லவ, குசன் கட்டிய கோயில்

"ஜகம் புகழும் புண்ய கதை என் ராமனின் கதையே!" என்று இரண்டு சிறு பாலகர்கள் மிக அழகான குரலில் பாடி வருவதை ‘லவ குசா’ திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். குழந்தைகள் முகத்தில் அத்தனை தேஜஸ்! பின் இருக்காதா என்ன? ஸ்ரீ ராமனின் செல்வங்களாயிற்றே! ஆனால் ராமனுக்கோ, தனக்கு இப்படி ஓர் இரட்டையர் பிறந்திருப்பது தெரியாது. உண்மையில் தெரியாமல் இருந்திருக்குமா என்ன?அவர் பரந்தாமனாயிற்றே! ஆனாலும் பூமியில் அவதாரமெடுத்ததால் சாதாரண மக்களைப்போல் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

ஸ்ரீ ராமன் தன் கர்ப்பிணி மனைவி சீதையைக் கானகத்தில் விட்டு வரச்சொல்லித் தம்பி இலக்குவனிடம் ஆணையிட்டார். வண்ணான் ஒருவன் இட்ட களங்கத்தினால் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டது. சீதையும் கானகத்தில் தனித்து விடப்பட்டாள். அவள் வந்து சேர்ந்த இடம் வால்மீகியின் ஆஸ்ரமமாக இருக்க, முனிவர் வால்மீகி சீதாதேவியைத் தன் இருப்பிடத்திலேயே தங்க வைத்துக் காப்பாற்றினார்.

லவனும் குசனும் பிறந்ததும் அந்தக் குழந்தைகளை வளர்த்துப் பல கலைகளைக் கற்றுக்கொடுத்ததும், வில் வித்தையில் சிறந்து விளங்கச் செய்ததும் வால்மீகிதான்.

வால்மீகி முனிவர் இருந்த ஆஸ்ரமம்தான் தற்போது சென்னையில் இருக்கும் கோயம்பேடு எனும் இடம். இந்த இடத்தில்தான் லவன், குசன் இருவரும் ஈஸ்வரன் கோயில் ஒன்றைக் கட்டினர். வால்மீகி முனிவரும் ஏற்கெனவே வைகுண்டவாசப் பெருமாளுக்காக இங்கு ஓர் அழகான கோயில் கட்டியிருக்கிறார்!

லவனும், குசனும் இந்தச் சிவன் கோயிலைக் கட்டக் காரணமென்ன?

ராமர் ஒருமுறை அசுவமேத யாகம் செய்ய முற்பட்டார். அசுவமேத யாகம் என்பது, ஒவ்வொரு நாட்டின் மீதும் தனித்தனியாகப் போர் தொடுத்து நாடுகளைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக இருந்த இடத்தி இருந்து கொண்டே அனைத்து நாடுகளையும் தன் ஆட்சிக் கீழ்க் கொண்டு வருவதற்காகச் செய்யப்படும் ஒரு வித்தியாசமான யாகம். இதன்படி அரசன், யாகக் குதிரையைச், செலுத்துவதற்கு யாரையும் வைக்காமல், வழிகாட்டுவதற்காக ஒரு சிறு பரிவாரத்தை மட்டும் உடன் அனுப்பி நாடு நாடாகச் சுற்றி வரச் செய்வான். அந்தக் குதிரை அப்படி எந்தெந்த நாடுகளையெல்லாம் கடக்கிறதோ அந்த நாடுகளெல்லாம் குதிரையை அனுப்பிய அரசனுக்குச் சொந்தம். தன் நாடு அப்படிப் பிறர் கைக்குப் போகக் கூடாது என வழியிலிருக்கும் எந்த நாட்டின் அரசனாவது விரும்பினால் அந்தக் குதிரையைக் கட்டிப் போட வேண்டும். பிறகு தன் குதிரையை மீட்க அந்த அரசன் போர் தொடுப்பான். போரில் குதிரையைக் கட்டிப் போட்ட அரசன் வென்று விட்டால் தொடர்ந்து அவனே அந்த நாட்டை ஆளலாம். மாறாகக் குதிரையை அனுப்பிய அரசன் தன் குதிரையை மீட்டு விட்டால் அன்று முதல் அந்த நாடு அவனுக்குச் சொந்தம்.

