அதிகாலை
நேரம். அந்த முதியவர் வீட்டு வாசலில் ஆண்களும் பெண்களுமாக
ஐந்து சாலைப் பணியாளர்கள் கூடியிருந்தனர். முதியவர்
அவர்களிடம் ஏதேதோ கட்டளைகள் பிறப்பித்த வண்ணம் இருந்தார்.
வீட்டின் முன்புறம் சாலையின் நடுவே போக்குவரத்துக்கும்,
பாதசாரிகளுக்கும் இடையூறாக இருந்த பெரிய பள்ளம்
ஒன்றை இன்று செப்பனிட்டு மூட ஏற்பாடு செய்திருந்தார்
அந்த முதியவர்.
முதியவருக்கு வயது சுமார் எழுபத்தி ஐந்துக்கு குறையாது. பட்டாளத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றபின் ஒரு அரசுத்துறை நிறுவனத்தில் பணியாற்றி, தற்சமயம் பென்ஷன் வாங்கி வருபவர். சுதந்திரப் போராட்டத் தியாகியும் கூட. சொந்த பந்தம் என்று சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக யாரும் இல்லை, தனிக்கட்டைதான்.
சரளைக்கற்கள், மணல், சதுரமான சிறிய சிறிய சிமிண்ட் ப்ளாக் கற்கள், சிமிண்ட் கலவை, இரும்புச்சட்டிகள், கொத்துக்கரண்டிகள், மம்முட்டி, கடப்பாரை என பல்வேறு பொருட்கள் வந்து இறங்கி வேலை சுறுசுறுப்பாகத் தொடங்கியது. நல்ல வேளையாக கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யாமல் வெய்யில் அடித்து வருகிறது. தேங்கிய நீரையும் பூமி குடித்து தன் தாகத்தை தணித்துக்கொண்டிருந்தது.
அந்தப் பெரிய பள்ளம் இப்பொழுது முழுவதும் மூடப்பட்டு அழகாக சிமிண்ட் பூசப்பட்டு சமதளமாக்கப்பட்டுவிட்டது. அருகில் ஆங்காங்கே இருந்த சிறு சிறு குழிகளும் செப்பனிடப்பட்டு விட்டன. சாலை மராமத்துப் பணிகள் முடிந்து அனைத்து உபகரணங்களும் ஒரு தள்ளுவண்டியில் ஏற்றப்பட்டு புறப்படத் தயார் நிலையில் ஓரமாக நின்றது. சாலையின் செப்பனிடப்பட்ட அந்த ஒரு பகுதி மட்டும், சுத்தமாகக் கூட்டப்பட்டு மேடு பள்ளம் ஏதுமின்றி இப்பொழுது வெகு அழகாகத் தோற்றமளித்தது.
முண்டாசு
கட்டிய தலைமை மேஸ்திரியும், அவரின் உதவியாளர்களும்,
முதியவரிடம் விடை பெற்றுச்செல்ல வந்தனர். முதல்
நாள் கொடுத்த முன்பணம் ரூபாய் ஐநூறு போக, மீதிப்பணம்
ஐநூறு ரூபாயும், ஒரு வேட்டியும், ஒரு சேலையும்,
பத்து கிலோ அரிசியும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயும்,
அந்தக் குழுவினருக்கு தான் ஒத்துக் கொண்டபடி, முதியவரால்
நன்றி கூறி வழங்கப்பட்டது.
விஷயத்தைக் கேள்விப்பட்டு, அந்த வார்டு முனிசிபல் கவுன்சிலர் அங்கு வந்தார். முதியவருக்கு வணக்கம் கூறிய கவுன்சிலர், "அவசரப்பட்டு உங்க கைப்பணத்தை ஏன் செலவு பண்றீங்க? இந்த ரோட்டை முழுவதும் புதுப்பித்து தார் ரோடு புதுசா போடலாம்னு முனிசிபாலிட்டியில் முடிவு செய்து தீர்மானமும் நிறைவேற்றியாச்சு. மழைக்காலம் முடிந்ததும் டெண்டர் விட்டுடுவாங்க" என்றார்.
"இப்போ நான் செலவு செய்த பணமும் நம் சர்க்கார் கொடுத்தது தான், தம்பி. 'வெள்ள நிவாரண நிதி' என்று எனக்கு நம்ம ரேஷன் கடை மூலம் நேத்து கொடுத்தாங்க. எனக்கு நல்ல வேளையா வெள்ளத்தினால் நேரடியா எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சொல்லப்போனால், அந்தப் பணத்தையும், பொருட்களையும் வாங்கிக் கொள்ளவே, என் மனசாட்சி இடம் தரவில்லை. கொடுக்கற பணத்தை வாங்கிக்காட்டி உங்க பேரைச் சொல்லி வேறு யாராவது வாங்கிட்டுப் போய்டுவானுங்க சிலபேர் சொன்னாங்க. அதனால் தான் நானே போய் வாங்கியாந்துட்டேன்.
நடுரோட்டுல இந்தப் பெரிய குழி இருப்பதால் ரோட்டைக் கடந்து போற ஜனங்கள் ரொம்ப கஷ்டப்படறாங்க. போன வாரம் மழைத் தண்ணீர் தேங்கினதுலே குழி இருக்கறது தெரியாம மூன்று ஸ்கூட்டர்களும், இரண்டு ஆட்டோக்களும் கவிழ்ந்திடுச்சு. மழைக்காலம் முடிந்து, டெண்டர் விட்டு, புது ரோடு போடுவதற்குள், இன்னும் எவ்வளவு பேர் இந்தப் பெருங்குழியினால் பாதிக்கப்படுவாங்களோ, தெரியவில்லை. இதற்கிடையில் பொதுத் தேர்தல் வேறு வந்துவிடும். இன்னும் நிறையக் குழிகளைத் தோண்டி கொடியை நட்டுட்டுப் போய்டுவாங்க.
நாட்டுல எவ்வளவோ பேர், எவ்வளவோ விதமாக கஷ்டப்படறாங்க. ஏதோ நம்மால ஆனது, நம் கண் எதிரே தினமும் பார்க்கும் இந்தக் குழியையாவது மூடணும்னு தோணிச்சு; மூடிட்டேன். எனக்கே நாளைக்கு திடீர்னு ஏதாவது ஆச்சுன்னா, ஒண்டிக்கட்டையான என்னை அக்கம் பக்கத்து ஜனங்க கஷ்டப்படாமல் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டாமா?" எனக் கண் கலங்கியபடி கூறி முடித்தார் அந்த முதியவர்.
******