<<<<<சென்ற வாரம்
An answer is invariably the parent of a great
family of new questions.
- John
Steinbeck
அடுத்த வெள்ளிக்கிழமை பெற்றோருடன் திருமணப் பேச்சு பேச
வீட்டுக்கு வருவதாகச் சொன்ன போது காவ்யாவுக்குத் தன் காதுகளை
நம்ப முடியவில்லை. "அருண்.....உங்கப்பா வர்றாரா?"
"ஆமா. ஏன் இப்படி அவரை எட்டாத தூரத்தில் வச்சிப்
பார்க்கிறீங்கன்னு எனக்குப் புரியலை."
"அருண், சின்ன சமையல் ரூமைத் தவிர வேறொரு ரூம் மட்டும் தான்
எங்க வீட்டில் இருக்கு"
"அந்த ஒரு ரூமில் நாங்க மூணு பேர் வந்தால் உட்கார இடம்
இருக்குமில்ல"
அவள் தர்மசங்கடத்துடன் நெளிந்தாள். "இருக்கும்..... நீ
பரவாயில்லை. ஆனா உங்கம்மா அப்பா அதை ஒரு ரூமுன்னாவது
சொல்லுவாங்களான்னு எனக்கு சந்தேகமாய் இருக்கு."
"அவங்களுக்குப் பிடிக்கலைன்னா அதுக்கு வேற பெயர்
வச்சுக்கட்டும்"
"ஜோக் அடிக்காதே. எனக்கு வயித்தைக் கலக்குது" என்றாள் காவ்யா.
ராஜராஜனின் கம்பீரமான தோற்றத்துக்கு அவரை அவளது வீட்டு,
அந்தக் குறுகிய களையிழந்த அறையில் இருப்பதாக எண்ணிப்பார்க்கக்
கூட அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
"அருண், இல்லாட்டி ஒரு கோயில்ல வச்சுகிட்டா என்ன?" சொன்ன
பிறகு தான் அப்படி ஒரு கோயிலில் வைத்துக் கொண்டால் கூட
ராஜராஜனுடன் சம்பந்தம் பேசும் அவர்கள் ஏழைக் குடும்பத்தை
வெளியாட்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்ற எண்ணமும் வந்தது.
அருண் ஒரேயடியாக அவளது எல்லா ஆலோசனைகளையும் உதறித் தள்ளினான்.
"பார் காவ்யா. இது எங்கப்பா பங்கேட்கிற பிஸினஸ் கான்ஃபரன்ஸ்
அல்ல, இடம் அவருக்குப் பிடிக்குமா இல்லயான்னு யோசிக்க. இது
நம்ம கல்யாணம். பொண்ணு நீ, நீ இருக்கிற வீடு அது. இதை நாம
மாத்த முடியாது. அவரும் அம்மாவும் ஒரு மணி நேரம் அங்க
இருக்கிறதால் குறைஞ்சு போயிடமாட்டாங்க. நான் தீர்மானம்
செய்தாச்சு......"
அவளால் இன்னமும் இதை ஜீரணிக்க முடியவில்லை. அருணுக்கும்
முதலில் அவன் அம்மா வந்து சொன்ன போது உடனடியாக நம்பக்
கஷ்டமாகவே இருந்தது. "அவர் வர்றார். அன்னைக்கு சாயங்கால
அப்பாயின்மென்ட் எல்லாம் கேன்சல் செய்ய என் முன்னால் தான்
செகரட்டரிக்கு போன் செய்தார்." என்று அவள் சொன்ன போது அருண்
ஆவலோடு கேட்டான். "மெஷின் எப்படி ஒத்துகிச்சு?"
"இன்னொரு தடவை அவரை மெஷின்னு கூப்பிட்டால் தோளுக்கு மேல்
வளர்ந்தவன்னு பார்க்க மாட்டேன். ஓங்கி அறைஞ்சுடுவேன்,
சொல்லிட்டேன்" அம்மா நிஜமாகவே கோபப்பட்டாள்.
