Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

கதை
கவிதை
தொடர்
உள்முகம்
கைமணம்
கைமருந்து
சுவடுகள்
ஸ்பெஷல்ஸ்
பூஞ்சிட்டு
மாணவர் சோலை
தமிழாய்வு
நேர்காணல்
தமிழ் வளர்க்கும் அறிஞர்கள்
ஆன்மீகம்
சாதனையாளர்கள்
கடவுள் எழுதிய கதைககள்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage
'மனவெளி
- நிலா
உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 300

19 பிப்ரவரி 2007

bharathanatya
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

 

"இது நம்ம சுவாதி இல்லைங்க... நம்ம புள்ளையத் தொலைச்சிட்டோம்." அழுகையூடே பேசினாள் காந்திமதி.

"என்னவானாலும் சாப்பிட்டுப் பேசிக்கலாம், காந்தி. எழுந்து சாப்பிடு. பட்டினி கிடந்தா உன் உடம்புக்கு ஒத்துக்காது" சிவராமன் ஆதரவாய்ச் சொன்னார்.

"மனசே ஆறமாட்டேங்குதுங்க... எல்லாத்துக்கும் எதுத்து எதுத்துப் பேசறா. போனா போகுதுன்னு விட்டா இப்படி சாமி காரியத்திலயும் சொன்ன பேச்சு கேக்க மாட்டேன்னா என்ன பண்ண முடியும் சொல்லுங்க... அவளுக்கு ஏதாவது ஆகிறக்கூடாதுன்னுதானே சொல்றேன்"

சிவராமனும் நெருஞ்சிக் காட்டில் நடப்பது போன்ற அவஸ்தையில்தான் இருந்தார். 'சுவாதி நல்ல பெண்ணாகத்தானிருந்தாள். ஆனால் இரண்டு வருட அமெரிக்கப் படிப்பு அவளை அடியோடு மாற்றிவிட்டிருக்கிறது' என நினைத்துக்கொண்டவருக்கு நீண்டதாய்ப் பெருமூச்சு எழுந்தது.

எம்.எஸ் முடித்த கையோடு இரண்டு நாள் முன் இந்தியா திரும்பிய மகளைக் கண்டதில் சிவராமனுக்கும் காந்திமதிக்கும் நெஞ்சுகொள்ளா சந்தோஷம், இப்போதுதான் அவளைப் புதிதாய்ப் பெற்றது போல். ஆனால் சுவாதியின் போக்கினால் எல்லாம் துளித்துளியாய் வடிந்து கொண்டே வந்தது.

"நல்ல வேளைடா, அமெரிக்கன் யாரையும் நீ லவ் பண்ணிடலை" என்று அவர் கேலியாய்ச் சொன்னதற்கு, "அப்படி லவ் பண்ணினால் என்னப்பா தப்பு? அவனும் மனுஷன்தானே" என சிரித்துக்கொண்டே எதிர்க் கேள்வி கேட்கிறாள். பக்கென்றிருந்தது சிவராமனுக்கு. அவள் சிரித்துக் கொண்டே கேட்டாலும் அவள் அதனை விளையாட்டாய்ச் சொல்லவில்லை என்பது அவருக்குப் புரிந்தே இருந்தது.

"மனுஷந்தான். ஆனா நம்ம ஊர்ல இருக்கற பாசம், பற்றெல்லாம் அமெரிக்காவில இருக்காதில்லடா. அதனாலதான் நீ இங்கே செட்டிலாகணும்னு பிடிவாதமா நின்னுட்டேன்" என்ற தந்தையிடம், "ஆனா அங்கே இருக்கிற சுதந்திரம் இங்கே கிடைக்காதேப்பா. இங்கே நமக்கு சோஷியல் ப்ரஷர் அதிகம்" என்று வாதம் செய்கிறாள்.

"யார் வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் வாழலாம்ங்கறது நல்லாவா இருக்கு? ஒரு ஒழுக்கம் வேண்டாம்?"

"உங்களுக்கு அந்த கல்ச்சர் தப்பா தெரியுது... அவங்களுக்கு நம்மளைப் பாத்தா அம்பது வருஷம் பின்னாலிருக்கற மாதிரி இருக்கு"

இப்படி முதல் நாள் ஏர்போர்ட்டிலிருந்து வரும்போதே ஆரம்பித்த கருத்து வேறுபாடு எடுத்ததிலெல்லாம் தொடர்கிறது. பழைய பெண்ணாய் இருந்திருந்தால் அவர் கேலிக்கு "நான் உங்கள் பொண்ணுப்பா. அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்" என்றுதான் சொல்லியிருப்பாள். இவ்வளவு பேசியிருக்க மாட்டாள்.

