வள்ளுவர் வகுத்த தலைமைப் பண்புகள்

யார் தலைவர்? யாது தலைமைப் பண்பு?

அமைச்சர் என்பவர் நாட்டை ஆளும் அரசருக்கு ஆலோசனை கூறி, நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும் வகையில் அவருடைய எண்ணங்களையும் திட்டங்களையும் செயல் படுத்தும் நிலையில் உள்ளவர். இன்றைய குழும உலகில் குழுமங்களின் செயலர்கள் அல்லது முதன்மைச் செயலர்கள் அல்லது தலைவர்கள், குழுமத்தின் உறுப்பினர்களுக்கும் அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பயன்தரத்தக்க வகையில் குழுமங்களின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டுக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து, அவற்றைச் செயல்படுத்தும் நிலையில் உள்ளனர். அவ்வாறு அவர்கள் செயலாற்றும் பொழுது அவர்களது செயல்கள் சிறப்பாக அமைந்திடவும், குழுமத்தின் நோக்கங்கள் எளிதில் நிறைவேறிடவும் பல்வேறு உத்திகளையும் நுட்பங்களையும் கடைபிடிக்க வேண்டியவராய் இருக்கின்றனர். அவ்வாறு அவர்கள் கடைபிடிக்க வேண்டிய நுட்பங்களும் உத்திகளும் அவர்கள் பெற்றிருக்க வேண்டிய தலைமை அல்லது மேலாண்மைப் பண்புகளெனப் போற்றப்படுகின்றன.

பொய்யாமொழிப் புலவர் வாழ்ந்த காலம் குழுமங்களில்லா மன்னர்கள் கோலோச்சும் காலமாக இருந்தபடியாலும், அம்மன்னர்களுக்கு ஆலோசனைகளைக் கூறி, கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பில் அமைச்சர்கள் இருந்தபடியாலும் அவ்வமைச்சர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளை அமைச்சு என்னும் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். அவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஒரு முதன்மைச் செயலர் (chief Executive) பெற்றிருக்க வேண்டிய பண்புகள் அல்லது குண நலன்கள் எனக் கொள்வோமேயானால் குழும ஆளுகை (Corporate Governance or Corporate management) கோலோச்சும் இக்காலகட்டத்திற்கும் அவை பொருந்துவதைக் காணலாம்.

மன்னர், வேந்தர், சான்றோன் எனப் பலவாறாலும் சுட்டப்பட்டு சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அத்துணையும் மேலாளர், செயல் அலுவலர் அல்லது தலைவர் என ஒரே நிலையில் வைத்துப் பொருள் கொள்ளப்பட்டுள்ளன. தற்காலத்தில் அரசு, குழுமம் ஆகியவற்றினை இயக்கிடுவோர், அரசருக்கு நிகராக அல்லது ஒரு தலைவர் என எடுத்துக்கொள்வது தவறாகாது. எனவே, தலைவர் அல்லது மேலாளர் அல்லது செயல் அலுவலர் எனப்பொருள் கொள்ளும் வகையில் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.

செயல்திறன் (Executive Skill)

ஓரு நல்ல மேலாண்மையின் பெருமை அது. மேற்கொள்ள வேண்டிய சீரிய செயல்களையும், அவற்றினைச் செய்யும் முறைகளையும், அவற்றிற்கான காலத்தினையும், கையாள வேண்டிய கருவிகளையும் (மனித, மற்றும் பொருள் வளங்கள்) ஆய்ந்து (தேர்ந்து திரட்டி) மேற்கொள்ளுதலில் அடங்கும். எனவே, ஒரு சிறந்த மேலாளர் இப்பண்புகளைப் பெற்றிருக்க வேண்டுமென்பது வள்ளுவர் வகுக்கும் நெறியாகும்.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு – 631

கருவி – வளங்கள் (மனித வளம் மற்றும் பொருள் வளம்)
காலம் – உரிய காலமும் சூழலும்
செய்கையும் – செய்யக்கூடிய செயல் குறித்த தெளிவு
செய்யும் அருவினை – செய்தலுக்கான நுட்பங்கள்
மாண்டது – பெருமையுடையது, மகிமையுடையது, பண்புகளைக் கொண்டது
அமைச்சு – தலைமைப் பண்பு

சமூக அக்கறையும் சிறந்த நூலறிவும் (Knowledge and Concern for the Society)

