உடல்வலிகளைத் தீர்க்கும் காட்டுப்பரூர் ஆதிகேசவப்பெருமாள்

முன்னர் அடிக்கடி இடுப்பு வலி வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். விருத்தாசலத்திலிருந்து என் பழைய தோழி என்னைப் பார்க்க ஒருநாள் வந்திருந்தாள். அவள் என் நிலைமையைப் பார்த்தவுடன் வலிகளை நீக்கும் ஆதிகேசவப் பெருமாள் கோயிலைப் பற்றியும் அங்கு செய்யும் பிரார்த்தனை பற்றியும் சொன்னாள்.

இந்தக் கோயில் இருக்கும் இடத்தின் பெயர் காட்டுப்பரூர். விருத்தாசலம் செல்லும் வழியில் மேற்கு திசையில் இது அமைந்திருக்கிறது. பெரிய ராஜகோபுரம் நம்மை வரவேற்க, இதைக் கடந்தோமானால் பலிபீடம், துவஜஸ்தம்பம் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் அருகில் கருடாழ்வார் அமர்ந்து தரிசனம் தருகிறார். பின் பிள்ளையாரையும் காணலாம். வைணவஸ்தலம் என்பதால் பிள்ளையாரைத் தும்பிக்கை ஆழ்வார் என அழைக்கின்றனர்.

மண்டபத்தில் இருக்கும் பெரிய கல் தூண்களில் தசாவதாரங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன. துவாரபாலகர்களான ஜெயன் மற்றும் விஜயன் இருவரும் கம்பீரத் தோற்றத்தில் நிற்பதைக் காணலாம்.

கர்ப்பகிரஹத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் உற்சவ மூர்த்தியாய் காட்சி அளிக்கிறார். அடுத்த சன்னிதியில் ராதா ருக்மிணியுடன் வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணன் மற்றும் திருமங்கையாழ்வார் முதலியோரைத் தரிசிக்க முடிகிறது.

பின், பிரதான மூலஸ்தானத்தில் ஸ்ரீஆதிகேசவப்பெருமாளைக் காண்கின்றோம். அழகான தொங்கு விளக்கில் நெய் தீபம் ஒளியில் புன்னகை முகத்துடன் அருள்புரிகின்றார்.

இங்குள்ள ஸ்ரீவேதவல்லி நாச்சியர் சன்னிதிக்குச் சென்று வேண்டிக் கொண்டால் திருமணத் தடை விலகி, திருமணம் நடந்தேறி விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினை இக்கோயில் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று இந்த இடத்தில் ஒரு விவசாயி ஏர் உழுதுகொண்டிருக்க கலப்பை ஓரிடத்தில் சிக்கியது. சிக்கிய இடத்தில் இருந்து இரத்தம் கசிய, பயந்துபோன விவசாயி ஓடிச்சென்று ஊர் மக்களைக் கூட்டினான். அவர்கள் அந்த மண்ணை கைகளால் துழாவிப் பார்க்க, அங்கு அழகிய பெருமாள் விக்கிரகம் ஒன்று இருந்தது. திடீரென ஒருவருக்கு அருள் வந்து, "இந்த சென்னகேசவப்பெருமாள் இங்கே அமர்ந்து அருள் புரியப்போகிறார்" என்றார். ஞாயிறன்று கிடைத்ததினால் பெருமாளுக்கு ‘ஆதிகேசவப்பெருமாள்’ என்ற பெயர் கிடைத்தது.

பெருமாள் பக்தர் ஒருவர் வயிற்றுவலியால் துடித்துக்கொண்டிருந்தார். இந்தப் பெருமாள் கோயிலுக்கு வந்து தன் வலி போக வேண்டிக்கொண்டார். தினமும் வருவதும் வேண்டுவதும் தொடர்ந்து கொண்டிருந்தாலும், வயிற்றுவலி என்னவோ தீர்ந்தபாடில்லை.

அவருக்கு பெருமாள் மேல் கோபம் வந்தது. "ஹே! தீனரட்சகா. என் மேல் உனக்கு என்ன கோபம்? உன் பாதங்களை தரிசித்தும் உனக்கு என் மேல் கருணை வரவில்லையா? என் நாக்கை அறுத்துக்கொண்டு உனக்கு சமர்ப்பிக்கிறேன்" என்று சொல்லியபடி தன் நாக்கை அறுத்து ஒரு வெற்றிலை மீது வைத்தார்.

கோயில் பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி வந்த அவர், தான் துண்டித்து வைத்த நாக்கை பலிபீடத்தில் காணாததைக் கண்ணுற்றார். அப்போது அவர் வயிற்று வலி காணாமல் போயிருந்தது. வாயில் துண்டித்த நாக்கும் வளர்ந்து பழைய நாக்குப்போல் ஆனது.

அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிய "நாராயணா.. மாதவா.. கேசவா.. கோவிந்தா.. உன் கருணையே கருணை! உன்னைப்போய் கோபித்துக்கொண்டேனே!" என்று வருந்தி அவர் பாதங்களில் அப்படியே சாய்ந்தார்.

இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்த பின்னர் இந்தக் கோயிலில் நோய்நொடிகளைப் போக்கிக் கொள்ள பக்தர்கள் கூட்டம் எப்போதும் இருக்கிறது. பெருமாளின் பிரசாதமான நெய்யும் துளசியும் அருமருந்தாகத் திகழ்கின்றன.

About The Author