"சாரி, சாரி. உன் வீட்டுக்காரர் உடனடியாய் ஒத்துகிட்டாரா,
இல்லை ஆரம்பத்தில் தயங்கினாரா"
மாதுரி சாதுரியமாக பதில் சொல்லாமல் மழுப்பினாள். "உங்கப்பா
வர்றார். அவ்வளவு தான்"
அவள் எப்படி சாதித்தாள் என்பது அவனுக்குத் தெரியாவிட்டாலும்
அவளுக்கு அதை சுலபமாக சாதித்திருக்க முடியாது என்பது
அவனுக்குத் தெரியாமல் இல்லை. அதைப் பற்றி மேலும் யோசிக்க
விரும்பாமல் "காவ்யா தாமிராவை நேற்றைக்குப் பார்த்தேன்....."
என்று தாமிராவைப் பற்றி காவ்யாவிடம் சொல்ல ஆரம்பித்தான்.
"....என்ன ஒரு அழகு தெரியுமா அவள்...."
நிறுத்தி ஒரு கணம் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
காவ்யா கேட்டாள். "என்ன பார்க்கிறாய்?"
"இன்னொரு பெண் ரொம்பவே அழகுன்னு சொல்றேன். கொஞ்சம் கூட
பொறாமையே இல்லாம கேட்கிறாயே"
"இதில் பொறாமைப்பட என்ன இருக்கு?"
அவன் புன்னகைத்தான். சாதாரண பெண்களிடம் இருந்து
வித்தியாசப்பட்ட இந்தக் குணம் தான் ஆரம்பத்திலிருந்தே அவளிடம்
அவனை ஈர்த்தது. தாமிராவைச் சந்தித்ததைப் பற்றி விவரமாக
அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்.
தாயை சமையலறையில் பார்த்த தாமிரா திகைத்துப் போனாள்.
பலவிதமான உணவுப் பதார்த்தங்கள் தயாராக இருந்தன. தாமிரா
ஆச்சரியத்துடன் அவற்றைப் பார்வையிட்டாள். எல்லாமே
ஈஸ்வரனுக்குப் பிடித்தவை. தாய் நலமடைந்ததுமல்லாமல் இப்படி
விதவிதமாக சமைக்கும் அளவு முன்னேறியிருப்பது அவளை அசத்தியது.
அதை வெளிக் காட்டாமல் தாமிரா சொன்னாள். "இதென்ன எல்லாமே உன்
அண்ணனுக்குப் பிடிச்ச ஐட்டமாவே இருக்கு"
தாரா மகளைப் புன்னகையுடன் பார்த்தாள். "சமைக்கிறதுக்கு
முன்னால் உன்னைத் தேடினேன். நீ வெளியே போயிருந்தாய். நீ
உனக்குப் புடிச்சதை சொல்லு. நான் அடுத்த வேளைக்கு அதையெல்லாம்
செய்து வைக்கிறேன், சரியா"
தாமிரா சந்தோஷமாக தனக்குப் பிடித்ததை எல்லாம் வரிசைப்படுத்த
ஆரம்பித்தாள். பட்டியல் நீண்டு கொண்டே போனதைப் பார்த்த
ஈஸ்வரன் "போதும், போதும். ஒரேயடியாய் இத்தனையும் சமைக்க அவள்
என்ன மெஷினா?" என்று அவளைக் கட்டுப்படுத்தினார்.
தங்கை மேல் அவருக்கு இருந்த பாசம் வழக்கம் போல் தாமிராவை
பிரமிக்க வைத்தது. "அம்மா நீ ஏன் என்னோட நிறுத்திட்டே.
எனக்கும் இந்த மாதிரி பாசம் வைக்கிற ஒரு அண்ணனோ தம்பியோ
இருந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்"
ஒரு கணம் தாரா தடுமாறிக் கையில் வைத்திருந்த பாத்திரத்தை
நழுவ விட்டாள். ஈஸ்வரன் பதறினார். "தாரா...."
"ஒண்ணுமில்லைன்னா....கையில் இருந்தது நழுவிடுச்சு. அவ்வளவு
தான்" என்ற தாரா தன்னை சுதாரித்துக் கொண்டு மகளிடம் இயல்பாகக்
கேட்டாள். "நீ எங்கே போயிருந்தாய்?"
தாமிரா உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தாள். "எல்லாம் ஒரு பழைய
விஞ்ஞானியைப் பத்தித் தெரிஞ்சுக்கத்தான். அம்மா நான்
இன்னைக்கு அருண்னு ஒரு பத்திரிக்கைக் காரரைப் பார்த்தேன்.
