தேரு மல்லேஸ்வரம் – காசிக்குப்போன பலன்

வில்வ மர வகையில் ‘மகாவில்வ மரம்’ என்று ஒன்று உண்டு. இதன் இலையே மகாவில்வம். வில்வ இலையை விட இந்த மகாவில்வ இலை சிறிதாகவும் வட்டமாகவும் காணப்படும். இந்த மரத்தின் கிளைகள் பெரிதாக இருக்கும். இலைகள் கூட்டிலைகளாகக் காணப்படும். முடியும் இடத்தில் மூன்று இலைகளாக இருக்கும். இலையின் இந்த அமைப்பு பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றே என்கிற தத்துவத்தை எடுத்துச் சொல்கிறது. இந்த இலைகள் மிகவும் குளிர்ச்சியானவை.

இந்த மகாவில்வ மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட கோயில்கள் மிகவும் குறைவுதான். பெங்களூருவிலிருந்து சுமார் 150 கி.மீ தூரம் சென்றால் சித்ரதுர்க்கா மாவட்டம் வரும். இந்த மாவட்டத்தில் ஹிரியூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்குதான் தேரு மல்லேஸ்வரம் ஆலயம் உள்ளது. இது மகாவில்வ மரத்தைத் தலவிருட்சமாய்க் கொண்ட கோயிலாகும். இந்தக் கோயிலுக்கு வந்தால் காசிக்குப் போன பலன் கிடைக்கிறது!

சுமார் 500 வருடங்களுக்கு முன்னால், கர்நாடக மாநிலத்தில் கானபுரி என்ற ஊர் இருந்தது. அதுவே, இப்போது ஹிரியூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் பெல்லவடி மல்லம்மா என்ற சிவபக்தை வசித்து வந்தாள். அவளுடைய ஒவ்வொரு மூச்சும் நமசிவாயமாகவே இருந்தது. எங்கெங்கிலும் சிவனையே பார்த்தாள். சிவாலயத்திலேயே நாள் முழுதும் கழித்து, சிவனுக்குத் தொண்டு செய்தே வாழ்ந்தாள். கோயில் சற்றுத் தொலைவில் இருந்தாலும் நடந்து சென்று சிவபூஜை செய்வாள்.

காலச்சக்கரம் அப்படியே இருக்குமா? ஓடியாடிய வயது போய் மூப்பும் எட்டிப் பார்த்தது. நடை தளர்ந்தது. உதவிக்குக் கொம்பும் வந்தது. கொம்பை ஊன்றியபடி நடக்க முடிந்தாலும் கண்கள் மங்கிப் போயின. சிவனிடம் அழத் தொடங்கினாள். "மகேசா! இப்படித் தளர்ந்த உடலுடன் நான் எப்படியப்பா உன் சன்னிதிக்கு வருவேன்? காசியில் வந்து உன்னைத் தரிசிக்க நினைத்தேனே. இப்போது அருகில் இருக்கும் கோயிலுக்குக் கூட நடக்க முடியவில்லையே! உன்னை எப்படிக் காண்பேன்? உன்னைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாதே அப்பா சிவா!" என்று கலங்கினாள்.

அழுதபடியே கண்ணயர, பொறுப்பாரா ஈசன்? தன் பக்தையாயிற்றே! அவள் கனவில் அப்பொழுதே தோன்றினார். "அன்பு உள்ளமே மல்லம்மா! எனக்காகவே இப்படி உடலை வருத்தி ஓடாக உழைத்துப் பூஜை செய்து இன்று நடை தளர்ந்து போய்விட்டாய்! நீ காசிக்கு வந்து என்னைப் பார்க்க வேண்டாம்! நானே காசி விஸ்வநாதனாக உன்னை, நீ இருக்கும் இடம் தேடி வந்துவிடுவேன். இந்த இடம் தட்சிண காசியாகட்டும்! இந்த இடத்தில், உன் பெயரை ஒட்டி என் பெயரும் ‘தேரு மல்லேஸ்வரர்’ என்று ஆகட்டும்!" என்று அருளினார்.

கனவு மறைந்தது. சிவபெருமானும் மறைந்தார். மல்லம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. உடனே குழவி போல் ஒரு கல்லைத் தேடி, அதை உரல் ஒன்றில் வைத்து அதையே சிவலிங்கமாக எண்ணிப் பூஜிக்க ஆரம்பித்தாள். தினமும் மகாவில்வ இலை, துளசி, சம்பங்கிப் பூக்கள் போன்றவைக் கொண்டு அர்ச்சிப்பாள். துளசி மகாவிஷ்ணுவுக்குப் பிடித்த ஒன்று. ஆனாலும் அதையே சிவலிங்கத்திற்கும் அர்ப்பணித்தாள். காலம் ஓட, அவளுக்கு ஒரு நாள் சிவதரிசனமும் கிடைத்து, அவருடனேயே ஐக்கியமானாள்.

அவளுக்குப் பிறகு அந்த ஊர் மக்கள், சிவனுக்காக ஒரு பெரிய ஆலயம் கட்டினர். அதன் பின், அதன் புகழ் மேலும் பரவ, பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். வாக்களித்தபடியே இங்கு சிவன் ஹிரியூர் தேரு மல்லேஸ்வரராக அருள்பாலிக்கிறார். காசிக்குப் போக முடியாதவர்கள் இங்கும் வந்து பிரார்த்தனை செய்யலாம். காசிக்குப் போன பலன் கிட்டும்!

About The Author