இப்படி ராமன் அனுப்பிய குதிரையை லவன், குசன் இருவரும் அடக்கிக் கட்டினர் . குதிரையை மீட்க வந்த பரதன், சத்ருக்னன், இலக்குவன் அனைவரும் அந்தச் சிறுவர்களோடு மோதித் தோல்வியே அடைந்தனர்.

"யாரோ சூரிய சந்திரனைப் போல் இரு பாலகர்கள் அசுவமேத யாகக் குதிரையைக் கட்டிப் போட்டு விட்டார்களாமே?" என்று எங்கும் இதே பேச்சு!

பின் ஸ்ரீ ராமரே குதிரையை மீட்க வந்தார். தன் குழந்தைகள் என்று தெரியாமல் போரும் தொடுத்தார். ஆனால் அதற்குள் உண்மையைக் கண்டறிந்து வந்த அனுமான் லவ-குசர்கள் ராமனின் செல்வங்களே எனக் கூறி போரை நிறுத்தினார். பின் ராமரும் சீதையைப் பார்க்கப் போனார்.

தன் சித்தப்பாக்களைப் போரில் காயப்படுத்திய பாவத்திற்காகப் பிராயச்சித்தம் செய்யச் சீதையின் செல்வங்கள் விரும்ப, வைகுண்டப் பெருமாள் அருளாசி கூறி சிவன் கோயில் ஒன்றைக் கட்டச் சொன்னார். அப்படிக் கட்டப்பட்ட இந்தக் கோயில் கோயம்பேட்டில் வைகுண்டப்பெருமாள் கோயில் அருகேயே உள்ளது.

மிகவும் பழமை வாய்ந்த கோயில். இங்கு அருள் புரியும் ஈசன்தான் ‘அருள்மிகு குறுங்காலீஸ்வரர்’. வால்மீகியின் ஆஸ்ரமம் இருந்தது, சீதை வந்து தங்கியது, ஸ்ரீராமன் வந்து தன் குழந்தைகளைக் கண்டது, சீதையை மீண்டும் சந்தித்தது என்று பல சிறப்புகளைக் கொண்ட இடம் இது! சைவ வைணவ ஒற்றுமைக்கு ஓர் உதாரணமாகவும் இந்த இடம் விளங்குகிறது!

கோயம்பேட்டில் கோயட்டி என்ற ஒரு குருட்டு நாரை இருந்ததாம். இது தன் பக்தியால், இறக்கும்போதும் இறைநாமம்ஓதிச் சிவலோகப் பிராப்தி அடைந்ததாம்! அதனால் அந்த நாரையின் பெயரால் ‘கோயட்டிபுரம்’ என்று இந்த இடம் முதலில் அழைக்கப்பட்டு, பின் அது ‘கோட்டிபுரம்’ என்றாகி நாளடைவில் ‘கோயம்பேடு’ என மருவியதாம்.

லவ, குசன் கட்டிய கோயிலுக்கு நீர் தேவைப்பட்டதால் அங்கேயே தன் அம்பினால் பூமியில் துளைபோட அங்கு ஒரு சுனையும் உண்டாயிற்று!

வைகுண்டநாதர் கோயிலில் வால்மீகியுடன் லவ-குசர்கள் இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. அதே போல் குறுங்காலீஸ்வரர் சிவன் கோயிலிலும் அசுவமேத யாகக் குதிரையைப் பிடித்தபடி ஜம்மென்று நிற்கும் லவ-குசர்களின் சிற்பம் நம்மைக் கவருகிறது. ஸ்ரீவைகுண்டப்பெருமாள் நின்ற கோலத்தில் சதுர்ப்புஜங்களுடன் நமக்குக் காட்சியளிக்கிறார்.

பெருமாள் கோயில் எதிரே ஆஞ்சனேயருக்கென்று தனிச் சந்நிதியும் உள்ளது. அதன் சுற்றில் அனுமானைப் பற்றிய அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. தாயார் கனகவல்லி என்னும் பெயரில் அருள்புரிகிறாள்.