என்ன ஸ்மார்ட் தெரியுமா? பார்த்தவுடனேயே எனக்கு நிறைய நாள்
பழகின மாதிரி ஒரு தோணல். ......." அங்கு தெரிய வந்தவற்றை அவள்
உற்சாகமாக சொல்லச் சொல்ல ஈஸ்வரனும் தாராவும் இடைமறிக்காமல்
கேட்டார்கள். தன் மகள் முகத்தில் தெரிந்த உற்சாகத்தையும்,
அருணைப் பற்றிச் சொன்ன போதெல்லாம் அவள் கண்களில் மின்னிய
ஒளியையும் பார்த்த தாராவுக்கு வயிற்றைக் கலக்கியது. ஈஸ்வரன்
மருமகளைப் பார்ப்பதை விட்டு விட்டு தங்கையைக் கவலையுடன்
பார்க்க ஆரம்பித்தார்.
கடைசியில் தாமிரா மூச்சு வாங்காமல் கேட்டாள். "அம்மா நீ, ‘நீ
நான் தாமிரபரணி’ படிச்சிருக்கியா?"
ஈஸ்வரன் கைகள் நாற்காலியை இறுக்கிப் பிடித்தன. தாரா ஒரு கண
மௌனத்திற்குப் பின் சொன்னாள். "படிச்சிருக்கேன்"
"அதோட ஹீரோ தான் என்னோட சயிண்டிஸ்ட்டுங்கிறது ஆச்சரியமாய்
இருக்கு இல்லையாம்மா. நான் இனி மேல தான் அந்த புக் படிக்கப்
போறேன். அம்மா உனக்கு அந்த சேதுபதியைத் தெரியுமா? அவர் உன்
காலேஜ்ல தான் படிச்சவராம்"
தாரா ஒருவிதத் தயக்கத்துடன் சொன்னாள். "தெரியும். ஆனா அப்ப
அவர் கதை எழுதக் கூடியவர்னு தெரியாது"
ஈஸ்வரன் தன் கட்டுப்பாட்டையும் மீறி நிகழ்வுகள் நடப்பதை
உணர்ந்தார். அவரது தங்கையால் கூசாமல் பொய் பேச முடியாது
என்பதை அவர் அறிவார். இது போன்ற விஷயங்களில் அவள் என்றுமே
அவருக்கு நேர் எதிர்மாறாக இருந்தாள். இந்த உலகத்தில் இன்னமும்
இப்படிப்பட்ட களங்கமில்லாத, பவித்திரமான ஜீவன்கள் இருக்க
முடிவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. மாசுகள் நிறைந்த இந்த
உலகத்தால் கூட களங்கப்படுத்த முடியாத இவ்வளவு நல்லவளாக
இருப்பது தான் இவளுடைய இத்தனை துக்கங்களுக்கும் காரணம் என்று
நினைக்கையில் இதயத்தில் ரத்தம் கசிந்தது.
தாமிரா சொன்னாள். "அருணுக்கு மட்டும் உனக்கு சேதுபதியைத்
தெரியும்னு தெரிஞ்சால் அடுத்த ஐந்தாவது நிமிஷம் இங்கே
இருப்பார்...."
மருமகளின் உற்சாகத்தை ஈஸ்வரன் உடனடியாக வெட்டினார். "தாமிரா
என்ன ஆனாலும் சரி இந்த வீட்டுக்கு அருண், அவன், இவன்னு
பத்திரிக்கைக்காரங்க வர்றதை நான் ஒத்துக்க மாட்டேன்."
ஈஸ்வரனுக்குப் பத்திரிக்கையாளர்கள் மேல் இருந்த வெறுப்பு
தாமிரா அறிந்ததே. சிறு வயதில் இருந்தே அவர் வீட்டில் எந்தப்
பத்திரிக்கையாளரும் வந்து அவள் பார்த்ததில்லை என்பதால் அருண்
வரவை எதிர்க்க அவருக்கு வேறு பிரத்தியேக காரணம்
இருக்கக்கூடும் என்று தாமிராவுக்கு சந்தேகம் வரவில்லை.
"சரி. அவரை வரச்சொல்லலை, சரி தானே. அம்மா உனக்கு அந்த
விஞ்ஞானியைப் பத்தி ஏதாவது தெரியுமா?"
(தொடரும்)