நீங்கள் கடைசியாக எப்போது நடனமாடினீர்கள் ?

(கருத்து மூலம்: இணையம்)

தலைப்பைப் படித்தீர்களா?

வாராவாரம் ஆரவாரம் செய்கிற இளைஞர் கூட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால் "போன ஸண்டே செம குத்தாட்டம் போட்டோமில்ல மக்கா!" என்பீர்கள்.

வாழ்க்கை வட்டத்தில் சிக்கி எட்டு மணி நேர வேலை, குடும்பம் என்று அலைபவராக இருந்தால் "ரெண்டு அவர் ட்ராவல் பண்ணி வேலைக்குப் போய் வந்து குடும்பம், குழந்தை குட்டிகளை கவனிக்கறதுக்குள்ளே இங்க நட்டு கழண்டு போகுது. இதுல டான்ஸ்தான் கொறச்சல்" என்று நொந்து கொள்வீர்கள்.

இதே கேள்விக்கு ‘ஜெஃப்’ வேறு விதமாக பதில் சொல்லியிருப்பான். அதாவது உடனே ஒரு நடனமே ஆடியிருப்பான். ‘பக்கத்திலே யாருமே இல்லை’ என்கிற உணர்வோடு.

அது தான் ஜெஃப்.

ஜெஃப் ஒரு உணவக மேலாளர். அவனிடம் பணியாற்றுகிற பணியாளர்கள் எவருக்கேனும் ஏதாவது பிரச்சினை என்று வந்தால் அவனிடம்தான் வருவார்கள். அக்கறையோடு உருப்படியான ஆலோசனை தருவான். ஒவ்வொரு பிரச்சினையிலும் உள்ள நல்ல விஷயத்தைப் பார்க்கக் கற்றுத் தருவான். ஆச்சர்யம் தாளாமல் ஒருநாள் அவனைக் கேட்டே விட்டேன்.

"எப்படி ஜெஃப் எல்லாவற்றையும் சுலபமாக எடுத்துக் கொண்டு உன்னால் சந்தோஷமாக இருக்க முடிகிறது?"

ஜெஃப் சொன்னான், "ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழிக்கும் போது நம் முன்னே இரண்டு வாய்ப்புகள் உள்ளன. நல்ல மனநிலை அல்லது கெட்ட மனநிலை. நான் நல்ல மனநிலையைத் தேர்ந்தெடுக்கிறேன். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதில் நான் பலியாகி விடாமல் அந்தப் பிரச்சினையில் உள்ள நன்மையைப் பார்க்கிறேன். என்னிடம் பிரச்சினையோடு வருபவர்களுக்கும் இதையேக் கற்றுத் தருகிறேன்"

"ஆனால் அது அத்தனை சுலபமில்லையே?"

"இருக்கலாம்! ஒரு பிரச்னையில் உள்ள உருப்படியில்லாத விஷயங்களையெல்லாம் தள்ளி விட்டுப் பார்த்தால் அதில் இருக்கிற வாய்ப்புகள் தெளிவாகத் தெரியும். அந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து அதை அணுகுகிற விதத்தில்தான் வித்தியாசமே இருக்கிறது"

அன்று ரொம்ப நேரம் அவன் சொன்னதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு வாழ்க்கையின் கால ஓட்டத்தில் அவனை மறந்தே போனேன். ஆனால் அவன் சொல்லித் தந்த சந்தோஷ வாழ்வின் நுட்பத்தை மட்டும் மறக்காமல் என் வாழ்வில் உபயோகப்படுத்தி வந்தேன்.

சில வருடங்களுக்குப் பிறகு, நீங்களும் நானும் நம்பவே முடியாத ஒரு காரியத்தை ஜெஃப் செய்ததாகக் கேள்விப்பட்டபோது ‘ஏன்?’ என்ற கேள்விதான் என் மனதை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. அப்படி என்னதான் ஒரு உணவக மேலாளர் செய்யாததைச் செய்துவிட்டான் என்றுதானே கேட்கிறீர்கள்?

உணவகத்தின் பின் பக்கக் கதவை மூட மறந்து விட்டதால் மூன்று கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து விட்டார்கள். அவர்கள் முன்னால் பணப்பெட்டகத்தைத் திறக்க முயலும்போது ஒரு வித நடுக்கத்தில் ஜெஃப் ரகசிய சங்கேத எண்களில் தவறு செய்து விட, கொள்ளையர்களில் ஒருவன் சுட்டுவிட்டான். கொள்ளையர்கள் ஓடிவிட்டார்கள். சட்டென்று யாரோ கவனித்து ஓடி வந்து உடனே அவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள்.

