அறிவியல் முத்துக்கள் (40)

குடி தண்ணீர் தூய்மைப்படுத்தல் (water purification)

Waterமாநகரங்கள் மற்றும் நகரங்களுக்கான குடி நீர் பெரும்பாலும் ஆறுகள், ஏரிகள் ஆகியவற்றிலிருந்துதான் பெறப்படுகின்றது; இந்நீரில் பலவகை மாசுகள் கலந்திருக்கும்; எனவே அதனைத் தூய்மைப்படுத்துவது இன்றியமையாததாகும். மாசுபட்ட நீர் முதலில் வடிகட்டிகள் மூலம் அனுப்பப்பட்டு கரடுமுரடான பொருட்கள் நீக்கப்படும்; பின்னர் தொட்டிகளில் தேக்கப்பட்டு பிற மாசுகள் அடியில் தங்குமாறு செய்யப்படும். சில நேரங்களில் இதற்காகப் படிகாரமும் சேர்க்கப்படுவதுண்டு.

தேங்கு தொட்டிகளில் உள்ள நீர் மணல் உள்ள வடிகட்டிப் படுகைகளுக்கு – பெரிய மற்றும் சிறிய மணலை அடியில் கொண்ட பெரிய காங்கிரீட் தொட்டிகளுக்கு – அனுப்பப்படும். மணல் வடிகட்டிகளால் மீதமுள்ள மாசுகள் அகற்றப்படும். மூடிய தொட்டிகளில் இருக்கும் நீரிலுள்ள பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகள், இறுதியாக குளோரின் வாயுவைக் கொண்டு அழிக்கப்படும். இவ்வாறு தூய்மைப்படுப்படுத்தப்பட்ட நீர் குடிப்பதற்காக குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. தொழிற்சாலைப் பயன்பாட்டிற்காக, சில நேரங்களில் கடின நீரில் (hard water) உள்ள மக்னீசியம், கால்சியம் போன்ற அயனிகளை (ions) நிக்குவதற்காக, அயனி மாற்றிகள் (ion exchangers) பயன்படுத்தப்படுவதுண்டு.

தானியங்கு கதவுகள் (automatic doors)

Automatic Doorsகதவுக்கு அருகில் மனிதர் இருப்பதை உணரும் உணரிகளால் (sensors) தூண்டப்பெற்று தானியங்கு கதவுகள் திறந்து கொள்கின்றன. அடிப்படையில் இரு வகை உணரிகள் உண்டு: அழுத்ததை (எடையை) உணர்ந்து கொள்வன மற்றும் காணக்கூடிய அல்லது அகச்சிவப்பு ஒளிக்கற்றைக்கான (visible or infrared beam of light) தடையை/இடையூறை (interruption) உணர்ந்து கொள்வன ஆகியவையே அவ்விரண்டும். ஒளிக்கற்றை உணரி வகையில் ஒளிக்கற்றையை உருவாக்கும் பொறியும், கண்டறியும் கருவியும் நடக்கும் வழியில் எதிரெதிராக அமைக்கப்பட்டிருக்கும்; கதவை நோக்கி நடக்கும் மனிதரால் ஒளிக்கற்றையானது இடையூறுக்கு/தடைக்கு உட்படும்போது, கதவைத் திறக்கும் தொழில் நுட்பம் செயல்பட்டு கதவு தானே திறந்து கொள்ளும். அழுத்த வகையைச் (pressure type) சார்ந்த உணரியாக இருந்தால், அது கதவுக்கு முன்பு இயங்கும் நடைமேடையின் (platform) அடியில் வைக்கப்பட்டிருக்கும். மனிதர் அதன் மீது காலடி வைக்கும்போது அவரது எடையால் அழுத்த உணரியும் கதவைத் திறக்கும் தொழிநுட்பமும் செயல்பட்டு கதவு தானே திறந்து கொள்ளும்.

காற்றுக்கட்டுப்பாட்டுப் பொறி (air-conditioner)

Air Conditionerகாற்றுக்கட்டுப்பாட்டுப் பொறி அறையிலுள்ள காற்றை வாங்கி அதனைக் குளிர்வித்து மீண்டும் அறைக்குள்ளேயே செலுத்துகிறது. பொறியின் குளிர்விக்கும் குழாய்களில் உள்ள அமுக்கப்பெற்ற குளிர்விப்பானை (compressed coolant) திடீரென விரிவடையச் செய்தும் (expansion) ஆவியாக்கியும் (evaporation), காற்று குளிர்விக்கப்பட்டு அறைக்குள்ளே செலுத்தப்படுகிறது. வாயு நிலையிலுள்ள குளிர்விப்பான் அமுக்கியினுள்ளே (compressor) பம்ப் (pump) செய்யப்பட்டு உயரழுத்தத்துக்கு உள்ளாகி வெப்பமடைகிறது. இவ்வாறு அமுக்கப்பெற்ற குளிர்விப்பான் தந்துகிக் குழாய்கள் வழியே ஆவிச்சுருக்கியினுள் (condenser) செலுத்தப்படுகிறது. இங்கு வெப்பம் நீக்கப்பட்டு குளிர்விப்பான் திரவநிலை பெறுகிறது. நீக்கப்பட்ட வெப்பம் ஆவிச்சுருக்கியில் உள்ள விசிறிகளால் வெளியே தள்ளப்படுகிறது.

காற்றுக்கட்டுப்பாட்டுப் பொறி அமைப்பில் ஓர் அமுக்கி (compressor), ஆவியாக்கும் சுருள்கள் (evaporating coils), ஓர் ஆவிச்சுருக்கி (condenser) மற்றும் விசிறிகள் (fans) ஆகியவை அமைந்துள்ளன. திரவ நிலையிலுள்ள குளிர்விப்பான் ஆவியாக்கும் சுருள்களுள் செல்கையில், சுற்றுச்சூழலில் உள்ள வெப்பத்தை வாங்கி திரவம் ஆவியாக்கப் படுகிறது. ஆவியாக்கும் சுருள்கள் மீது விசிறி காற்றை வீசும்போது காற்று குளிர்ந்து, அக்குளிர்ந்த காற்று அறைக்குள் வீசுவதால் அறை முழுதும் குளிர்ச்சியடைகிறது.

About The Author