இயற்கை உலகம் (12)

இயற்கைத் தெரிவு (natural selection) :

இயற்கைத் தெரிவு என்பது ஒரு செயல்முறை; இது "தகுதியுள்ளவை வாழும் (survival of the fittest)" எனவும் அறியப்படும். ஒரு விலங்கு அல்லது தாவரம் இனப்பெருக்கம் செய்யும் ஒவ்வொரு முறையும் அவற்றின் உயிரணுக்களில் (genes) மிக நுட்பமான மாற்றங்கள் ஏற்பட்டு, அவற்றின் வழித் தோன்றல்களிடம் (offsprings) அம்மாற்றம் பதிந்து விடுகிறது. சில நேரங்களில் இம்மாற்றங்கள் பெற்றோர்களை விட வழித்தோன்றல்களிடம் வெற்றிகரமாக அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக, நீண்ட கழுத்தையுடைய ஓர் இளைய ஒட்டகச்சிவிங்கி (giraffe) உயரமான மரங்களில் இலைகளை மேய்ந்து, தன் இனம் சார்ந்த பிற இயல்பான விலங்குகளைவிட மிகுதியான உணவைப் பெற முடிகிறது. இதன் விளைவாக இது வலிமையுள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் வளர்ந்து, நீண்ட கழுத்துக்கான உயிரணுக்களை தனது வழித்தோன்றல்களிடம் அது வெற்றிகரமாக செலுத்த முடிகிறது. இயற்கைத் தெரிவு எனும் இக்கோட்பாடு நெருங்கிய தொடர்புடைய தனிப்பட்ட உயிரினங்களிலும் கூட, அவைகளுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளின் அடிப்படையில் அமைகிறது. பெரும்பாலான உயிரினங்களின் இரு உயிர்களுக்கிடையே எல்லா விதத்திலும் ஒற்றுமை இருப்பதில்லை. அளவு, தோற்றம், சுற்றுச்சூழலைத் தாங்கிக் கொள்ளுதல் போன்றவற்றில் ஒவ்வொரு உயிரும் தனக்கேயுரிய தனித்தன்மையோடுதான் விளங்குகிறது.

சார்லஸ் டார்வின் மற்றும் ஆல்ஃப்ரெட் ஆர்.வாலஸ் என்னும் மற்றொரு பிரிட்டிஷ் இயற்கையியல் அறிஞர் ஆகியோர் 1858இல் இயற்கைத் தெரிவு பற்றி ஒரே விதமான கோட்பாடுகளை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர்ந்து (migrate) செல்லும் பாலூட்டி விலங்கினம் (mammals) :

வட அமெரிக்காவில் வாழும் ஒருவகைக் கலைமான்கள் (caribou) புலம் பெயர்ந்து செல்லும் பாலூட்டிகளாகும். இவ்விலங்குகள் மந்தையாக வாழ்பவை; கற்பாசி மற்றும் மரப்பாசியை (lichen) உணவாக உண்பவை. ஒவ்வோர் ஆண்டும் பனிக்காலத்தின்போது, அதாவது இவ்வுணவுகள் கிடைக்குமிடம் பனியால் மூடப்படும்போது, இவை வெப்பப் பகுதிக்கு தெற்கு நோக்கி உணவுக்காக இடம் பெயரும். பனி உருகத் தொடங்கும் போது மீண்டும் வடக்கு நோக்கி தம் இருப்பிடம் செல்லும்.

தரிசு நிலத்தில் (barren-ground) வாழும் கலைமான்கள் கோடைக் காலத்தை ஆர்க்டிக் பனிப்பாலை வனத்தில் கழிக்கும்; குளிர் காலத்தில் தெற்கு நோக்கி நகர்ந்து பசுமையான காடுகளில் வாழும். இவ்விலங்குகள் மேற்கு அலாஸ்காவிலிருந்து மேற்கு கிரீன்லாந்து வரை காணப்படுகின்றன. இவை மந்தையாக வாழ்வதோடு நாட்கணக்கில் நடந்து கொண்டே இருப்பவை. இவை இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதால் அதிகமான புல்லை மேய்வதில்லை. இவை கோடையில் பெரும்பாலும் பல செடிகளின் புல், தழை ஆகியவற்றை உண்பதோடு, குளிர் காலத்தில் முக்கியமாக பாசி உணவை உண்கின்றன.

About The Author