ஒரு சிறந்த மேலாளரின் பெருமை ஒரு செயலினை அல்லது திட்டத்தினை நிறைவேற்றும் பொழுது அது குறித்த திட மனமும், சமூகநல நோக்கும், செய்ய வேண்டுவது மற்றும் தவிர்க்க வேண்டியது பற்றிய தெளிவான சிந்தனைகளுடன் மேலாண்மைக் கூறுகளான தேவையான பொருள் வளம், உரிய மனித வளம், சரியான காலம், செய்யும் முறை, செய்யவேண்டிய செயல், (631ஆம் குறளில் கூறப்பட்ட குணநலன்கள்) ஆகிய அனைத்தினையும் கருத்தினில் கொண்டு செயல்படுவதில் அடங்கும்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு – 632

வன்கண் – மன உறுதி திட மனது
குடிகாத்தல் – சமூநலன் பேணுதல்
கற்றறிதல் – செய்யத்தக்கன, செய்யத்தகாதன குறித்த கல்வியறிவு
ஆள்வினையோடைந்து – ஆள்வினைக்குத் தேவையானவை எனக் கருதப்படும் ஐந்து குணநலன்கள் (தேவையான பொருள் வளம், உரிய மனித வளம், சரியான காலம், செய்யும் முறை செய்ய வேண்டிய செயல்

செயலாக்கும் முறைகள் (Procedure for or method of execution)

செய்தற்குரிய செயலினை அவற்றின் தன்மை கருதிப் பல கூறுகளாகப் பிரித்தலும் (Job analysis), அவ்வாறு பிரிக்கப்பட்ட வினைகளை அவற்றின் ஒத்த தன்மை அடிப்படையில் ஒரு துறையின் கீழ்க் கொண்டு வந்து (Departmentation) வளப்படுத்துதலும் பின்னர் அப்பணியினைச் சிறப்பாய் முடித்தல் கருதி அத்துறைகள் நிறைவேற்றிய வினைகளை ஒருங்கிணைத்து (Co-ordination) முழுமையான பணியாகச் செய்து முடித்தலே திறமையான மேலாண்மையாகும்.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு – 633

பிரித்தல் – நிறைவேற்றத் தக்க வகையில் ஒரு பணியினைப் பல் பல கூறுகளாகப் பிரித்தல்
பேணிக்கொளல் – அவ்வினைகளை வளப்படுத்தித் தொகுத்து (Grouping) துறைவாறாக ஒதுக்குதல்
பிரித்தார் பொருத்தல் – பல துறைகளும் செய்தனவற்றை (செயல்களை) ஒருங்கிணைத்தல்
வல்லது – வலிமை அல்லது திறமை பெற்றது

முடிவெடுத்தலும் ஒத்த கருத்தினை உருவாக்குதலும் (Decision making and Group consensus)

ஒரு செயலினை நிறைவேற்றும் பொழுது பல்வேறு மாற்று முறைகளை ஆய்ந்து, அவற்றுள் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து, அதனை முடித்தற்கு உறுப்பினர்களிடையே ஒருமித்த ஆற்றல் தோன்றும் வண்ணம் கற்பித்து, விளக்கி, செயலினில் இறக்குவது ஒரு சிறந்த மேலாளரின் பண்பாகும்.

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு – 634

தெரிதல் – ஒரு வினையினை மேற்கொள்ளுதற்கான பல்வேறு மாற்று வழிகளை ஆய்வு செயதல்
தேர்ந்து – அவற்றுள் சிறந்த அல்லது உகந்த ஒன்றினை தேர்ந்தெடுத்து
செயலும் – முடிவு செய்தலும்
ஒருதலையாச் சொல்லலும் – ஒத்த கருத்து ஏற்படுத்தும் வண்ணம் விளக்கிச் சொல்லி ஏற்கச் செய்தலும்
வல்லது – திறமை பெற்றது

தகுதியானவரைத் துணையாகக் கொளல் (Selection of aides)

ஒரு மேலாண்மைக்கு, ஒரு திட்டத்தினை நிறைவேற்றத் துணை நிற்பவராய் தேர்ந்தெடுக்கப்படுபவர் வினை நுணுக்கங்களையும், செய்தற்குரிய விதிமுறைகளையும் (நியாய தருமங்களை) நன்கு அறிந்தவராயும், அவற்றின் பொருளினை (சக பணியாளர்களின் ஒத்துழைப்பினைப் பெறல் வேண்டி) சரியாக எடுத்தியம்ப வல்லவனாயும், எச்சூழலையும் (தோன்றக்கூடிய எதிர்ப்புகளை சமாளிக்கும்) எதிர்கொள்ளும் திறமை வாய்ந்தவராயும் இருத்தல் வேண்டும்.

