சாக்கிய நாயனார் வழிபட்ட வீரட்டானேஸ்வரர்

ஸ்ரீ வீரட்டானேஸ்வரரைப் பற்றித் தெரிய வேண்டுமென்றால், முதலில் சாக்கிய நாயனாரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

நாம் எல்லோரும் கோயிலில் அர்ச்சனை செய்வதற்குப் பூக்கள் கொண்டு செல்வது வழக்கம். ஆனால் சாக்கிய நாயனாரோ சிவனுக்கு அர்ச்சனை செய்யக் கற்களைத் தேடினார். இது என்ன அபசாரம்! கற்களை வீசி எறிந்தா பூஜை செய்வது? அதைச் சிவன் ஏற்றுக்கொண்டாரா? இது மகா பாபம் அல்லவா? இப்படியெல்லாம் மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன அல்லவா? ஆனால் இவருக்குச் சிவனுடைய தரிசனமே கிடைத்தது.

திருச்சங்கமங்கை என்ற கிராமத்தில் சாக்கியர் பிறந்தார். ஆரம்பத்தில் அவர் பௌத்தமதத்தில் ஈடுபாடு கொண்டு அடிக்கடி காஞ்சி மகாநகருக்குச் சென்று அங்கு பௌத்த மத தியானத்தில் ஈடுபடுவார். ஆனால், இது அதிக காலம் நீடிக்கவில்லை. அவர் உள்மனதில் அந்தப் பரமேஸ்வரனே வியாபித்திருந்தார்.

ஒருநாள் மனம் முழுவதும் சிவன் இருக்க ‘நமசிவாய’ என்று சொல்லியபடி நடந்து வந்துகொண்டிருந்தார் சாக்கியர். அங்கு ஒரு சிவலிங்கத்தைக் கண்டார். உடல் சிலிர்க்க அப்படியே நின்று விட்டார். அதற்கு அர்ச்சனை செய்யப் பொருட்கள் தேடினார். அருகில் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆகையால் கீழே இருந்த கற்களைப் பொறுக்கி, நமசிவாய என்று சொல்லியபடி ஒவ்வொன்றாக லிங்கத் திருமேனியின் மீது வீசினார். அவருக்கு அந்தக் கற்கள் பூக்கள் போல் தோன்றின. மனம் நிறைந்தது. தினமும் அங்கு வர ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் முதலில் சிவபெருமானுக்குக் கற்களால் அர்ச்சனை செய்து முடித்த பின்தான் ஆகாரம் எடுப்பார். தினமும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் மாறுதல் ஏற்பட்டு விட்டது. நீராடிவிட்டு வந்த சாக்கியர் கற்களை எறிய மறந்து சாப்பிட அமர்ந்துவிட்டார். உடனே தன் தவற்றை உணர்ந்து எழுந்தார்.

‘என்ன ஆயிற்று எனக்கு? இன்று சிவன் மேல் கற்கள் வீசாமல் சாப்பிட அமர்ந்துவிட்டேனே! அந்த ஈசன்தான் என்னைச் சோதிக்கிறான் போலும். இருக்கட்டும் இருக்கட்டும்! அந்த ஈசனிடமே சென்று இதைக் கேட்கிறேன்’ என்றபடி கோபத்துடன் சிவலிங்கத்தின் முன் சென்று நின்றார். கண்கள் சிவக்க, உதடு துடிதுடிக்க "இது எல்லாம் உன் வேலையா? என்னை ஏன் மறக்கடிக்கச் செய்தாய்?" என்று வேகமாகக் கல்லை வீசினார். அப்போது பரமேஸ்வரர் நேரிலேயே வந்து காட்சி கொடுத்து அருள்புரிந்தார். சாக்கியரும் சாக்கிய நாயனார் ஆனார்.

இவர் பூஜித்த சிவலிங்கத் திருமேனியை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் காணலாம். இந்தக் கோயில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் கோனேரிகுப்பம் என்ற இடத்தில் இருக்கிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோயில் இரண்டாம் பரமேஸ்வர மன்னரால் கட்டப்பட்டது. மற்றும் பல மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். ஆலயத்திற்குள் இரண்டு லிங்கங்கள் உண்டு. ஒன்று மேற்கு பார்த்த நிலையில் உள்ளது; மற்றொன்று கிழக்கு பார்த்த நிலையில் உள்ளது. நடுப்பகுதியில் நர்த்தனராஜாவான நடராஜர் அருள்பாலிக்க, அம்மை சிவகாமியின் திருப்பாதங்களும் இங்கு அமைந்துள்ளன. அருகில் அருள்மிகு வீரட்டானேஸ்வரர் சந்நிதியும் பக்கத்தில் சாக்கியர் சந்நிதியும் உள்ளன. சாக்கியநாயனார் கையில் பெரிய கல்லும் இருக்கிறது!

மார்கழி மாதம்தான் இங்கு விசேஷம். மார்கழி மாதம் பூராட நட்சத்திரத்தில்தான் சாக்கிய நாயனார் பிறந்தார். அவருடைய திருநட்சத்திரத்தை விசேஷ பூஜையாகக் கொண்டாடுகின்றனர். கொங்கணிச் சித்தரும் இங்கு வந்து வழிபட்டிருக்கிறார் என்றும் சிலர் சொன்னார்கள்.

அன்பு என்று ஒன்று இருந்தால் கற்களால் வழிபட்டாலும் அந்தக் கடவுள் உடனே ஓடி வந்துவிடுவார் என்பதற்குச் சாக்கியநாயனாரே சான்று.

About The Author

1 Comment

  1. sarathy

    சென்னை விருகம்பாக்கம்,ஏவிஎம் கோலோனி கற்பக விநாயகர் கோயில் [ஆவிச்சி பின் புறம் மிக அருமையான அமைதியான கிராமத்து சிவன் கோயில்.] அனைத்து சந்நிதிகளும் உள்ளன பால் முனீஸ்வரன் சக்தியுள்ள காவல்/எல்லை தெய்வம் இந்த கோயிலில் அறுபத்து மூவர் பிரதிஷ்டை செய்ய விருப்பம் கடந்த 7 ஆண்டுகளாக திருமுறை தினமும் ஓதப்படுகிறது இதுவரை 48 மாதங்கள் [3 வது சனிக்கிழமை முறையாக திருவாசகம் முற்றோதல் நடை பெற்று வருகிறது .குரு பூஜைகள் நடத்துகிறோம் எங்கள் விருப்பம் நிறைவேற ஆலோசனை கூறவும் பார்த்தசாரதி

Comments are closed.