இயற்கை உலகம் (45)

மழைக் காடுகள் (rain forests) வெட்டப்பட்டு வருதல்:

வெப்ப மண்டல மழைக் காடுகள் பூமியின் பல் வேறு வகைப்பட்ட தாவரங்கள், மரம் செடி கொடிகள், உயிரினங்கள் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகின்றன. பிற விலங்குகளை உண்டு வாழும் உயிரினங்கள் (predators) முதற்கொண்டு பல்வேறு வகைப்பட்ட பறவைகளும் இக்காடுகளில் வாழ்ந்து வருகின்றன. இந்த உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்குத் தேவையான உணவும் பிற தேவைகளும் இங்கு உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களால் ஆண்டு முழுதும் அளிக்கப்படுகின்றன. ஆனால் இந்த இயற்கை வளங்கள் அனைத்தும் மனிதரின் பேராசையாலும் தன்னலத்தாலும் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டு வருவது வேதனைக்கு உரியது. மழைக் காடுகளில் ஏறக்குறைய 90% அழிக்கப்பட்டு விட்டதாக அல்லது அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பெரிய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் விளை நிலங்களின் விரிவாக்கம் போன்றவை இக்காடுகளின் அழிவிற்குக் காரணமாக அமைந்து விட்டன. அடுத்து கட்டடங்கள் கட்டவும், மரச் சாமான்களின் தேவைக்காகவும், தொழிற்கூடங்களின் வளர்ச்சிக்கும் இக்காட்டு மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

மழைக்காடுகளில் வாழ்ந்து வந்த ஏறக்குறைய 2 மில்லியன் வகையான தாவர இனங்களும் உயிரினங்களும் அறியப்படாமலேயே அழிந்து போனதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அழிவு நமது பூமிக் கோளுக்கு பெரும் அபாயமாக விளங்கி வருகிறது.

கடலடிப் பவழப் பாறைகள் (coral reefs) :

தரையிலுள்ள மழைக் காடுகளுக்கு இணையானவை கடல் நீரிலுள்ள பவழப் பாறைகள் ஆகும். இவை ஆயிரக்கணக்கான மீன் வகைகளுக்கும் மற்றும் முதுகெலும்பற்ற கடல் வாழ் உயிரினங்களுக்கும் (invertebrates) உறைவிடங்களாக விளங்கி வருகின்றன. இவ்வுயிரினங்கள் அனைத்தும் இப்பாறைகளின் சூழலில் மிகவும் சிக்கலான வாழ்க்கை முறையை நிலையாக மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றன எனலாம். ஆனால் இவையெல்லாம் மனிதரின் இடையீடு இல்லாதவரை மட்டுமே நடைபெறும்.

கடல் வாழ் உயிரியலாளர்கள் (marine biologists) கடலடிப் பாறைகள் பற்றி, நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை அளித்து வருகின்றனர்.

கடலடிப் பவழப் பாறைகளுக்கு இப்போது அபாயங்களும் உருவாகியுள்ளன. இவற்றைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். எனவே உலகம் முழுதும் மக்களுக்கு உரிய விழிப்புணர்ச்சியும் கல்வியும் அளித்துப் பவழப் பாறைகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

About The Author