தூண்டிற் புழுவினைப் போல்- வெளியே
சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக-எனது
நெஞ்சம் துடித்ததடி! - பாரதியார்
மறுபடியும் அதே கனவு-
வெளியே இடி மின்னலுடன் பேய் மழை பெய்து கொண்டு
இருக்கிறது....அழைப்பு மணியை யாரோ விடாமல் அழுத்திக்
கொண்டே இருந்தார்கள்...அந்த மழை சத்தத்துடன் சேர்ந்து
கேட்கும் போது அந்த அழைப்பு மணியின் தொடர்ச்சியான
சத்தம் நாராசமாக கேட்கிறது....ஒரு பெண் கலவரத்துடன்
யாருடனோ போன் பேச முயன்று கொண்டிருக்கிறாள்.....பிறகு
கலவரத்துடன் ரிசீவரைக் கீழே வைத்து விட்டு முகத்தைத்
தன் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்கிறாள்.. யாரோ
ஓடி வரும் சத்தம் கேட்டது....இரண்டு பெண்கள் ஒரு
அறைக்குள் ஆவேசத்துடன் பேசிக் கொள்ளும் சத்தம்
கேட்கிறது...பேச்சைத் தொடர்ந்து ஒரு பெண் அமானுஷ்ய
குரலில் சிரிக்கிறாள். .ஒரு வினோதமான காலடி ஓசை
கேட்கிறது...ஒரு பெண்ணின் அலறல் இடிச்சத்தத்தையும்
மீறி அந்த பங்களா முழுவதும் எதிரொலிக்கிறது....
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது....மூடிய
அறைக்குள் இருந்து கதவிடுக்கின் வழியே இரத்தம் வெளியே
வருகிறது... வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம்
கேட்கிறது.... முகமெல்லாம் இரத்தம் வடிய ஒரு பெண்
அறையிலிருந்து ஓடி வருகிறாள்....யாரோ ஈனசுரத்தில் "ஆர்த்தி"
என்றழைக்கிறார்கள்....."
அலறியபடி ஆர்த்தி விழித்துக் கொண்டாள். உடல் எல்லாம்
வியர்க்க, இதயம் படபடக்க திகிலுடன் படுக்கையில்
உட்கார்ந்தாள். இந்தக் கனவு அவளுக்கு நினைவு தெரிந்த
நாளில் இருந்து வருகிறது. முன்பெல்லாம் நான்கைந்து
மாதங்களுக்கு ஒரு முறை வருவது, இப்போதெல்லாம் மாதம்
ஓரிரு முறை வர ஆரம்பித்து விட்டது. இந்தக் கனவின்
காட்சிகள் எப்போதும் இதே வரிசையில் வருவதில்லை.
ஒவ்வொரு முறையும் முன் பின்னாக மாறி மாறி வரும்.
ஆனால் கனவில் காணும் அந்த காட்சிகளில் மாற்றம்
இருப்பதில்லை. ஒரு பெரிய ஸ்கிரீனில் சினிமா ஸ்லைடுகள்
காண்பிக்கப்படுவது போல கோர்வையில்லாமல் வேகமாக வந்து
போகும் கனவின் காட்சிகள் கலைவது மட்டும் ஈனசுரத்தில்
ஆர்த்தி என்று யாரோ அழைக்க அலறியபடி அவள் விழித்துக்
கொள்வதில் தான்.
மின் விளக்கு எரிந்தது. அவளுடைய அலறல் சத்தம் கேட்டு
வந்த தாத்தாவும் பாட்டியும் அவளையே கவலையுடன்
பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் என்ன ஆயிற்று
என்று அவளைக் கேட்கவில்லை. வருடக்கணக்கில் அவளை
வதைத்து வந்த கனவைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே
தெரியும்.
சிவந்த நிறம், நீண்ட கூந்தல், அழகான பெரிய கண்கள்,
கண்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய அழகு முகம்,
செதுக்கிய உடற்கட்டு, சராசரிக்கும் மேற்பட்ட உயரம்
என அழகோவியமாய் இருக்கும் பேத்தியின் இந்த தொடர்
சித்திரவதையைப் பார்க்க பாட்டியின் கண்களில் லேசாக
கண்ணீர் திரை போட்டது. தாத்தாவின் முகத்தில்
இயலாமையுடன் கூடிய துக்கம் குடி கொண்டது.
இருபத்தியொரு வயதை அடுத்த வாரம் எட்டப் போகிற அவர்கள்
பேத்தியை இந்தக் கனவில் இருந்து காப்பாற்ற அவர்களால்
முடியவில்லையே என்ற ஆதங்கம் அவர்களிடம் தெரிந்தது.
ஆர்த்தி அவர்கள் இருவரையும் பார்த்து பலவந்தமாக
மெலிதாய் புன்னகையை வரவழைத்தாள். "வழக்கமான கனவு தான்.
நீங்க போய் தூங்குங்க".
பாட்டி பார்வதி அவளைப் படுக்க வைத்து போர்வை போர்த்தி
அவள் தலைமுடியைக் கோதி விட்டு ஆசுவாசப்படுத்தி
விட்டுத் தான் அங்கிருந்து நகர்ந்தாள். தாத்தா
நீலகண்டன் பேத்தியைப் பாசத்துடன் பார்த்தபடி ஒரு கணம்
நின்று விட்டு மனைவியைப் பின் தொடர்ந்தார். பார்வதி
கணவனிடம் மெல்லிய குரலில் சொன்னாள். "அவள் கிட்ட
இன்னும் எத்தனை நாள் உண்மையை மறைக்கிறது.
