புராணத் துளிகள் (7)

மெதுவாகச் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

சில விஷயங்களில் நிதானம் தேவை. மெதுவாகச் செய்ய வேண்டிய காரியங்களை ‘சனை: கர்தவ்யானி’ (மெதுவாகச் செய்ய வேண்டியவை) என்று குறிப்பிடுவர். ‘கருட புராணம்’ தரும் அறிவுரை இது:

வித்யா – கல்வி கற்பது.
அர்த்தா – செல்வம் சேகரிப்பது.
பர்வதாரோஹணா – பர்வதம், அதாவது மலையில் ஏறுவது.
தர்மா – தர்மம்.
காமம் – காமம்.

ஆக, இந்த ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது!
இதைக் கூறும் கருட புராண ஸ்லோகம் இது:

சனைர்வித்யா சனைர் அர்த்தா சனை: பர்வதமாருஹேத் I
சனை: காமம் ச தர்மம் ச பஞ்சதானி சனை: சனை: II

கல்வியில் மெதுவாக முன்னேறு. பொருள் சேகரிப்பதில் மெதுவாக முன்னேறு. மலை மீது ஏறுவதை மெதுவாகச் செய். காமத்திலும், அதே போல தர்மம் செய்வதிலும் மெதுவாகச் செய்!

-‘கருட புராணம்’ 109ஆம் அத்தியாயம், 46ஆம் ஸ்லோகம்.

மாயைக்கு மருந்து

உலகமெல்லாம் மாயா சொரூபமாய் இருக்கிறது. பரமேஸ்வரி, அம்மாயா சொரூபமான உலகத்திற்கு எஜமானியாக இருக்கிறாள். ஆதலால் மூன்று லோகத்தாராலும், சுந்தரமான தேவியே புவனேஸ்வரி என்று சொல்லப்படுகிறாள்.

ஓ அரசனே! மனம் புவனேஸ்வரி ரூபத்தில் சம்பந்தித்து இருக்குமாயின் இந்த சம்சாரத்தில் சதசத்ரூபமான மாயை என்ன செய்யும்? ஆதலால், மாயையை ஒழிப்பதற்குச் சதானந்தரூபியான தேவியைத் தவிர வேறொரு தேவதாந்தரங்கள் சக்தி உள்ளனவல்ல. தமோராசியை நாசம் செய்வதற்கு தமசே காரணமாக மாட்டாது. சூரியன், சந்திரன், அக்னி, மின்னல் இவற்றுடைய காந்தியல்லவோ இருளைப் போக்கடிக்க வல்லமை உள்ளவை! ஆதலால், சம்வித்ரூபமாய்த் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிற மாயேஸ்வரியான அம்பிகாதேவியை மாயையைக் கழிப்பதற்காக மிகப் பக்தியோடு பூஜிக்க வேண்டும்.

– வியாஸ முனிவர் ஜனமேஜய மஹராஜனிடம் கூறியது
– ‘தேவி பாகவதம்’ ஆறாம் ஸ்கந்தம், 36ஆம் அத்தியாயம்.

தூக்கம் வராத நான்கு பேர்!

நான்கு பேர்களுக்குத் தூக்கம் வராது என்று கூறுகிறது கருட புராணம்.

1) தரித்ரன் – ஏழ்மையில் வாடுபவன்.
2) பரப்ரேஷ்ய சர – (‘சர’ என்றால் ஒற்றன் என்று பொருள்). அயல் தேசத்தில் உளவு பார்க்கச் சென்ற ஒற்றன்.
3) பர நாரி ப்ரசக்த – அடுத்தவன் மனைவி மீது காதல் கொள்பவன்.
4) பர த்ரவ்ய ஹர: – அடுத்தவன் பொருளை அபகரிக்கும் திருடன் ஆகிய இவர்களுக்கு நித்திரை வராது.

குதோ நித்ரா தரித்ரஸ்ய பரப்ரேஷ்யசரஸ்ய ச I
பரநாரிப்ரசக்தஸ்ய பரத்ரவ்யஹரஸ்ய ச II

‘கருட புராணம்’ 115ஆம் அத்தியாயம் ஸ்லோகம் 68

பலன் தரும் யந்திரங்கள்!

‘நாரத புராணம்’ பல யந்திரங்களை விவரிக்கிறது. அவற்றில் சில:

த்ரைலோக்ய மோஹன யந்த்ரம் – இதை முறையாக வழிபட்டால் ஒருவன் நினைத்ததெல்லாம் கை கூடும்.
நாரசிம்ஹ யந்த்ரம் – வெற்றி, செல்வாக்கு, பாதுகாப்பு ஆகியவற்றைத் தரும்.
சர்வ வசங்கர யந்த்ரம் – அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
காலாந்தக யந்த்ரம் – சாவை முறியடிக்கும் யந்த்ரம்.

யந்த்ரம் என்பது குறிப்பிட்ட ஜியாமெட்ரி வடிவமைப்புடையது. அதை, சொல்லப்பட்ட உரிய முறைப்படி கல்லிலோ, உரிய உலோகத்திலோ, பேப்பரில் வர்ணத்தினாலோ அமைத்து அதற்குள் உரிய மந்திர பீஜங்களை எழுத வேண்டும். பிறகு, அந்த தேவதையை ஒரு மண்டலம் வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும் என்று புராணம் தெரிவிக்கிறது.

யந்திரம் அமைக்கும் முறை அதை வழிபடும் முறை ஆகியவற்றை அதில் சித்தி பெற்ற குரு முகமாக மட்டுமே பெற வேண்டும்!

அஹிம்சையே தர்மங்களுக்குள் உயர்ந்த தர்மம்

‘அஹிம்சா பரமோ தர்ம:’ என்பதை பத்ம புராணம் அறிவிக்கிறது. அஹிம்சையின் உயர்வைத் தெரிவிக்கும் அந்த ஸ்லோகம் இது:-

அஹிம்சா பரமோதர்மோஹ்யஹிம்சவைவ பரம் தப: I
அஹிம்சா பரம்ம் தானமித்யாஹுர்முனஸ்ய: சதா II

‘அஹிம்சையே தர்மங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தர்மம். அஹிம்சையே தவங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தவம். அஹிம்சையே தானங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தானம்’ என்று முனிவர்கள் எப்போதும் சொல்லி வருகின்றனர். மஹாத்மா காந்தி அடிகளுடைய வாழ்க்கையின் உயிர் மூச்சாக அஹிம்சா தத்துவம் இழைந்தோடியது.

– ‘பத்ம புராணம்’ ஸ்வர்க்க காண்டம், 31ஆம் அத்தியாயம், 26ஆம் ஸ்லோகம்.

–தொடரும்

About The Author