அம்மாவிடம்தான்
பூஜா முழு நேரமும் இருக்கிறாள். இப்போதும்.
வெளியில் மழை
கொட்டித் தீர்க்கிறது. வீட்டு வாசலில் இருந்த பள்ளம்
கண்ணுக்குத் தெரியாமல் ஜலம்.
"பாட்டி.. இவ்வளவு
தண்ணியும் இத்தனை நாள் எங்கே இருந்தது"
"ம்ம்..
பகவான்கிட்டே"
பூஜாவின் சிரிப்பு
அழகு. எத்தனை சத்தமாகக் கேட்டாலும்.
"போ.. பாட்டி..
நீ பொய் சொல்றே.. அப்பா சொல்லியிருக்கார்.. கடல்ல தான்
இவ்வளவு ஜலமும் இருந்தது. அப்புறம் வெய்யில்ல ஆவியாகி
வானத்துக்குப் போயி இப்ப மழையாக் கொட்டறது.."
அம்மா பேசாமலிருந்தது பூஜாவுக்கு உறுத்தியிருக்க வேண்டும்.
"பாட்டி.. நான்
சொன்னது சரியா"
"சரிதான்"
"இல்ல.. நீங்க
வேற ஏதோ சொல்ல நினைக்கிறீங்க"
பூஜா நிஜமாகவே
சமர்த்து. புத்திசாலி. மனதைப் படிப்பவள். அப்படியே
வசந்தியிடமிருந்து இந்தக் குணம் வந்திருக்க வேண்டும்.
அம்மாவின் முகத்தில் நிச்சயம் இந்த நிமிஷம் சிரிப்பு
மலர்ந்திருக்க வேண்டும். அறைக்குள் இருந்தபடி அதை யூகிக்க
முடிகிறது ராஜனால். அம்மாவின் குரல் கேட்டது.
"பூஜா.. நம்ம
ஊர்ல எப்பவும் வெய்யில்.. கடலும் எப்பவும் இருக்கு.. ஆனா ஏன்
எப்பவும் மழை பெய்யறதில்லே.. சொல்லு.. "
பூஜாவின் சின்ன
மூளைக்கு இது குழப்பம்தான்.
"தெரியலே பாட்டி"
அம்மா ஜெயித்து
விட்டாள்.
"அதனாலதான்
சொன்னேன்.. பகவான்தான் முடிவு பண்றார்.. எப்ப மழை கொட்டணும்னு"
பூஜாவின் கவனம் இப்போது வெளியில் கொட்டும் மழை மீது திரும்பி
விட்டது.
யாரால் கொட்டினால் என்ன.. பூமி நனைகிறது. உடம்பும் மனசும்
குளிர்கிறது. ஊரே ஏர் கண்டிஷன் செய்த மாதிரி ஆகிவிட்டது.
அதுவும் வெகு நாட்களாய்க் காத்திருந்தபின் மழை வந்தால் அதன்
சுகமே தனி. எதிர்பார்த்துக் கிடைக்கிற பலன். கனவு மெய்ப்பட்ட
மாதிரி. வாழ்வில் பல விஷயங்கள் அர்த்தமற்றுப் போகும் போது
திடீரென ஒரு வசந்தம் வந்து கதவைத் தட்டிய மாதிரி.
"அப்பா.. நான்
நனைஞ்சுட்டேன்"
பூஜா எதிரில்
வந்து நின்றாள். முன் முடியிலிருந்து நீர் சொட்டியது.
கவுனிலும் ஈரம்.
"எட்டிப்
பார்த்தேம்பா.. வானத்தில யார் நிக்கறான்னு. ஒண்ணுமே தெரியலே..
ஒரே தண்ணி.. " ராஜன் எழுந்து டவலை எடுத்து வந்தான்.
"நானே
துடைச்சுக்கிறேன்பா"
அம்மா எங்கே
போனாள்.. இவள் மழையில் நனைந்தது அம்மாவுக்குத் தெரியாதா..
