிட்டு (trigger) அதனை இயங்கச் செய்யும்; இக்கருவியில் குறைவான வெப்ப நிலையிலேயே கலப்பு உலோகத்தின் (alloy) உருகும் தன்மை அல்லது இரட்டை உலோகத் தகட்டின் (bimettalic strip) வளையும் தன்மை காரணமாக எச்சரிக்கைக் கருவி தூண்டிவிடப்படுகிறது. புகை கண்டறியும் கருவியைப் பொறுத்தவரை, ஒளிமின்கலத்தின் (photocell) மீது விழும் ஒளிக்கற்றைக்கு (beam of light) புகைத் துகள்களால் (smoke particles) இடையூறு ஏர்படும்போது எச்சரிக்கைக் கருவி தூண்டிவிடப்பட்டு இயங்குகிறது. தீப்பிழம்பு மூலம் இயங்கும் கருவியில் தீப்பிழம்புகளால் வெளியாகும் அகச்சிவப்புக் கதிர்வீச்சு (infrared radiation) கண்டறியப்படுவதால் எச்சரிக்கைக் கருவி செயல்படுகிறது.

பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?

Lie Detectorபொய் சொல்லும் ஒரு மனிதர் படபடப்புக்கும் மன அழுத்தத்துக்கும் உட்படுவது தவிர்க்க முடியாதது என்னும் கொள்கையின் அடிப்படையில், பொய்யறி கருவி செயல்படுகிறது. மேற்கூறிய மனநிலைகளில் பொய் சொல்பவரிடம் சில உடலியல் மாற்றங்கள் (physiologicsl changes) கட்டாயம் நிகழும்.

இரத்த அழுத்த உயர்வு, கூடுதலான இதயத் துடிப்பு வீதம் (heart beat rate) மற்றும் கைகளும் பாதங்களும் வியர்த்துப் போதல் ஆகியவை இவ்வுடலியல் மாற்றங்களில் அடங்கும். இம்மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு பொய்யறி கருவியால் ஒருவர் கூறும் பொய் பற்றிக் கண்டறியப்படும். சோதனைக்கு உட்படும் மனிதருக்கு மார்பு அணி, இரத்த அழுத்தக் கருவி ஆகியவை அணிவிக்கப்படுவதோடு, அவரது உள்ளங்கையில் மின்கலங்களின் மின்வாய்களும் (electrodes) பொருத்தப்படும்.

பின்னர் இவரிடம் பல வினாக்கள் கேட்கப்பட்டு அவரது எதிர்வினைகள் (reactions) சோதிக்கப்படும்; வினாக்களுக்கான அவரது விடைகள் உளவியல் வல்லுநர் ஒருவரால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு அவர் கூறுகின்ற பொய்கள் கண்டறியப்படும்.

About The Author