கேரளக்கோவில்கள் – ஒரு புனிதப் பயணம்

பொதுவாக, கேரளா என்றால் நம் மனதுக்குத் தோன்றுவது குருவாயூர், பத்பநாபஸ்வாமி, சபரிமலை போன்ற பெரிய கோவில்கள்தான். ஆகையால், இம்முறை கோழிக்கோடு, கண்ணனூர், திருச்சூர் ஆகிய நகரங்களில் உள்ள கோவில்களை தரிசிப்பதாகத் தீர்மானித்துப் புறப்பட்டோம்.

கிளம்பிய அடுத்த நாள் காலை கோழிக்கோடு போய்ச் சேர்ந்து முதலில் தளி என்ற இடத்திலுள்ள புராதனமான சிவன் கோவிலை தரிசித்தோம். சாமுத்ரிகள் (zamorins) என்ற பழைய ஹிந்து மன்னர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் பழமையான Mural சிற்பங்கள் பிரசித்தம். சிவன் கோவிலானாலும் நாராயணனுக்கும் ஒரு சன்னதி உள்ளது. அதன்பின் இக்கோவிலுக்கு நேர் எதிரே உள்ள மஹாகணபதி பாலசுப்ரமணியம் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டோம். இதுவும் zamorinகளால் கட்டப்பட்ட புராதன கோவிலாகும். கோழிக்கோட்டிலுள்ள மற்ற பிரபல கோவில்களான ராமஸ்வாமி கோவில் மற்றும் அழக்கொடி பகவதி ஆலயத்தையும் கண்டு மகிழ்ந்தோம்.

அன்று மாலை கண்ணனூருக்கு சென்று இரவு தங்கினோம். அடுத்த நாள் கண்ணனூர், தலிப்பரம்பா, தலசேரி ஆகிய இடங்களில் உள்ள பிரபல கோவில்களை தரிசித்தோம். தலிப்பரம்பாவை அடுத்து உள்ள திருச்சாம்பரம் கிருஷ்ணன் கோவில், தலிப்பரம்பா வைத்யநாதர் ஆலயம், கண்ணனூர் சிவன் கோவில் ஆகிய மூன்றையும் ஒரே நாளில் தரிசிக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. இம்மூன்றும் சேர்ந்து TTK ஆலயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

முதலில் நாங்கள் பார்த்தது திருச்சாம்பரம் ஆலயம். மஹரிஷி சாம்பராவின் நினைவாக இக்கோவில் அமைந்ததாகக் கூறுகிறார்கள். கர்பக்ரஹத்தில் உள்ள சிற்பங்களும், கோவிலில் உள்ள கண்ணைக் கவரும் mural ஓவியங்களும் புகழ் வாய்ந்தவை. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 6 முதல் 20 வரை நடைபெறும் திருவிழாவில் கிருஷ்ணன், பலராமன் பங்கு பெறும் திடம்பு நாட்டியம் பிரசித்தம்.

அதைத் தொடர்ந்து தலிப்பரம்பாவிலுள்ள வைத்யநாதர் கோவிலுக்குச் சென்றோம். இங்குள்ள சிவன் நமது வைத்தீஸ்வரன் கோவில் ஈஸ்வரனைப் போல தேவ வைத்தியர் என்று போற்றப்படுகிறார். இங்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்திற்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

அதன் பிறகு கண்டது தலிப்பரம்பாவிலுள்ள ராஜராஜேஸ்வரா கோவிலாகும். கேரளாவில் உள்ள 108 சிவஸ்தலங்களில் இது ஒன்றாகும். பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழமையான இந்தக் கோவில் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரால் புதுப்பிக்கப்பட்டதாக சரித்திரங்கள் கூறுகின்றன. பகல் நேரத்தில் இக்கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜைக்குப் பிறகு பார்வதி தேவி சிவபெருமானை வந்து சேருவதாகவும் அப்போது சிவபெருமான் மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் அதன் பிறகே பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் சிவராத்திரி தினத்தன்று மட்டும் நாள் முழுவதும் பெண்களுக்கு அனுமதி உண்டு. வாசுதேவர் கோவிலும் சிவபெருமானின் முக்கிய lieutenant பூத நாதர் கோவிலும் இதன் அருகிலே உள்ளன.

அங்கிருந்து கண்ணனூர் அருகில் உள்ள சிரக்கல் கிருஷ்ணர் கோவிலை தரிசித்தோம். இரு கரங்களிலும் வாழைப்பழங்களை வைத்துக்கொண்டு நின்ற கோலத்தில் காணப்படுகிறார் இந்த கிருஷ்ணர்.

அன்று மாலை தலசேரியில் உள்ள ஜகன்னாதர் ஆலயத்திற்குச் சென்றோம். பெயரைக் கேட்டால் விஷ்ணு ஆலயம் போல் தோன்றினாலும் உண்மையில் இது சிவன் கோவில் ஆகும். தலசேரியில் திருவெண்காடு என்ற இடத்தில் உள்ள ராமஸ்வாமி கோவிலுடன் எங்கள் தலசேரிப் பயணம் முடிவுற்றது. அதே compoundல் கிழக்கோட்டு சிவன், வடக்கோட்டு சிவன் என்ற இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன. அன்று இரவு கோழிக்கோடு சென்று தங்கினோம்.