ஹாலுக்குள் எட்டிப் பார்த்தான். அம்மா இல்லை. வீட்டின்
பின்புறம் துளசி மாடத்தை வெறித்துக் கொண்டு அம்மா நின்றாள்.
அம்மாவும் நனைந்திருந்தாள்.
"அய்ய..
பாட்டியும் நனைஞ்சிட்டாங்க.."
பூஜா டவலை
நீட்டியது.
"என்னம்மா"
"எப்படிரா..
அவளுக்கு மனசு வந்தது.. " விம்மினாள்.
பூஜா மறுபடி
ஹாலுக்கு ஓடி விட்டாள்.
"அம்மா.. பிளீஸ்மா..
அந்தப் பேச்சு எதுக்கும்மா இப்ப"
"பார்க்கப்
பார்க்க நெஞ்சு ஆத்துப் போறதுரா.. என்ன பேச்சு.. என்ன
சூட்டிகை.. குழந்தையை விட்டுட்டுப் போக எப்படிரா அவளுக்கு
மனசு வந்தது.. ஒரு ஜோசியன் சொல்லலியே.. பொருத்தம் பார்த்தப்ப..
இப்படி கை கழுவிட்டுப் போவான்னு.. அட. பிரசவத்துல எத்தனையோ
பேர் குழந்தையை விட்டுட்டுப் போறா.. அல்பாயுசுன்னு அப்புறம்
மனசைத் தேத்திக்கிறோம்.. இப்படி முழுசா ஒரு ரத்தினத்தைக்
கண்ணு முன்னால பார்த்துட்டு கல் மனசாப் போவாளா ஒருத்தி.."
அம்மா புலம்பி
ரொம்ப நாளாயிற்று. உள்ளே அடைபட்டுக் கிடந்தது இன்று
பீரிட்டுக் கிளம்புகிறது. ராஜன் நகர்ந்து வந்து விட்டான்.
புலம்பித் தீர்த்து விடட்டும். இன்னும் ஆறு மாதத்திற்குத்
தாங்கும். உள்ளே பூட்டிப் பூட்டி வைத்தால் அதன் சுமையை
அம்மாவால் தாங்க முடியாது. பூஜா தலையைத் துவட்டிக் கொண்டு அதே
டவலை தலையைச் சுற்றி வைத்திருந்தது. ராஜன் தன்னைக்
கவனிக்கிறானா என்று ஓரக் கண்ணால் பார்த்தது. அருகில் போய்
அமர்ந்தான். வேண்டுமென்றே சற்று தள்ளி அமர்ந்தது.
"பூஜாவைக் காணோமே"
என்றான் வேறெங்கோ பார்த்தபடி விளையாட்டாக.
"பூஜா சாமிகிட்டே
போயாச்சு" என்றாள் பூஜா.
ராஜன்
திடுக்கிட்டுத் திரும்பினான்.
"என்ன சொல்றே"
அவன் பதற்றம்
அவளுக்கு ஏதோ உணர்த்தியிருக்க வேண்டும்.
"இல்லப்பா..
நீங்கதானே சொன்னீங்க.. அம்மா சாமிகிட்டே போயிருக்காங்கன்னு..
நானும் அங்கே போனா அம்மாவைப் பார்க்கலாம்னு.."
வசந்தியைப்
பற்றிய பேச்சு வந்தபோது சொன்ன பொய் இப்படி திசை திரும்பும்
என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு குழந்தையிடம் உன் அம்மா ஓடிப்
போய்விட்டாள் என்றா சொல்ல முடியும்.
"அந்த மாதிரி
இனிமேல் சொல்லாதே பூஜா"
அவன் குரல்
நைந்திருந்தது. பூஜா அவனருகில் நெருங்கி வந்தாள். மடியில்
படுத்துக் கொண்டாள். கால்களை சோபாவின் மேல் வைத்துக் கொண்டாள்.