கோதை நாச்சியாரான ஆண்டாள் தனிச் சந்நிதியில் கொண்டை அலங்காரத்துடன் அழகுமிகக் காட்சியளிக்கிறாள்.

ராமரும், சீதையும் கூட இங்கு அருள்புரிகிறார்கள். ஆனால் அவர்கள் பட்டுப் பீதாம்பரத்துடன் காட்சியளிக்கவில்லை. வனவாசத்தில் இருப்பதுபோல் மரவுரி தரித்து ராமர் இருக்க, சீதை மிகச் சாதாரணமாக எளிய உடையுடன், தலை முடியைக் கோடாலி முடிச்சுப்போல் அள்ளி முடிந்து காணப்படுகிறாள்.

லவ, குசன் பூஜை செய்த லிங்கம் குறுங்காலீஸ்வரர் . அதனால் இந்த இடம் குசலவபுரி என்றும் அழைக்கப்பட்டது. அம்பாளின் பெயர் தர்மசம்வர்த்தினி அம்பாள். தனிச் சந்நிதியில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.

இங்கு இருக்கும் சிவனுக்குக் குறுங்காலீஸ்வரர் எனப் பெயர் வந்த காரணம்?

லவ, குசர் பூஜை செய்த லிங்கம் நாளடைவில் மணலில் அமிழ்ந்து போயிற்று. பிற்காலத்தில் சோழ மன்னன் அந்தப் பக்கம் தேரில் வர, தேரின் சக்கரம் மணலை அழுத்த, மணலில் புதைந்திருந்த லிங்கத்திலிருந்து இரத்தம் பெருக்கிட்டது. மன்னர் இதைப் பார்த்துப் பயந்து கீழே இறங்கி அந்த லிங்கத்தை எடுத்தார். தன்னால் அந்தச் சிவலிங்கத்திற்கு இப்படியாகி விட்டதே என்று மனம் வருந்தினார். பின் அதற்கு ஒரு கோயிலும் கட்டினார்.

லிங்கம் தேரின் சக்கரம் பட்டு நசுங்கியதால் குறுகிக் குள்ளமானது . இதனால் பெயரும் குறுங்காலீஸ்வரர் ஆனது.

பிரதோஷ வழிபாடு முதன்முதலில் நடந்த இடம் இதுதான் எனத் தலபுராணம் சொல்கிறது! விசேஷ தினங்களில் குறுங்காலீஸ்வரருக்கு 1008 சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. கோயில் வாசலில் இருக்கும் மண்டபத்தில் சரபேஸ்வரரும் பிரத்தியங்கராதேவியும் கல்லில் வடிக்கப்பட்டி ருக்கின்றனர். இந்தச் சரபேஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பூஜை, அபிஷேகம் எல்லாம் செய்யப்படுகின்றன. ஞாயிறன்று மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நவக்கிரஹ சந்நிதி ஒரு பெரிய தாமரைப்பீடம் மேல் அமைந்துள்ளது. நடுவே சூரியபகவான் தன் மனைவிகள் உஷா, பிரத்யுஷாவுடன்ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தின் மேல் அமர்ந்திருக்கிறார் . தேரை அருணன் எனும் சாரதி ஓட்டுகிறான். பொங்கல், ரதசப்தமி, தட்சிணாயனம் போன்ற நாட்களில் சூரியபகவானுக்குத் தனி சிறப்புப் பூஜை நடை பெறுகிறது. மேலும் இங்கு காலபைரவர், தட்சிணாமூர்த்தி, வீரபத்திர ஆகியோரும் அருள்புரிகின்றனர்.

இந்தக் கோயில், கோயம்பேடு காய்கறி அங்காடியின் பின்புறம் அமைந்துள்ளது. இது ஒரு பரிகாரஸ்தலம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தர்ப்பணம் செய்கின்றனர். இது ஒரு மோட்ச ஸ்தலமும் கூட.

About The Author

1 Comment

  1. s nagarajan

    கட்டுரை நன்றாக உள்ளது. இதே போல சென்னையைச் சுற்றி உள்ள நூற்றுக் கணக்கான கோவில்களைப் பற்றிய பழைய தகவல்களைத் தரலாமே
    நாகரா

Comments are closed.