சேது தரிசனம் பாப விமோசனம்!

பாரதத்தின் தேசீய சொத்து ராம சேது!

நன்றி : ஞான ஆலயம் டிசம்பர் 2007

"வாட்டி விடும் ஜென்மம் வரும் வழியைத் தாளிட்டுப் பூட்டி விடும் சேது" என்று ஜென்மம் பெறாத வழியாக சேது தரிசனத்தைச் சுட்டிக் காட்டுகிறது தேவை உலா (பாடல் 93) ஸ்காந்த புராணம் சேதுவை ஒரு முறை தரிசனம் செய்தவர்களின் புண்யத்தை யாராலும் அளக்க முடியாது என்று கூறுகிறது.

பாரம்பரியமான யாகங்களைச் செய்தல், புண்ய தீர்த்தங்களில் நீராடுதல், அனைத்து விரதங்களையும் அனுஷ்டித்தல் ஆகியவற்றால் ஏற்படும் பலன்கள் அனைத்தும் ராம சேதுவின் ஒரு தரிசனத்தால் பெறலாம் என்று அது மேலும் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.
  
பிரபல கவிஞரான ரால்ப் தாமஸ் ஹாட்ச்கின் கிரிப்பித் (1826-1906) ராம சேது தரிசனத்தால் பாபம் அனைத்தும் போகும் என்று அருமையான கவிதை எழுதியிருக்கிறார்! அவரது வலிமையான சொற்கள் அற்புதமான கருத்தை வெளிப்படுத்துகிறது:-

There stretches, famed for everymore,
The wondrous bridge from shore to shore.
The worlds, to life’s remotest day.
Due reverence to the work shall pay,
Which holier for the laps of time
Shall give release from sin and crime.

யாருக்கும் இல்லாத பெருமை சேதுவைக் காக்கும் காவலரான நமது தமிழ் சேதுபதி அரசர்களுக்கு உண்டு. சேதுவின் தலைவர் சேதுபதி ஆவார். அவர்கள் காக்கும் வரை சேது நிலைக்கும். சேது உள்ளவரை அந்தக் குலப் பெருமை நீடிக்கும். அதில் தோன்றிய பாஸ்கர சேதுபதியே விவேகானந்தர் அமெரிக்கா சென்று ஹிந்து மதப் பெருமையை உலகிற்கு அறிவிக்கக் காரணமானவர். இப்படி சேதுவைக் காக்கும் உரிமை பெற்ற அரச பரம்பரை தமிழகத்தில் மட்டுமே உள்ளது பெரிய பெருமையாகும்.

வந்த யாத்ரீகருக்கெல்லாம் இலவசமாக உணவு படைத்த பெருமை சேதுபதிகளுக்கு உண்டு.

12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி சேது தரிசனத்தை அனைவரும் பெற வழி வகுக்கிறது!

ரிக் வேதம், யஜூர் வேதத்தில் சேதுவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

அத்யாத்ம ராமாயணம், வால்மீகி ராமாயணம், துளஸி ராமாயணம், கம்ப ராமாயணம், ஆனந்த ராமாயணம், அக்னி புராணம், பிருமாண்ட புராணம், மத்ஸ்ய புராணம், பத்ம புராணம், மார்க்கண்டேய புராணம், விஷ்ணு புராணம் என எல்லாப் புராணங்களிலும் அதற்கான வியாக்யானங்களிலும் எல்லையற்ற சேதுவின் பெருமை விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

பலதீபிகையில் நாக தோஷத்திற்கு சேதுவில் பரிகாரம் செய்வது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

ஆர்க்கலாஜிகல் சர்வே ஆப் இண்டியாவின் லோகோவில் – அடையாளச் சின்னத்தில் ஆசேது ஹிமாசல என்று குறிக்கப்படுவதன் மூலமாக சேது முதல் இமயம் வரை என்ற தேசீய ஒற்றுமை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்க்கலாஜிகல் சர்வே ஆப் இந்தியாவின் முன்னாள் டைரக்டர் ஜெனரலான டாக்டர் பி.பி.லால் அவர்கள் உத்தரபிரதேசத்தில் சித்ர கூடத்தில் மேற்கொண்ட ஆய்வுகளால் ராமாயணம் நடந்ததை நிரூபித்திருக்கிறார். இன்னொரு ஆய்வாளரான டாக்டர் ராம் அவதார் சர்மா ராமர் சென்ற 196 இடங்களை வரலாற்று அடையாளச் சின்னங்கள் மூலம் இனம் கண்டுள்ளார். நாடோடி கதைகள், கர்ண பரம்பரைச் செய்திகள் வழியாக இன்னொரு 44 இடங்களையும் அவர் இனம் கண்டுள்ளார். அயோத்யா, சித்ர கூடம், பன்னா, சட்னா, ஜபல்பூர், ஷாடோல், ரெய்பூர், இன்றைய அஹ்மத்நகர், பஸ்தார், இன்றைய உஸ்மான்பாத், பெல்லாரி, ஹாஸன் வழியே ராமர் தனுஷ்கோடியை அடைந்தது விரிவாக அவரால் சான்றுகளுடனும் வரலாற்று ஆதாரங்களுடனும் விளக்கப்பட்டிருக்கிறது.

நாஸா சாடலைட் மூலம் படம் எடுத்து இலங்கைக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மனிதனால் அமைக்கப்பட்ட பாலம் இருப்பதை உறுதிப் படுத்தியுள்ளது. அதனுடைய ஒப்பற்ற தனித்தன்மை வாய்ந்த வளைவும், அதன் கட்டுமானப் பொருள்களும் அது மனிதரால் அமைக்கப்பட்டதே என்பதை உறுதி செய்கிறது என்று நாஸா தெரிவிக்கிறது.

ஸ்கந்த புராணத்தின் சேது படலம் விரிவான ஒன்று. படித்து மகிழ வேண்டிய ஒன்று.

சேது தரிசனம் பாப விமோசனம்! இது இன்று மட்டுமல்ல; ராமர் சேது கட்டிய நாளிலிருந்து மனித குலம் இருக்கும் வரைக்கும் நீடிக்கும் – சேது தரிசனம் பாப விமோசனம்!

About The Author

3 Comments

  1. K.V.Pathy

    சேது ராமர் கட்டியது. அதற்கு முந்திய வேதங்களில் எப்படி அதைப்பற்றிய குறிப்புகள் உள்ளன?

Comments are closed.