அவன் கையைப் பற்றி தன் கன்னத்தின் மீது வைத்துக் கொண்டாள்.
அடிப் பாவி.. இவ்வளவும் வசந்தியின் மேனரிசம். எவளை மறக்க
முடியாமல் மனசு தவிக்கிறதோ அவளையே நினைவூட்டும் நிகழ்வுகள்.
அம்மா உள்ளே வந்தாள்.
"தூங்கிட்டாளா..
அடடா.."
"பாட்டி.. நான்
முழிச்சுகிட்டுதான் இருக்கேன்"என்றாள் கண்ணைத் திறக்காமல்.
"அடி என் செல்லம்"
அம்மா அந்தப்
பக்கம் அமர்ந்து பூஜாவின் கால்களைத் தன் மடிமீது வைத்துக்
கொண்டாள். இரண்டு பேர் மனசிலும் அலையடித்துக் கொண்டிருந்தது.
பெண்ணலை. வசந்தி..
டூர் போகிற
நாட்களில்தான் பூஜாவை சமாளிப்பது சிரமம். அதாவது முன்பெல்லாம்.
அந்த அழுகையைப் பார்த்து ஒரு முறை ரயில் ஏறாமல் திரும்பி
வந்து விட்டான். பதினொரு மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டியதும்
அம்மா பயத்துடன் எட்டிப் பார்த்து அதை விட அதிகமாய் பயந்ததும்
இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
'ஏன் திரும்பி
வந்துட்டே'
'பூஜா எங்கே'
'அவ அப்பவே
தூங்கிட்டா'
படுக்கையில்
பூஜாவின் தேம்பல் தூக்கத்திலும் புரிந்தது. முழுதாகச்
சமாதானமாகவில்லை. 'முக்கியமான மீட்டிங்னியே'
ராஜன் பதில்
சொல்லவில்லை. அந்த நிமிஷம் பூஜா மட்டுமே முக்கியமென்று
தோன்றியது. பூஜா எழுந்திருக்க எட்டு மணி ஆகும் அப்போதெல்லாம்.
அவனும் அருகிலேயே படுத்திருந்தான். தூக்கம் முழுசுமாகக்
கலைந்து விட்டது. பூஜா கண் விழிக்கும் போது முதலில்
பார்வையில் படவேண்டும். எட்டு அடித்து பத்து நிமிஷம்.
பூஜா கண் திறந்து
பார்த்தாள்.
"ஹாய் செல்லம்
குட் மார்னிங்"
"அதுக்குள்ளே
போயிட்டு வந்துட்டீங்களா"
அம்மா ஏதோ சொல்ல
வந்தாள். ராஜன் தடுத்து விட்டான். அப்புறம் அம்மா
சொல்லியிருக்க வேண்டும். பூஜாவிடம் மெல்ல மெல்ல மாற்றம்
வந்தது. டாட்டா காட்ட ஆரம்பித்தாள். ராஜனுக்குள் அழுகை
பீறிடும். பூஜாவுக்கு இப்படி நேர்ந்திருக்கக் கூடாது. அப்பா
இல்லாவிட்டால் அம்மா என்று சகஜமாக நிகழ வேண்டிய விஷயங்கள்
இப்போது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.
அலுவலக
நிர்ப்பந்தங்களின் காரணமாக ராஜன் தாமதமாக வரும் போதெல்லாம்
பூஜாவுக்காக ஒரு பரிசும் உடன் வரும்.
அம்மா கூடச்
சொன்னாள்.
'வேண்டாம்பா.. அவ
இதை எதிர்பார்க்கலே'
ராஜன்
பெருமூச்சுடன் சொன்னான்.
'தெரியும்மா..'
மனசாட்சியின்
உறுத்தலுக்கு அவன் தரும் விலை.
'வேற யாருக்குச்
செய்யப் போறேன்'
தனக்கான பணியை
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முடிக்க அவன் படும்
சிரமத்திற்கு வேறு விதமான விமர்சனங்களும் இருந்தன.