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை -635

அறனறிந்து – செயலினை நிறைவேற்றுதற்கான நேர்மையான செயல் முறைகளை அறிந்து
ஆன்றமைந்த – பெருமை பொருந்திய
சொல்லான் – திறமையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லும் திறமை பெற்றவன்
எஞ்ஞான்றும் – (ஏற்றல், இகழ்தல், எதிர்த்தல் ஆகிய) எக்கால கட்டத்திலும்
திறனறிந்தான் – தத்துவங்களை அறிந்தவன் (knowledged about principles)
தேர்ச்சி – பணிக்குத் தேர்ந்தெடுத்தல்
துணை – துணையாக நிற்பவர்

ஓரு பணி அல்லது செயலை நிறைவேற்றுதற்கு அன்பு, அறிவு தெளிந்த சிந்தனை, சுய விருப்பமின்மை ஆகிய நான்கு குணாதிசயங்களையும் பெற்றிருக்கக் கூடியவரைத் தேர்வு செய்தல் சிறப்புடையதாகும்.

அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு
நன்குடையான் கட்டே தெளிவு – 513

தேற்றம் – தெளிந்த சிந்தனை
அவாவின்மை – ஆசைகொள்ளாதிருத்தல் சுயவிருப்பமின்மை
தெளிவு – தேர்ச்சி செய்தல்
நான்குடையான் கட்டே – நான்கு குண நலன்களையும் பெற்றிருப்பவரையே

பாகுபாடின்றி (பேதம் காட்டாது) செயலாற்றல் (Unbiased behaviour)

ஓரு செயலினைப் போதிய தெளிவுடன் வினையாற்றும் எந்த நபர் மீதம் பேதம் காட்டாது சரியான வழிகாட்டலுடன் சரியான நபரை ஆய்ந்து தேர்ந்து ஒப்படைத்தலே உரிய முறையாகும்.

ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை. – 541

ஓர்ந்து – ஆய்ந்து
கண்ணோடாது – பேதம் காட்டாது
இறைபுரிந்து – சரியான வழி காட்டலுடன்
யார்மாட்டும் – எவர்பாலும்
தேர்ந்து – உரிய நபரைத் தேர்ந்து, தெரிவு செய்து

ஒரு தலைவனுக்கு அவன் அப்பொறுப்பிலிருக்கும் காலம் முழுமையும் ஏற்றத் தாழ்விலா சீரான நிலைப்பாட்டினை அளிக்க வல்லதான, மனத்தளவிலும் கூட யார் எப்பக்கமும் சாயாதிருக்கும் பண்பு சிறந்த அணிகலனாகக் கருதப்படும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி 115

கேடு – தாழ்ச்சியுறல்
பெருக்கம் – மேன்மையடைதல்
நெஞ்சத்துக் கோடாமை – மனத்தளவிலும் வளையாமை
சான்றோர் – சிறந்த நிலையில் இருப்போர் தலைமை பொறுப்பிலிருப்போர்
அணி – அணிகலனாகும்

நடுநிலை தவறாமை, நிதானந்தவறாதிருத்தல் (Balanced)

ஒரு வினையின் சாதக பாதகங்களாகிய இரு பக்கத்தினையும் சீர்தூக்கிப் பார்த்து ஒரு துலாக்கோல் போன்று எப்பக்கமும் சாயாது நடுநிலையாயிருத்தல் ஒரு தலைவனுக்கு (அணிகலனாகும்) உரிய பண்பாகும்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. 118

சமன் செய்து – சமப்படுத்தி, சமநிலை காட்டி
சீர்தூக்கும் – சீரான அளவினை நிலைப்படுத்தும்
கோல் போல் – துலாக்கோல் தராசு போல்

ஓழுக்கந் தவறாமை (Discipline)

ஓழுக்கந்தவறுதலின் கேடுகளை (அது எந்த அளவுக்கு கீழான நிலைக்குத் தள்ளிவிடும் என்பதனை) நன்கறிந்த காரணத்தால் ஒழுக்கத்தினைக் கடைபிடித்தலில் (ஒழுக்கத்தினின்று விலகிச் செல்லாத) திடமான மனத்தினைக் கொண்டவராயிருப்பர்.

ஓழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து 136

உயரிய குறிக்கோள்களைக் கொண்டிருத்தல் (Achievement Orientation)

ஒரு (நிறுவனத்தின்) உயரிய குறிக்கோளினை அடைதற்கெனப் பாடுபடும் (நிறுவன) உறுப்பினர்கள் (குடிமக்கள்) அந்நிறுவனத் தலைவனின் செவ்விய செயல்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படுவர்.