18 மணி நேர அறுவை சிகிச்சை, சில வாரங்கள் மருத்துவமனை வாசம் எல்லாம் முடிந்து ஜெஃப் வீடு திரும்பியதைக் கேள்விப்பட்டு அவனைப் போய் சந்தித்தேன். சிகிச்சை முடிந்து வந்து விட்டாலும் இன்னும் துப்பாக்கி ரவையின் துகள்கள் அவன் உடலில் மிச்சமிருந்தன.

"ஜெஃப் அவர்களில் ஒருவன் உன்னை துப்பாக்கியால் சுட்ட போது உன் மனதில் என்ன நினைத்தாய்?"

"என் முன்னே இரண்டே வழிகள். வாழ்வா சாவா என்ற இரண்டில், நான் எப்படியாவது வாழ வேண்டும் என்றே நினைத்தேன்!"

"உனக்கு பயமாக இல்லையா?"

"எனக்கு முதலுதவி செய்தவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. ‘பயப்பட்டாதே, நீ பிழைத்துக் கொள்வாய்’ என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் ஆபரேஷன் தியேட்டரில் இருந்த டாக்டர்கள், நர்ஸ்களின் முகங்கள் என்னைப் பார்த்த பார்வை, ‘டேய்! நீ பூட்ட கேஸ்’ என்று சொல்லாமல் சொல்லியது கொஞ்சம் பயமாக இருந்தது. அவர்களை மாற்ற வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன்."

"சரி, அதற்கு என்ன செய்தாய்?"

"ஒரு குண்டு பம்ப்ளிமாஸ் நர்ஸ் சத்தமான குரலில் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள். உனக்கு ஏதாவது ‘அலர்ஜி’ இருக்கிறதா என்று கேட்ட போது ‘ஆமாம்’ என்றேன். அவ்வளவுதான்! டாக்டர்களும் நர்ஸ்களும் சட்டென்று எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு என்னையே பார்த்தார்கள்.

எனக்கு துப்பாக்கி தோட்டாக்கள்தான் அலர்ஜி என்றதும் சுற்றிலும் வெடிச் சிரிப்பு. உடனே அவர்களிடம், ‘நான் வாழ விரும்புகிறேன். அதனால் ஒரு உயிருள்ளவனுக்கு சிகிச்சை செய்வது போலவே செய்யுங்கள்’ என்று சொன்னேன்"

டாக்டர்களின் திறமையோடு அவனின் அணுகுமுறையும்தான் அவனை வாழ வைத்தது. அதனால்தான் சொல்கிறேன்.

வேலை செய்யுங்கள், உங்களுக்கு சம்பளமே தேவையில்லை என்பது போல.
அன்பு செய்யுங்கள், அது எப்போதுமே உங்களை காயப்படுத்தாது என்கிற உணர்வோடு.
நடனமாடுங்கள் பக்கத்திலே யாருமே இல்லை என்கிற நினைப்போடு!

About The Author

8 Comments

  1. latha

    மிக அருமை
    ஒவ்வொருவரும் இந்த மாதிரி இருப்பது கடினம் ஆனாலும் அப்படி இருந்து விட்டால் வாழ்க்கை என்பது எவ்வளவு அற்புதமானது என புரியும்.

    நன்றி.

  2. Rishi

    முத்து,
    விவரணை அருமை
    அதெல்லாம் சரி! நீங்க எப்போ கடைசியா நடனமாடினீங்க முத்து?
    நான் உங்கள் கட்டுரையைக் கண்டவுடன் ஆடினேன்!

  3. Rishi

    அந்த அம்மையார் பக்கத்து கட்டிடத்தில் இருந்து சற்றுமுன் விழுந்து எழுந்து வந்தவராக இருக்கும்! அப்போதானே அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள முடியும்!!!!!!!!!!!!

  4. indhumathi.t.v.

    இந்த கண்ணோட்டம் மட்டும் இருந்துவிடல் மரணம் கூட சுகமே

  5. indhumathi.t.v.

    இந்த கண்ணோட்டம் மட்டும் இருந்துவிடல் மரணம் கூட சுகமே

Comments are closed.