இன்னொரு அலுவலரை
அவருக்கான வேலை முடிவுறாமல் நின்றதை மேலாளர் சுட்டிக் காட்டி
ராஜனோடு ஒப்பிட்டும் பேசினார்.
'ஸார்.. எனக்கு
பேமிலி இருக்கு.. ஆபீஸ் மாதிரியே பர்சனல் லைஃப் முக்கியம்..
'
அத்தோடு நில்லாமல்
செக்ஷனில் சத்தமாய்ப் பேசினான்.
'பொண்டாட்டி
இல்லேன்னா ஆபீஸ்லேயே கிடக்கலாம்.. என்ன செய்யறது.. '
ராஜன் அவனுக்குப்
பதில் எதுவும் சொல்ல முற்படவில்லை. அவரவர் கஷ்டம் அவரவருக்கு.
இன்றும் தாமதம். ஸ்டேட்மெண்ட் முடியவில்லை. கணினி அதற்கான
நேரத்தை எடுத்துக் கொண்டு குடுவை சுழன்றபடி இருந்தது. ராஜன்
கண்மூடிச் சில நிமிடங்கள் இருந்தான். கண் திறந்து பார்த்தபோது
இன்னமும் கணினி தயார் நிலைக்கு வரவில்லை. கீழே அவனுக்காக ஒரு
ஈ மெயில் காத்திருப்பதை சிவப்புக் கொடி அசைந்து உணர்த்தியது.
தன்னிச்சையாய் மௌசை அழுத்தினான். அனுப்புனர் பெயர் உஷா
என்றிருந்தது.
'யாரது..'
கணினிக்
கடிதத்தைக் கிளிக் செய்தான்.
'உங்களோடு பேச ஆசை.
நீங்களும் விரும்பினால் பதில் போடுங்கள். கட்டாயமில்லை.
போட்டால் ரொம்ப சந்தோஷம்.'
என்ன விளையாட்டு
என்று தோன்றியது. மெயிலை அழித்துவிடலாமா.. தவறுதலாய் மௌசைக்
கிளிக் செய்ய 'இந்த விலாசத்தைக் காப்பாற்றி வைக்கட்டுமா'
என்றது. வேண்டாம் என்று ஒரு குரல் மனதுக்குள் சொல்ல இன்னொரு
மனது பதில் போடு என்றது. அவனையும் அறியாமல் 'பதிலை'
அழுத்தினான். என்னவென்று சொல்ல.
'நீங்கள் யாரென்று
தெரியவில்லை. என்னைப் பற்றி உங்களுக்கு எந்த அளவு தெரியும்
என்றும் புரியவில்லை. மன்னித்து விடுங்கள். நீங்கள்
விரும்பும்படி என்னால் இந்தக் கடித விளையாட்டைத் தொடர
முடியாது. '
அனுப்பி விட்டான்.
இப்போது கணினி தனது வேலையை முடித்துக் கொண்டு ரிசல்ட்டைக்
காட்டியது. சுத்தமாய் டாலி. ஹப்பாடா.. இனிக் கிளம்பலாம்.
இன்று பூஜாவைச் சீக்கிரமாய்ப் பார்க்கலாம். பிரிண்ட் எடுத்து
வைத்து விட்டுத் திரும்பியபோது மறுபடியும் கொடி ஆடியது. யார்..
உஷாவா.. மனதுக்குள் ஏதோ சிறகடிக்க கிளிக் செய்தான். உஷா!
' நன்றி.. பதில்
போட்டதுக்கு.
அப்பா..
ஏமாந்துட்டியா.. என்னோட இன்னொரு பேர் உஷா.. ஞாபகம் இருக்கா.
நீ
கத்துக் கொடுத்த மாதிரி கரெக்டா மெயில் அனுப்பியிருக்கேன்
தானே.. வித் லவ் பூஜா'
உடன் பூஜாவின்
அழகான வண்ணப் படம்.
நன்றி: கல்கி
****