மறுநாள் காலை கோழிக்கோட்டிலிருந்து புறப்பட்டு கடம்புழா பகவதி கோவிலை அடைந்தோம். இது மலப்புரம் ஜில்லாவில் உள்ள புகழ் பெற்ற யாத்திரை ஸ்தலமாகும். இங்குள்ள துர்க்கை அம்மன் விக்ரஹம் கண்ணையும் மனதையும் ஈர்க்கும் வண்ணம் பிரகாசமானது. இக்கோவில் இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்குப் பெயர் பெற்றது. ஒன்று, தினசரி காலை அம்மனின் திரு உருவம் முழுவதையும் புதிதாகப் பறித்த பூக்களால் மூடும் பூமூடல். மற்றொன்று, முட்டறுக்கல் எனப்படும் தேங்காய் உடைக்கும் பிரார்த்தனை. பக்தர்கள் தங்கள் மனக்கவலைகளும் சஞ்சலங்களும் தீர வேண்டும் என வேண்டி அங்குள்ள பூசாரியிடம் தேங்காய் கொடுத்து உடைக்கச் சொல்கிறார்கள். தேங்காய் இரண்டு சமபாதியாய் உடைந்தால் அவர்கள் குறை தீரும் என்பது நம்பிக்கை. ஆதி சங்கரர் இவ்வழியாக பாத யாத்திரை செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நடக்க முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க அதுதான் பார்வதி தேவியும் சிவபெருமானும் சந்தித்த இடம் என்று உணர்ந்தாராம். அதே இடத்தில் தேவியின் திரு உருவத்தை ஸ்தாபித்து முதல் பூஜை நடத்தியதாக ஐதீகம்.

அங்கிருந்து மலப்புரம் ஜில்லா திரூரை அடுத்துள்ள ஹனுமான்காவு என்ற கோவிலுக்குச் சென்றோம். சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரால் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஹனுமான் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள ஹனுமான் ஒரு புறம் முகம் திருப்பி இரு கரம் கூப்பி ராமர் கூறும் எதையோ கூர்ந்து கேட்பதுபோல் காட்சி அளிக்கிறார்.

அங்கிருந்து மஹாவிஷ்ணுவின் 108 திவ்யதேசங்களில் ஒன்றான பாரதப்புழா நதிக்கரையிலுள்ள திருநாவாய் என்ற ஸ்தலத்திற்குச் சென்றோம். நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும்
இப்பெருமாளைப் பற்றி 108 பாசுரங்கள் பாடியுள்ளார்கள். மலப்புரம் ஜில்லாவில் குட்டிபுரம் ரயில் நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது இந்த ஸ்தலம். லக்ஷ்மி தேவியும், கஜேந்திரனும் அருகில் உள்ள ஏரியிலிருந்து தாமரைப் பூக்களை எடுத்து இறைவனை பூஜை செய்ததாகவும், ஏரியில் உள்ள பூக்கள் வேகமாகக் குறைய ஆரம்பிக்கவே கஜேந்திரனின் பிரார்த்தனையை ஏற்று பகவான் லக்ஷ்மியை தன்னோடு சேர்த்துக்கொண்டு கஜேந்திரன் பூஜையை ஏற்றுக்கொண்டதாகவும் ஸ்தல புராணங்கள் கூறுகின்றன.

இந்த ஆலயத்தைப் பற்றி மற்றொரு நம்பிக்கையும் உண்டு. பண்டைய காலத்தில் 9 திரு உருவங்கள் நவரிஷிகள் எனப்படும் 9 ரிஷிகளால் நிறுவப்பட்டன. ஆனால், அவற்றில் 8 நிறுவிய உடனேயே மறைந்து விட்டன. ஒன்பதாவதான நாவாய் முகுந்தனின் வடிவம் முழங்கால் வரை மறைந்த உடனேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் இக்கடவுளை முழங்காலுக்கு மேலேயே பார்க்க முடியும். மற்ற பாகங்கள் தரைக்குக் கீழே இருப்பதாக ஐதீகம்.

அங்கிருந்து குருவாயூரிலுள்ள புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்றோம். அன்று இரவும் மறுநாள் காலையும் அங்கேயே தங்கி மனமாற பலமுறை தரிசனம் செய்தோம். கேரளக் கோயில்களில் தவறாமல் நடைபெறும் சீவேலியைக் கண்டு களித்தோம். இதில் உத்சவ மூர்த்தியை கேரளத்து செண்ட வாத்யம், நாதஸ்வரம் முதலியன முழங்க க்ஷோடசோபசாரங்களுடன் பிரஹாரத்தைச் சுற்றி 5 முறை அலங்கரிக்கப்பட்ட யானைகளில் அழைத்துச் செல்கிறார்கள். கடைசிச் சுற்று முடிந்தவுடன் நீலாம்பரி ராகம் பாடி ஆண்டவனை பள்ளியறையில் உறங்க வைக்கிறார்கள்.

இக்கோவிலின் முக்கிய தெய்வமான குருவாயூரப்பன் நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஏந்தி மனதைக் கொள்ளை கொள்கிறார். கிருஷ்ண அவதாரத்தில் வசுதேவருக்கும் தேவகிக்கும் காட்சி அளித்த அதே கோலம் என்பது ஐதீகம். இங்கு நடைபெறும் பூஜாவிதிகள் ஆதி சங்கரரால் வகுத்துக் கொடுக்கப்பட்டவை. மிகவும் துல்லியமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

1970 நவம்பர் 30ஆம் தேதி ஐந்து மணி நேரம் நீடித்த ஒரு பெருநெருப்பு இக்கோவிலை முழுமையாக எரித்தது. ஆனால் அற்புதமாக கிருஷ்ணன் விக்ரஹம், கர்பக்ரஹம், கணபதி, ஐயப்பன், பகவதி சன்னதிகள் ஆகிய ஐந்தும் பாதிக்கப்படவில்லை. பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 1973 விஷு தினத்தில் வழிபாடு தொடங்கியது.

(மீதி அடுத்த இதழில்)

About The Author