இயற்கை உலகம் (22)

பறவைகளின் இடப்பெயர்ச்சி (migration) :

வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே பறவைகளின் இடப்பெயர்ச்சி மனிதர்களுக்கு வியப்பையே அளித்து வந்திருக்கிறது – இந்த இடப்பெயர்ச்சி குறித்து விவிலியமும் (the Bible) பேசுகிறது.

இருப்பினும், பல ஆயிரம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை, இதற்கான துல்லியமான, மிகச் சரியான விடை கிடைக்கவில்லை. பறவைகளின் இடப்பெயர்ச்சி என்பது, அவை இலையுதிர் காலத்தில் (autumn) தெற்குத் திசையிலும் இளவேனிற் காலத்தில் (spring) வடக்கு நோக்கியும் செல்வதைக் குறிப்பதோடு, தாழ்வான பகுதியிலிருந்து உயர்வான மேட்டுப் பகுதிக்குப் போவதையும், நாட்டின் உட்பகுதியிலிருந்து கடற்கரை நோக்கிச் செல்வதையும் கூடக் குறிக்கும்.

குளிர் காலத்தின் குளிரைத் தாங்கமுடியாத பறவைகள் வெப்பச் சூழலுக்குச் (warmer climates) செல்வதை நாம் அறிவோம். மேலும் அப்பறவைகளுக்கு உணவாகும் பூச்சிகள் அல்லது சின்னஞ்சிறு இரைகள் ஆகியன குளிர்காலத்தில் கிடைப்பதில்லை என்பதும் அவற்றின் இடப்பெயர்ச்சியை ஊக்குவிக்கிறது. காரணம் எதுவாக இருப்பினும், நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை எப்படிப் பறவைகள் அறிகின்றன? பகல் பொழுதின் குறைவு, பறவைகளுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்து, அவை தம் இடப்பெயர்வை மேற்கொள்ளவேண்டும் என்பதை உணர்வதாக நம்பப்படுகிறது.

எனவே பகற்பொழுதின் கால அளவும் உணவு கிடைக்காத நிலைமையும், வெப்பப்பகுதி நோக்கிப் பறவைகள் இடம் பெயரக் காரணமாக இருப்பதாக அறியப்படுகிறது. இவை தவிர்த்து மேலும் பல காரணங்கள் இருக்கக்கூடும்; இன்னும் பல காரணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஆயினும் பறவைகளின் இடப்பெயர்ச்சிக்கு மேற்கூறிய காரணங்கள் முக்கியமானவை என்பதில் ஐயமில்லை.

கரிபாவ் (caribou) என்னும் மானினம் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே ஒன்றிணைந்து வாழ்பவை. இருப்பினும் அவை உணவு தேடி இடம் பெயர வேண்டிய சூழ்நிலை வந்தவுடன், நூற்றுக் கணக்கில் ஒன்றிணைந்து இடம் பெயர்கின்றன.

பறவைகள் இடம் பெயரும் தூரம் :

பறவைகளின் இடப்பெயர்ச்சி பற்றி நாம் அறிவோம். அடுத்தது, தமக்குத் தேவையான சிறந்த சூழலை அல்லது நிலைமையைக் கண்டறிய பறவைகள் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதாகும்.

ஓர் ஆண்டில் 22,000 மைல்கள் வரை பறக்கக் கூடிய வடதுருவப் பகுதியில் உள்ள டெர்ன் பறவைகள் (arctic terns) மிக அதிக தூரம் பயணம் செய்யும் பறவை இனமாகும். இப்பறவைகள் வட துருவத்திலிருந்து தென் துருவப் பகுதிக்கு (the Antarctic region) இருபது வாரங்களில் நாளொன்றுக்கு 150 மைல் வேகத்தில் பறந்து செல்லக்கூடியவை ஆகும்.

பெரும்பாலான தரை வாழ் பறவைகள் தமது இடப்பெயர்வின் போது குறைந்த அளவே பயணம் செய்கின்றன. ஆனால் அமெரிக்க கோல்டன் ப்ளோவர் (American golden plover) என்னும் பறவை இனம், தங்கு தடையின்றி நீண்ட தூரம் பயணம் செய்யும்; இப்பறவை சுமார் 2400 மைல்கள் தடையின்றி பயணம் செய்யக்கூடியதாகும்.

ஒவ்வோராண்டும், இடப்பெயர்வின்போது பறவைகள் எப்போது பயணத்தைத் துவங்கி எப்போது முடிக்கின்றன என்பது பற்றி நம்மால் ஏதும் கூற இயலவில்லை.

About The Author