இயற்கை உலகம் (14)

பச்சோந்தி (chameleon) :

பச்சோந்தி ஒரு வகைப் பல்லி (lizard) இனத்தைச் சார்ந்ததாகும். இவ்வினத்தில் 85 வகை உயிரினங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவற்றுள் பெரும்பாலானவை ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் காடுகளில் வாழ்கின்றன.

பச்சோந்திகள் தம் நிறத்தை மாற்றிக்கொள்ளக் கூடிய திறன் வாய்ந்தவை; ஆனால் பல்லிகளுள் பலவகை உயிரினங்கள் இத்திறன் பெற்றுள்ளன. பச்சோந்தி பச்சை, மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் ஒரு நிமிடம் இருக்கும்; அடுத்த நிமிடம் அது பழுப்பு அல்லது கருமை நிறத்துக்கு மாறிவிடும். பச்சோந்திகள் தம் உடலில் சிறு புடைப்புகள், தழும்புகள் அல்லது கறைகளையும்கூடக் கொண்டிருக்கலாம். இவை தம் சுற்றுசூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்வதாகவே பலரும் கருதுகின்றனர்; ஆனால் உண்மையில் ஒளி அல்லது வெப்பநிலைக்கு ஏற்பவும் அல்லது சுற்றுச்சூழலில் உண்டாகும் அச்சவுணர்வு காராணமாகவுமே தம் நிறத்தைப் பச்சோந்திகள் மாற்றிக்கொள்வதாகக் கூறப்படுகிறது. பச்சோந்திகளின் தோற்றம் அல்லது நிறம் அவற்றின் உடலிலுள்ள ஹார்மோன்கள் எனப்படும் வேதிப்பொருட்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன; இவை அவற்றின் தோலிலுள்ள நிறமிகளைப் (pigments) பாதிப்பதால் மாற்றம் நிகழ்கிறது.

மரத்தில் வாழும் பச்சோந்திகளின் நாக்கு மிகவும் நீளமானது, ஒட்டும் தனமை கொண்டது; இதனால் தம் இரைகளை அவற்றால் எளிதாகப் பிடிக்க முடிகிறது. இவ்வுயிரினத்தின் நாக்கின் நீளம் அதன் மொத்த உடலின் நீளத்திற்கு இணையானதாக இருக்கும்; இந்நாக்கு தொண்டையிலுள்ள வலிமையான தசைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. மனிதரின் கண்களால் காண முடியாத அளவு விரைவாக பச்சோந்திகளால் நாக்கை வெளியே நீட்டி உள்ளே இழுத்துக்கொள்ள முடியும்.

எறும்புண்ணி (pangolin) :

ஆங்கிலத்தில் Pangolin, anteater மற்றும் armadillo என்ற சொற்களால் எறும்புண்ணிகள் அறியப்படுகின்றன. இவை தென் கிழக்கு ஆசியா, இந்தோனேசிய மற்றும் ஆப்பிரிக்க சகாரா பாலைவனத்தின் தென் பகுதி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. எறும்புண்ணி விலங்குக்குப் பற்கள் இல்லை; நீண்ட குறுகிய மூக்கும், நீளமான வால் பகுதியும், பிசுபிசுப்பான கயிறு போன்ற நீண்ட நாக்கும் இதற்கு உள்ளன. இந்நாக்குகளைக் கொண்டு எறும்பு முதலிய இரைகளை மிக எளிதாக இவை கவ்விக் கொள்ளும். எறும்புண்ணிகளுக்கு ஒன்றன்மீது ஒன்றாகப் படிந்திருக்கும் கொம்பு போன்ற செதில்கள் (horny scales) அமைந்திருக்கும். இச்செதில்கள் பழுப்பு நிறமானவை.

எறும்புண்ணிகள் நீளத்தில் 3 முதல் 5 அடி வரை இருக்கும். எல்லா எறும்புண்ணிகளின் முன்னங்கால்களிலும் நீண்ட வலிமையான நகங்கள் அமைந்து எறும்பு மற்றும் கரையான் (termites) கூடுகளைத் திறக்க வசதியாக விளங்குகின்றன. எறும்புண்ணிகள் தம் உடலைப் பந்து போல் சுருட்டிக்கொள்வதால் எதிரிகளால் இவற்றுக்கு தீங்கு உண்டாக்க முடிவதில்லை.

பறக்கும் அணில்கள் (squirrels) :

தெற்காசியாவில் வாழும் ஒருவகை அணில் உண்மையில் பறக்கக்கூடியதாகும். பறக்கும் அணிலின் முன்னங்கால்- களுக்கும் பின்னங்கால்களுக்கும் இடையேயுள்ள தோல் பகுதி மடிப்புகளைக் கொண்டிருக்கும்; இதனால் நீண்ட தூரத்திற்கு அணிலால் பறந்து (glide) செல்ல முடிகிறது. மிகப் பெரிய அளவிலான இராட்சத பறக்கும் அணிலுக்கு தனிச் சிறப்பு வாய்ந்த, அதன் மணிக்காட்டுகளிலிருந்து பின்னங்கால்கள் வரை படர்ந்த தடிமனான முடியுடைய பறக்கும் சவ்வு (membrane) அமைந்திருக்கும்; மேலும் வாலின் அடிப்பகுதியிலிருந்து பின்னங்கால்களுக்கு இடையே படர்ந்த தோல் மடிப்புகளும் இருக்கும். இச்சவ்வு தசை மடிப்புகளால் ஆனது; இவை இறுக்கமாகவும் தளர்ச்சியாகவும் மாறும் வகையில் கட்டுப்படுத்தப்படக் கூடியவை; இதனால் அணில் தான் விரும்பும் திசையில் செல்ல முடிகிறது. இச்சவ்வின் விளிம்பில் பெரியதோர் குதிமுள் (spur) அமைந்து அதற்கு ஆதரவாக விளங்கும். பறக்கும் அணில்கள் பகலில் உறங்கி இரவில் சுறுசுறுப்பாக ஓடியாடக் கூடியவை.

தரை வாழ் அணில் சிறிய வால் உடையது, உணவைக் கொறிக்கும் பழக்கம் கொண்டது, புல் வெளிகளில் ஓடியாடும் இயல்புடையது, முதுகில் கோடுகளைக் கொண்டது.

About The Author