அதன்
பிறகு நான் எவ்வளவோ முறை அவளிடம் பேச முயன்றும் என்னால்
முடியவில்லை. மன்னிப்பா கேட்பது? தெரியாமல் செய்த
தவறுக்குத்தான் மன்னிப்பு. அவள் அலுவலகத்திற்க்குச் சென்றால்,
அவள் எனக்காக காத்திருக்கவில்லையென்றும், அவள் வீட்டிற்குத்
தனியே சென்றாள் என்றும் தெரிந்தது. அவள் வீட்டிற்குச்
சென்றாலோ, ப்ரியாவும் அவள் அன்னையும் நன்றாக பேசுவார்கள்.
அவளோ பேசக்கூட மாட்டாள். உண்மையைச் சொல்லவேண்டுமானால், அவளின்
அந்த சுபாவத்தையும் நான் ரசித்தேன்.
அவள் வீட்டிற்குப் போவது அதிகமானது. அந்த வீடே என்னைக்
கவர்ந்து இழுத்தது என்று தான் சொல்லவேண்டும். அவள்
இருந்ததனால்தான் என்று நான் சொல்லமாட்டேன். அந்த வீட்டில்
இருந்த சந்தோஷம் வேறெங்கும் நான் கண்டதில்லை. மனச்சோர்வென்பதே
அவர்களுக்கு ஏற்படாது என நினைக்கிறேன். அவளுடன் பழக
ஆரம்பித்த சில தினங்களில் எனக்கு அவர்கள் வறுமையைப் பற்றிப்
புரியவில்லை. போகப் போக, அவள் வாங்கிய அந்த ஏழாயிரம் ரூபாய்
சம்பளத்தில் அவர்கள் ஒரு கவிதையயே படைத்தார்கள் என்று
புரிந்தது. அந்த கவிதையில் ஒரு வரியாக எனக்கு ஆசை.
ஒரு முறை அங்கு சென்றபோது ப்ரியா மட்டும் தான் இருந்தாள்.
படித்துக்கொண்டிருந்தாள். எனக்கு பொழுது போகவில்லை. மிக
நாட்களாகவே ஒரு ஓரத்தில் டிவி இருந்ததைப் பார்த்து வந்தேன்.
அன்று தான் அதை ஆன் பண்ண முயற்சித்தேன். சிரிப்பு சத்தம்தான்
கேட்டது.
"ஐயோ, அது வேலை செய்யாது. பினாடோன் அப்படின்னு ஒரு ப்ராண்ட்.
வாங்கினபோது அது தான் நம்பர் ஒண்ணாம். இப்ப அது வெறும் பொட்டி"
அதை சொன்னதில், ஒரு சிறு வருத்தமோ அல்லது ஒரு சிணுங்களோ இல்லை.
அது தான் ப்ரியா!
அவளுக்கு எப்படியோ தெரியாது, அந்த பதில் என்னை ரொம்பவே
பாதித்தது. எனக்குத் தெரிந்த வரையில், பொதுவாக இளம்பெண்கள்
அனைவருக்கும் சில ஆசைகள் இருக்கும். என் அன்னையின் வளையலைப்
பார்த்து சீதாகூட எத்தனையோ தடவை 'இது ரொம்ப நன்னாருக்கு'
என்று சொல்லியிருக்கிறாள். அவள் தந்தையிடம் கேட்டு அதே மாதிரி
சின்னதாக வளை வாங்கி போட்டுக்கொண்டாள். (அவள் வளர்ந்ததும் என்
அன்னை தன் வளையை அவளுக்கே கொடுத்துவிட்டாள் என்பது வேறு
விஷயம்.)
நிவேதாவின் வெற்றுக்கையைப் பார்க்கும் போது எனக்கு ஒரு
மாதிரியாக இருக்கும். தன் தங்கைக்கு மட்டும் மண் வளையல். அவள்
அதைப்பற்றியெல்லாம் ஒரு நாளாவது என்னிடம் பேசவேண்டுமே, ஹும்...!
அது தான் நிவேதா!
இவற்றையெல்லாம் பற்றி அவர்களின் அன்னை யோசிப்பார்களா என்று
கூட எனக்குத் தெரியாது. ஒரே ஒரு முறை மட்டும் தான் என்னிடம்
சொன்னார்கள், "நான் தமிழ் பண்டிட். நான் நினைச்சா, கொஞ்சம்
கஷ்டப்பட்டு, நிறைய சம்பாதிக்கலாம். நிவேதாவை இன்னும்
படிக்கத்தான் சொன்னேன். ஆனா அவ தான் படிச்சது போதும்னு முடிவு
பண்ணிட்டா! ப்ரியாவை நிறைய படிக்க வைப்பேன், கண்டிப்பா!"
இவர்களிருவரும் ப்ரியாவை தான் படிக்கவைப்பேன் என்று சொல்ல,
அவளோ தன் வேலையை நன்றாக செய்து கொண்டிருந்தாள் என்று தான்
சொல்லவேண்டும்.
தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலி னாங்கொன்று உடைத்து
இரண்டு நாட்களில் ப்ரியாவின் பிறந்தநாள். சீதாவை அழைத்துக்
கொண்டு நகைக்கடைக்குச் சென்றுவிட்டேன். ஆளுக்கு ஒரு செயின்,
இரண்டு வளையல்கள். மொத்தமாக ... எவ்வளவு ஆனால் என்ன!
"அக்காவும் தங்கையுமா கோவிலுக்குப் போயிருக்கா!"
"சரி... இதைப் பாருங்கோ! எப்படி இருக்கு?"
"சீதா கலியாணத்துக்கு நகையா?"
சீதா என் பக்கத்தில் தான் இருந்தாள். களுக் என்று
சிரித்துவிட்டாள். "ஐயோ ஆன்ட்டி, இது உங்க மருமான், உங்க
ரெண்டு பொண்ணுங்களுக்காக வாங்கியிருக்கான்."
உடனே அந்த முகத்தில் ஒரு மாற்றம். ஒரு வேளை நிவேதா அவள்
அம்மாவிடம் சொல்லவில்லையோ! அவள் கண்டிப்பாக சொல்லியிருக்க
மாட்டாள். "உனக்கேது அப்பா இவ்வளவு வாங்க பணம்?" என்று
கேட்டால்?
ஆனால் அந்த மாற்றம் உடனே சிரிப்பாக மாற, என் கன்னங்களைத் தடவி
தலையில் சொடுக்குப் போட்டு, "எல்லாம் சரி! உன் சம்பளம்
மேட்டரெல்லாம் சீதாவுக்கு தெரியுமா?"
அவ்வளாவு தான், ஆடியே போனேன். சீதா, "உங்களுக்கு எப்படித்
தெரியும்?"
சிரித்துக்கொண்டே சொன்னாள், "ஓஹோ, அப்ப எனக்கு தெரியும்னு
உனக்கே தெரியாதா? நீங்க எல்லாரும் சின்ன பசங்க... ஏதாவது
விளையாட்டுத் தான் உங்களுக்கு. ஏன் சிவா, உங்க அம்மா
என்கிட்ட மறைச்சுருப்பாங்கன்னு நினைக்கற?"
உடனே பின்னாலிருந்து குரல், "வாங்கோ அத்திம்பேர். சீதா
அக்காவா அது? கலியாணம்னவுடனே முகம் இப்படி சிவந்து போச்சு!"
அந்த குரலின் பின்னே நிவேதா.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிய பிறகு,
"இது உனக்கு" என்று வளையலை அவளிடம் கொடுத்தேன்.
"நீங்களே போட்டுவிடுங்கோ" என்று கையை நீட்டினாள் ப்ரியா.
திரும்பி நிவேதாவைப் பார்த்தேன். சிரித்தாள். இருபது
நாட்களுக்குப் பிறகு, அந்த சிரிப்பு!
நான் வளையலை அவள் கையில் நுழைக்கும் பொழுதே, "அக்காக்கு?"
நான்,"இதோ இருக்கே!"
உடனே சீதா, "என்ன ப்ரியா, உங்கக்காக்கு இவன் வாங்காமையா?"
ப்ரியா, "செயின் வேறயா?"
திடீரென்று நிவேதா முகத்தில் ஒரு மாற்றம். தன் அன்னையை
பார்த்தாள். அந்த பார்வை சொன்னது - "யூ டூ ப்ரூடஸ்"
சிரித்துக் கொண்டே அவர்களும் சொன்னார்கள், "என்ன அப்படி
பாக்கற? நீ நல்ல பணக்கார மாப்பிள்ளையைத்தான்
புடிச்சுருக்கேன்னு எனக்கு எப்பவோ தெரியும்!", நகைத்துக்
கொண்டே!
"அக்கா, அம்மாவை மட்டும் பாக்காதே. எனக்குக்கூட தெரியும்.
அன்னைக்கு ஒரு நாள், அந்த செவுத்தல நின்னுண்டு அத்திம்பேர்
உன் இடுப்புல கிள்ளினாரே.. அதுக்கப்புறம் நீங்க லேட்டா
கிளம்பி வெளிய போனீங்களே... அப்ப உன் அத்தை உண்மையைச்
சொல்லிட்டாங்க."
அடுத்த வரியை சின்ன வருத்ததுடன், "ஆனா அதுக்கு முன்னாடியே
அம்மாகிட்ட சொல்லிட்டாங்க!"
தொடர்ந்து அவளுக்கே உண்டான ஸ்டைலில் சர்வ சாதாரணமாக
சேர்த்துக் கொண்டாள், "சரி, ஏதோ சின்ன பசங்க விளையாடறாங்கன்னு
நானும் அம்மாவும் ஸ்பெக்டேடர்ஸ் ஆயிட்டோம்."
நிவேதா, "எவ்ரிபடி... மேன்... எல்லாரும் சேர்ந்து என்னை...!"
என்று முடிக்காமல் என்னைப் பார்த்து உதட்டை இப்படியும்
அப்படியும் ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
(தொடரும்)