எல்லாத்தையும் சொல்லிடறது நல்லதில்லையா?". அவர்
தற்காலிகமாய் செவிடானார்.
அவர்கள் போன பின்பு ஆர்த்திக்கு உறக்கம் நீண்ட நேரம்
வரவில்லை. இந்தக் கனவு ஏன் வருகிறது என்று அவளுக்குப்
புரியவில்லை. அடிக்கடி வரும் கனவாக இருந்தாலும் கூட
ஒவ்வொரு முறையும் அவளுக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு
ஏனோ சிறிதும் குறைவதில்லை. அவளுக்கு சுமார் பதினைந்து
வயது இருக்கும் போது நீலகண்டன் அவளை ஒரு
சைக்கியாட்ரிஸ்டிடம் கூட்டிக் கொண்டு போனார். அந்த
டாக்டர் அவளிடம் அரை மணி நேரம் பேசி விட்டு பிறகு
தனியாக தாத்தாவிடம் அரை மணி நேரம் பேசினார். அவர்
என்ன சொன்னார் என்று கேட்டதற்கு தாத்தா சரியாக பதில்
சொல்லவில்லை. அதற்குப் பின் தாத்தா அவளுக்கு இந்த
விஷயத்தில் சிகிச்சை பார்க்கும் முயற்சியே
எடுக்கவில்லை. பணம் அதிகமாக செலவாகும் சிகிச்சை
ஏதாவது அந்த டாக்டர் தாத்தாவிடம் சொல்லி இருக்கலாம்,
ஏழ்மை நிலையில் இருக்கும் தாத்தா இது நம்
வசதிக்கேற்றதில்லை என்று விட்டிருக்கலாம் என்று
ஆர்த்தி நினைத்தாள். ஆனால் அவளுக்கு தாத்தா மீது
வருத்தம் இல்லை. பாண்டிச்சேரியில் ஒரு சிறிய ஓட்டு
வீட்டில் குடியிருந்து கொண்டு காலையிலும் மாலையிலும்
டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு, இடைப்பட்ட
நேரத்தில் ஒரு தனியார் நூலகத்தில் வேலை செய்து கொண்டு,
வரும் வருமானத்தில் மனைவியையும், பேத்தியையும்
காப்பாற்ற வேண்டி உள்ள அவர் நிலைமையை அவள் அறிவாள்.
அவர் அவளைப் பட்டப்படிப்பு படிக்க வைத்ததே பெரிய
விஷயம்......... அவள் அப்படியே உறங்கிப் போனாள்.
ஆனால் பார்வதியால் உறங்க முடியவில்லை. பேத்தியின்
கனவின் பின்னால் இருக்கும் உண்மையை இனியும்
தெரிவிக்காமல் இருப்பது முட்டாள்தனம் என்று அவள்
உள்ளுணர்வு சொன்னது.
மறுநாள் காலை பார்வதி பேத்தியிடம் ஏதோ சொல்ல வாய்
திறப்பதும் பின் வாங்குவதுமாக இருந்தாள். ஆர்த்தி "என்ன
பாட்டி?" என்று கேட்கும் போது நீலகண்டன் அவர்கள்
அருகே வர, அவர் போகட்டும் பிறகு சொல்கிறேன் என்று
அவர் அறியாமல் சைகையால் சொன்னாள். நீலகண்டன் காய்கறி
வாங்கி வர வெளியே போகும் வரை காத்திருந்து விட்டு
பிறகு பேத்தியைத் தன் அருகே உட்கார வைத்து ஏதோ சொல்ல
பார்வதி வாய் திறந்தாள். மறுபடியும் வார்த்தைகள்
வெளிவரவில்லை.
"என்ன பாட்டி?"
பார்வதிக்கு முகமெல்லாம் வியர்த்தது. அவள் முந்தைய
நாள் இரவெல்லாம் உறங்காமல் சிந்தித்து தான்
பேத்தியிடம் சில உண்மைகளை தெரிவித்து விட
தீர்மானித்திருந்தாள். ஆனாலும் அதை சொல்ல
முற்படுகையில் ஏதோ தொண்டையை அடைத்தது. பொறுமையாக
ஆர்த்தி தன் பாட்டி பேசக் காத்திருந்தாள்.
"ஆர்த்தி, உன்னோட அந்தக் கனவு...."
"சொல்லுங்க பாட்டி அதுக்கென்ன?"
"அது நீ நினைக்கற மாதிரி காரணமில்லாமல் வர்றதில்லை"
ஆர்த்தி திகைப்புடன் தன் பாட்டியைப் பார்த்தாள்.
"உன் அம்மா சாகறப்ப உனக்கு மூணு வயசு....அவ மரணம்
இயற்கையாய் இருக்கலை....அது கொலையாய் இருக்கலாம்கிற
சந்தேகம் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே இருக்கு...
அந்த சமயத்தில் நீ உங்கம்மா கூட இருந்திருக்கிறாய்....
உன் ஆழ்மனசில் அப்ப பதிஞ்சதெல்லாம் தான் இந்தக்
கனவாய் வருதுன்னு அன்றைக்குப் பார்த்த டாக்டர்
நினைக்கிறார்...எங்களுக்கும் அது சரியாக இருக்கலாம்னு
தோணுது"
ஆர்த்தியின் இதயத் துடிப்பு ஒரு கணம் நின்று போனது.
(தொடரும்)