திருவண்ணாமலை கிரிவலம் மகிமை (1)

‘நினைத்தாலே முக்தி தரும்’ என்ற பெருமையுடன் திருவண்ணாமலை ஒரு மிகச் சிறந்த ஆன்மீக திருத்தலமாக விளங்குகிறது. புராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது. சமீபகாலத்தில் இந்த யாத்திரை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக உயர்ந்து உள்ளது. முன்பு மலைகளில் வனங்கள், குகைகள் இருந்தன. அதில் பல சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே அடக்கமாயினர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி விட, மலையைச் சுற்றி வந்து மகான்களின் ஆசிகளைப் பெற்றனர். கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர்.

ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் நம் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்று கூறப்படுகிறது.

Thiruvannamalai

மலையின் அமைப்பு

அருணாச்சல மலையானது 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் குறுக்களவுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருன லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என்பனவாகும்.

திருவண்ணாமலையின் சிறப்பு

இங்குள்ள மலையில் அனேக சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும் வாசம் செய்துள்ளனர். அவர்களுள் வேதாந்த மகரிஷி ரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மற்றும் யோகிராம் சுரத்குமார் ஆகியோர் 19 & 20ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் வாழ்ந்து மறைந்தவர்களாவர். இன்றும் இங்கு அனேக சித்தர்கள் உருவகமாகவும் அருவகமாகவும் வாழ்ந்து வருவதாக சொல்கின்றனர்.

தல புராணம்

ஒருமுறை இவ்வுலக ஜீவராசிகளை படைக்கும் தொழிலை மேற்கொண்டவராகிய பிரம்மனுக்கு மும்மூர்த்திகளில் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) தானே உயர்ந்தவர் என்கிற கர்வம் தோன்றியது. நானே அனைத்து ஜீவராசிகளையும் படைப்பவன். நான் இல்லையென்றால் விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் வேலையில்லை. ஆகையால் நானே உயர்ந்தவன் என்று கூற, அதை ஏற்க மறுக்கிறார் விஷ்ணு. அப்போது அங்கே ஒளிப்பிழம்பாய் ஜீவஜோதியாய் அந்த சர்வேஸ்வரனே காட்சி தருகிறார். இதைக் கண்ட விஷ்ணுவும், பிரம்மாவும் அந்த ஜோதியின் ஆதியையும் (ஆரம்பம்) அந்தத்தையும் (முடிவு) காண்பவர்களே உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு போட்டியை ஆரம்பிக்கின்றனர்.

ஜோதியின் அந்தத்தைக் காண்பதற்கு பிரம்மன் மேல்நோக்கி செல்கிறார், அதேபோல் ஆதியை காண்பதற்கு வராக உருவம் கொண்டு பூமியை துளைத்துக் கொண்டு செல்கிறார் விஷ்ணு. இவர்களது செயலைக் கண்ட சர்வேஸ்வரர் தன் அடியையும் (கால்பாதம்) உச்சியையும் (தலைமுடி) இவர்கள் காணாமல் செய்ய வேண்டும் என்பதற்காக மேலும் கீழும் வளர்ந்து கொண்டே செல்கிறார்.

பல ஆண்டுகள் ஆகியும் ஆதியையும் அந்தத்தையும் இருவராலும் காண முடியவில்லை. அப்போது அந்த சர்வேஸ்வரனின் தலையில் இருந்து தாழம்பூ பல ஆண்டுகள் பயணித்து கீழே வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த பிரம்மன் இந்த ஜோதி வடிவத்தில் இருப்பவர் சிவனே என்பதைப் புரிந்து கொள்கிறார். பிரம்மன் தான் மேற்கொள்ளும் பயணம் பற்றி தாழம்பூவிடம் கேட்க, நீங்கள் எத்தனை யுகங்கள் முயற்சி செய்து மேலே சென்றாலும் அந்த சர்வேஸ்வரனின் முடியை காண முடியாது என்றது தாழம்பூ. ஆகவே பிரம்மன் ஒரு முடிவெடுத்து தான் சிவனின் முடியைக் கண்டதாக சாட்சியம் சொல்லவேண்டும் என்றும் அதற்காக உனக்கு அடுத்த பிறவியை நல்விதமாக படைக்கிறேன் என்றும் தாழம்பூவிடம் கூறினார். முதலில் மறுத்தாலும் பின்னர் சரியென ஒத்துக்கொண்டது தாழம்பூ.

Lord shivaபிரம்மன் தன் பயணத்தை முடித்துக் கொண்டவுடன் சிவனும் தான் வளர்வதை நிறுத்துகிறார். அப்போது விஷ்ணு சிவனின் அடியைக் கண்டு தொட்டு வணங்க, சிவன் விஷ்ணுவைத் தூக்கி ‘நானும்(ஈசன்), நீயும்(திருமால்) ஹரிஹரனே(ஒன்றே)’ என்றவாறு விஷ்ணுவை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

பிரம்மன் தான் சர்வேஸ்வரனின் முடியைக் கண்டதாகவும் அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என்று சொல்ல, தாழம்பூவும், ‘ஆம்’ என்று சாட்சி சொல்லிற்று. ‘நான்’ என்ற அகங்காரம் கொண்டு என்னுடைய முடியைக் காணாமல் கண்டேன் என்று உரைத்ததால் உனக்கு (பிரம்மாவுக்கு) இந்த பூலோகத்தில் கோவில், பூஜைகள் இருக்காது என்று கூறிவிட்டார் சிவன். அதற்கு பொய் சாட்சியம் சொன்னதற்காக தாழம்பூவை யாரும் பூஜைக்காக பயன்படுத்தமாட்டார்கள் எனவும், தாழம்பூவில் பூ நாகம் என்ற விஷப்பாம்பு குடிகொள்ளும் என்றும் தாழம்பூவிற்கு சாபமிட்டார் சிவன்.

எனவேதான், பிரம்மாவிற்கு என்று இப்புவியில் கோவில்கள் இல்லாமல் போயிற்று. மேலும் பொய் சாட்சி சொன்ன தாழம்பூவையும் இப்புவியில் யாரும் பூஜைக்கு பயன்படுத்துவதில்லை. அந்த சிவன் ஜீவஜோதியாய் காட்சி தந்த மலையே திருவண்ணாமலை ஆயிற்று.

(தொடரும்)

About The Author

2 Comments

  1. Giridharan

    பிரம்ம்னுக்கு சாபம் தரபடவில்லை. தாலம்ப்பூ விர்க்கு மட்டுமே சாபம் கொடுத்தார். பிரம்ம்னுக்கு அத்தகைய சாபம் தந்தது பிருகு முனிவர் ஆவார். அதர்கு திருப்பதி தலபுரானமே சான்ரு.

Comments are closed.