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி – 542

வான் – (வானத்தைப்போன்று) உயரிய குறிக்கோள்கள்
நோக்கி – அடைந்திடும் நோக்கத்துடன்
வாழும் – செயல்பட்டுவரும்
உலகெல்லாம் – மக்கள் எல்லோரும் (உறுப்பினர்கள் அனைவரும்)
மன்னவன் – தவைனின்
கோல் நோக்கி – செம்மையான செயல்பாடுகளைச் சார்ந்து
வாழும் குடி – செயல்படக் கூடிய மக்களாவர்

தலைவருள் ஒளிவிளக்கு முன்மாதிரி (Role Model)

கொடைத்தன்மை (கருணை நோக்கு), மக்களைக் கனிவோடு நோக்கிடும் பண்பு, பணியாளர் நலன் பாராட்டும் பாங்கு, செம்மையான செயல்பாடு ஆகிய குணநலனன்கள் தலைமைப் பண்பிற்கு ஒளிவிளக்காகக் கருதப்படும் பண்புகளாகும்.

கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி – 390

கொடை அளி – மிகுதியான கருணையும்
செங்கோல் – செம்மையான ஆளுமை
குடி ஓம்பல் – மக்கள் பணியாளர்கள் நலன் காத்தல்

வினையினை ஏற்பதற்குத் தகுதிப் படுத்திக்கொளல் (Equipping)

ஒருவர் தலைமைப் பண்பினை ஏற்றற்கு அல்லது பணியினை மேற்கொள்ளுதற்கு முன்னதாகப் பெற்றிருக்க வேண்டிய குணநலன்கள் அல்லது தகுதியாவது செறிந்த அறிவு, சிறந்த கல்வி, உகந்த தோற்றப்பொலிவு ஆகியனவற்றை நிரம்பப் பெற்றிருத்தலாகும்.

ஆறிவுரு வாராய்ந்த கல்வி இம்மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு – 684

அறிவு – கல்வி அறிவு
உரு – தோற்றப்பொலிவு (personality)
ஆராய்ந்து – தேடல் ஆர்வம்
செறிவுடையான் – நிரம்பப்பெற்றவன்

உறுதியான உடனடிச் செயல்பாடு (Firm and Immediate action)

முடிவு செய்து செய்யவிருக்கும் ஒரு பணியினை மேற்கொள்ளும் போது திடமனதுடனும் சோம்பல் கொள்ளாது காலதாமதமின்றி உடனடியாகச் செய்திடல் வேண்டும்

கலங்காது கண்டவினைக்கட் டுளங்காது
தூக்கம் கடிந்து செயல் – 668

கலங்காது – கலக்கமில்லாது
கண்டவினை – தீர்மானிக்கப்பட்ட செயல்
துளங்காது – சோம்பலின்றி
தூக்கம் கடிந்து – கால தாமதத்தைத் தவிர்த்து விரைந்து

ஆகவே செயலாற்றும் திறன் (executive skill) சமூக அக்கறை (concern for the society), சிறந்த நூலறிவு (sound knowledge), செயல்முறை பற்றிய ஞானம் (Knowledge about procedures), முடிவெடுக்கும் திறன் (decision making skill), ஒத்த கருத்தினை உருவாக்கும் பண்பு (ability to create consensus), தகுதியுடையோரை துணை கொள்ளும் (selecting eligible trust worthy people as aides) பண்பு, பேதம் காட்டாது செயலாற்றல் (unbiased / Balanced behaviour), நடுநிலை தவறாமை (Judgment), ஒழுக்கந்தவறாமை (Discipline), உயரிய குறிக்கோலினை கொண்டிருத்தலும் (Achievement orientation) அதை அடைய பயணித்தலும் (striving to achieve the goal), தொண்டர்களுக்கு முன்மாதிரியாய் (Role model) இருத்தல் மற்றும் உறுதியான உடனடி செயல்பாடு (Firm and immediate action) ஆகிய நற்பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வலியுறுத்தும் தலைமைப் பண்புகளாகும்.

About The Author

3 Comments

  1. s.thirugnanasambantham

    தன்க் யொஉ fஒர் யொஉர் சுப்ப்லெமென்ட்

  2. Viji

    கட்டுரை மிகவும் அருமயாக அமைந்து இருந்தது. திருக்குறளின் மூலமான எடுத்துக்காட்டுக்கள் மிகவும் பயனுடையதாக இருந்தது.

Comments are closed.