மகிழ்ச்சியான வாழ்வு – எங்கே கிடைக்கும் ?

அறிவியலின் அனைத்துப் பிரிவுகளிலும் புதிய பரிமாணங்கள் எட்டப்படுவது போலவே, மகிழ்வியலிலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. ‘மகிழ்வியல்’ என்பது ஏதோ புதிதாக விற்பனைக்கு வந்திருக்கிற வினோத ‘வஸ்து’ என்று பயந்து பின் வாங்கி விடாதீர்கள். மகிழ்ச்சி பற்றிய அறிவியல் என்பதையே சுருக்கமாக ‘மகிழ்வியல்’ என்கிறேன்.

நாம் எல்லோருமே மகிழ்ச்சி நிறைந்த வாழ்விற்குத்தான் ஆசைப்படுகிறோம். சரி. மகிழ்ச்சி என்றால் என்ன ?

1.நீங்கள் மரணப்படுக்கையில் இருக்கும்போது ஒரு சின்ன கணக்கு போடுவதாக வைத்துக் கொள்வோம். உங்கள் வாழ்வின் மொத்த சந்தோஷ நிமிடங்களின் கூட்டுத் தொகை, உங்கள் வாழ்வில் வருத்தமான நிமிடங்களின் கூட்டுத் தொகையை விட அதிகமாக இருந்தால் நீங்கள் மிக மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்ததாகக் கொள்ளலாம். (கூட்டிக் கழிச்சி பாருங்க, கணக்கு சரியா வரும்!).

2.”இந்தக் கணக்கெல்லாம் எனக்கு சரியாக வராது. மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் வாழ்ந்த திருப்தியான வாழ்வே போதும். அதுவே என் மகிழ்ச்சி” என்று சொல்பவர்களும் உண்டு.

சரி, மகிழ்ச்சியைப் பற்றிய புதிய ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கின்றன ?

மகிழ்ச்சி பற்றிய மதிப்பீடுகள் மனிதருக்கு மனிதர் வேறுபட்டாலும் மகிழ்ச்சியான வாழ்வு வேண்டும் என்று விரும்புகிற குறிக்கோள் அனைவருக்கும் பொதுவானதுதான்.

மனோதத்துவ நிபுணர்கள் சொல்வதென்ன? ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. முதலில் கெட்ட செய்தி. மகிழ்ச்சியான வாழ்வென்பது 50 சதவிகிதம் நமது கட்டுப்பாட்டில் இல்லை. போச்சுடா என்று அலுத்துக் கொள்ளுமுன் எப்படி என்று பார்ப்போம். நமது மற்ற பண்புகளைப் போலவே மகிழ்ச்சியான மனநிலை கூட மரபணு சார்ந்த விஷயம்தான். உங்கள் பெற்றோர் எவ்வளவு மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்தார்கள் என்று ஆராய்ந்து கொண்டிருப்பதை விட நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொண்டால் உங்கள் குழந்தைகளுக்கு அந்த பண்புகள் போய்ச் சேரும்.

சரி மீதமுள்ள 50 சதவிகிதம் பற்றி பார்ப்போம்.

இதைப் படிக்கிற நீங்கள் இந்த நொடி வாழ்க்கையின் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பது கூட உங்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு கொஞ்சம் பங்களிக்கலாம். அதாவது உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, நீங்கள் எவ்வளவு படித்திருக்கிறீர்கள், நீங்கள் வாழ்கிற நாடு சகல வசதிகளும் நிறைந்ததா, உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்கிற சுற்றுப்புற விஷயங்கள் உங்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு எந்த அளவிற்கு உதவி செய்யும்? ஆராய்ச்சியாளர்கள் ஷெல்டன் மற்றும் ல்யூபோமிர்ஸ்கி சொல்வது என்னவென்றால் இவையெல்லாம் ஒரு பத்து சதவிகிதம் உதவலாம். ஆனாலும் இவையும் நாம் நினைத்த உடன் மாற்றிக் கொள்ள முடியாத விஷயங்கள். அப்படி என்றால் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் நமது கட்டுப்பாட்டில் இல்லை.

பிறகு என்னதான் இருக்கிறது ?

தினசரி வாழ்க்கையில் நாம் ஈடுபடுகிற விஷயங்கள்தான் நமது மகிழ்ச்சியைத் தீர்மானிக்கின்றன.புதிய அனுபவங்கள் அதிக சந்தோஷத்தைக் கொடுக்கலாம். முதல் முதலாக விமானத்தில் இருந்து ‘பாராசூட்’டில் குதிக்கிறீர்கள். பாத்ரூம், பக்கெட் எல்லாம் துறந்து ஜிலீரென்று நீச்சல் குளத்தில் பாய்கிறீர்கள். நேற்று வரை டிசம்பர் மாத இசை விழாவினை வேடிக்கை பார்த்த நீங்கள் இன்று முதல் முறை வயலின் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறீர்கள். நேற்று வரை தூரத்தில் நின்று மையமாக புன்னகைத்துக் கொண்டிருந்த உங்கள் காதலி திடீரென்று அருகில் வந்து பட்டென்று கன்னத்தில் முதல் முத்தமிடுகிறாள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் முதல் முறை கிடைக்கிற சந்தோஷம் போகப் போக குறைகிறது. பொருளாதாரம் படித்தவர்கள் LAW OF DIMINISHING MARGINAL UTILITY என்று சொல்கிறார்களே – கிட்டத்தட்ட அது போல.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? வித்தியாசங்கள் உதவலாம். திரும்பத் திரும்ப அதே ஹோட்டல் போய் அதே உணவை சாப்பிடாதீர்கள். எதையுமே திரும்பத் திரும்ப அதே முறையில் செய்யும் போது சுவாரசியம் குறைந்து போகும்.

மரபணு சம்பந்தப்பட்டவரை நாம் எதுவும் செய்வதற்கில்லை. வெளி அம்சங்களை – அதாவது படிப்பு, வேலை இத்யாதி, இத்யாதி விஷயங்களையும் சட்டென மாற்றியமைக்க முடிவதில்லை. ஆக, நமது தினசரி நடவடிக்கைகள்தாம் நமது கட்டுப்பாட்டில் உள்ளவை. அப்படி என்றால் நீண்ட கால குறிக்கோள்களைக் கை விட்டு விட்டு அன்றாட மகிழ்ச்சிகளோடு திருப்தி அடைந்து விடலாமா என்று நீங்கள் கேட்கலாம். அப்படி அல்ல. நீண்ட கால குறிக்கோள்களைத் திட்டமிட்டபடி அடையும் போதுதான் தினசரி நடவடிக்கைகளை மகிழ்ச்சியாக்கிக் கொள்ள நேரமும் சுதந்திரமும் கிடைக்கும். உங்கள் தினசரி நடவடிக்கைகளில் ஒரே மாதிரி ‘செக்கு மாட்டுத்தனம்’ இல்லாமல் அடிக்கடி வித்தியாசமாக அணுகும்போது மகிழ்ச்சி என்றும் உங்களோடு நிலையாக இருக்கும்.

About The Author

5 Comments

  1. Mrs Mathu

    இந்த கட்டுரைப் பகுதி மிகவும்பயனுள்ள ஒன்று.

  2. T.P. Mohammed

    இது மிகவும் நல்ல கட்டுரை.பரட்டுக்கல்.

  3. so.njaanasambanthan

    சிறப்பான யோசனை சொன்னதற்குப் பாராட்டு .

Comments are closed.