இயற்கை உலகம் (07)

குழி முயலுக்கும் (rabbit) நீள் முயலுக்கும் (hare) உள்ள வேறுபாடு :

குழி முயல், நீள் முயல் ஆகிய இரண்டும் கொறிக்கும் விலங்குகளே (rodents); அதற்கேற்ப அவற்றின் பற்கள் நீண்டும் கூர்மையாகவும் அமைந்திருக்கும். அவற்றின் பின்னங்கால்கள் (hind legs) முன்னங்கால்களை (forelegs) விட நீண்டவை; இதனால் இவ்விலங்குகள் கீழே இறங்குவதை விட வேகமாக மேலே ஏறிச் செல்ல இயலும். முயல்களைத் துரத்திச் செல்லும்போது, அவை தந்திரமான முறையில் ஓடக்கூடியவை. ஓடும்போது இவ்விலங்குகள் கையாளும் தந்திர வழிகளில் ஒன்று குறுக்கும் நெடுக்குமாக ஓடி துரத்துவோரை ஏமாற்றுவது; மற்றொன்று உயரமாகத் தாவித்தாவி ஓடுவது. ஏதேனும் அபாயம் எதிர்ப்பட்டால்,தரையைப் பின்னங்கால்களால் வலிமையாக உதைத்துப் பிற முயல்களுக்குச் சமிக்ஞை செய்து  இவை தெரிவிக்கும்.                                                                              

                                                                                                                                                                                      

இருப்பினும் இவ்விருவகை முயல்களுக்கும் இடையே பல வேறுபாடுகளும் உள்ளன. நீள் முயல்கள் பெரியவை; இவற்றின் பாதங்களும் காதுகளும் நீளமானவை. நீள் முயல்கள் குழி முயல்கள் போன்று வளைகள் தோண்டுவதுமில்லை அல்லது குழுவாகச் சேர்ந்து வாழ்வதுமில்லை. நீள் முயல்கள் பிறக்கும்போது திறந்த கண்களோடும் முடி நிறைந்தும் காணப்படும்; ஆனால் குழி முயல்கள் பிறக்கும்போது கண்களை மூடியவாறும் முடியின்றியும் காணப்படும். நீள் முயலும் குழி முயலும் இனப்பெருக்கத்திற்காக ஒன்றோடொன்று இணைவதில்லை.

கினிப் பன்றி (guinea pig) என்னும் விலங்கு:

கினிப் பன்றிகள் என்பவை உண்மையில் பன்றிகள் அல்ல. இது குழி முயல், எலி, சுண்டெலி போன்று ஒரு வகைக் கொறிக்கும் விலங்கே (rodent) ஆகும். கினிப்பன்றி 25 முதல் 36 செ.மீ. வரையான நீளமும் 0.5 கிலோகிராம் எடையும் கொண்டிருக்கும். இதன் தலை பெரிதாகவும், காதுகளும் கால்களும் சிறியனவாகம் அமைந்திருக்கும். இயற்கைச் சூழலில் வாழும் பெரும்பாலான கினிப்பன்றிகளின் மென்மயிர்த் தோல் (fur) நீண்டும், கரடு முரடாகவும், பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலும் இருக்கும்; ஆனால் விலங்கு இனப்பெருக்கத்தில் ஈடுபடுவோரால் இனப்பெருக்கம் செய்யப்படும் கினிப்பன்றிகளின் மென்மயிர்த்தோல் நீண்டோ அல்லது குட்டையாகவோ மற்றும் அவற்றின் நிறம் கருப்பு, பழுப்பு, சிகப்பு அல்லது வெண்மை நிறத்திலோ அமைந்திருக்கும். பெரும்பாலான காட்டுக் கினிப்பன்றிகள் 5 அல்லது 10 விலங்குகள் கொண்ட குழுக்களாக வாழும். இவை புல் சமவெளிகள், காடுகள், சதுப்பு நிலங்கள், பாறை நிலங்கள் போன்ற பகுதிகளில் வாழக்கூடியவை. மண் அல்லது பாறைகளில் வளை தோண்டி கினிப்பன்றிகள் பகல் பொழுதில் அங்கு இருக்கும்; அவ்வப்போது பிற விலங்கினங்கள் காலி செய்து விட்டுச் சென்ற வளைகளிலும் கூட இவை வாழும். இரவுப் பொழுதில்தான் இவை உணவு தேடி சுறுசுறுப்பாக ஓடியாடும். அச்சத்திற்கு ஆட்படும்போது கலவரமான சீழ்க்கை ஒலி போன்ற கீச்சொலி (squeal) எழுப்பித் தம் அச்சத்தை இவை வெளிப்படுத்தும்.

காபிபரா (capybara) என்னும் விலங்கு:

காபிபரா (capybara) எனப்படும் விலங்கு கினிப்பன்றியுடன் உறவு கொண்டது; கொறிக்கும் விலங்குகளில் இதுவே பெரியதாகும். இது நீரில் நன்கு நீந்தக்கூடியது; ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளில் வாழும் இவ்விலங்கு அபாயம் நேரும்போது நீரில் மூழ்கித் தன்னை ஒளித்துக்கொள்ளும்.

About The Author