ஆடை, அலங்காரம் போன்ற சமாச்சாரங்களில் கூட சுவாதியின் ரசனைகள் மாறிவிட்டதில் காந்திமதிக்கு வருத்தம்தானென்றாலும் இன்றைக்குக் காலையில் நடந்த சம்பவம்தான் தன் மகள் தன்னைவிட்டு வெகு தூரம் போய்விட்டாள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டியது.

வழக்கம்போல ஆறு மணிக்கெல்லாம் எழுந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம், "உன் ஃப்ரண்ட்ஸையெல்லாம் பாத்திட்டியாடா? திருப்பதி போகணும்... உனக்கு எப்ப வசதிப்படும்னு சொல்லு" என்றபடியே வந்து அமர்ந்தாள் காந்தி.

"திருப்பதியா? நீங்களும் அப்பாவும் போயிட்டு வாங்களேம்மா. நான் எதுக்கு?"

"நல்லா சொன்னே போ... நீதானே அங்கப்பிரதட்சணம் பண்ணணும்? நீ திரும்பி வந்ததும் பண்ணச் சொல்றதா வேண்டுதல் போட்டிருக்கேன். பெருமாள் கோச்சுக்குவார்" விளையாட்டாய்ச் சொன்னாள் காந்தி.

சுவாதி தீர்க்கமாய் தாயின் முகத்தைப் பார்த்து, "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைம்மா... வேண்டாமே" என்றாள் நிதானமாய்.

காந்திக்கு சுருக்கென்றிருந்தது.

"நீ எல்லாத்துக்கும் எதுத்து எதுத்துப் பேசினப்பவே நினைச்சேன் எங்கயோ தப்பு நடந்திருக்குன்னு. கிறிஸ்டியனா மாறிட்டியாடி? சொல்லித் தொலை" படபடவென்று பொறிந்தாள் காந்தி.

சுவாதிக்கு அனிச்சையாய் சிரிப்பு வந்தது.

"நல்ல கற்பனைம்மா உங்களுக்கு. எனக்கு சாமி மேல நம்பிக்கை போயிடுச்சு... அவ்வளவுதான். வேறொண்ணுமில்லை. சரியா?" தாயை சமாதானம் செய்யும் நோக்கில் மென்மையாய்ச் சொன்னாள் சுவாதி.

"என்னது, அவ்வளவுதானா? சாமி மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்றது உனக்கு சின்ன விஷயமா போச்சா? இதான் இப்ப ஃபேஷனா? இதைத்தான் அமெரிக்காவில கத்துக்கிட்டியா?" காந்தியின் முகமெல்லாம் ரத்தம் பாய்ந்து கோபத்தால் சூடேறிக்கொண்டே வந்தது.

சுவாதி பதற்றமே இல்லாமல், "இதென்னம்மா பெரிய விஷயம். உங்களுக்கு சாமிதான் எல்லாமேங்கற மாதிரி எனக்கு சாமி ஒண்ணுமே இல்லை... ச்ச்ச்சின்ன வித்தியாசம் தான்" என்றாள் பெரிய புன்னகையோடு.

"நீ இப்படியெல்லாம் பேசறேன்னு தெரிஞ்சா உன்னை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க? இதுக்கா உன்னை அமெரிக்கா அனுப்பிச்சோம்?" சொல்லிவிட்டு விருட்டென்று போய்ப் படுக்கையில் விழுந்தவள்தான். அந்தக் கோபம் இயலாமையாய், சுய பச்சாதாபமாய், ஏமாற்றமாய்க் கண்களில் வழிந்து கொண்டிருக்கிறது.

காந்தியின் பிடிவாதம் சிவராமனுக்குத் தெரியும். எத்தனை முறை இந்த அழுகை அவரை ஜெயித்திருக்கிறது!

"அம்மா சாப்பிடாம அழுதுக்கிட்டிருக்காடா..." சுவாதியிடம் மெல்லிய குரலில் சொன்னார் சிவராமன். அதிலிருந்த எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டவளாய், அம்மாவின் அறையை நோக்கி நடந்தாள் சுவாதி.

காந்தியின் படுக்கைக்கருகில் கீழே அமர்ந்தாள்.

"அம்மா, இப்ப நீங்க பண்றதுக்குப் பேரு எமோஷனல் ப்ளாக்மெயில், தெரியுமா? உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் அவ்வளவு ஒண்ணும் வித்தியாசம் கிடையாது" என்றாள் நையாண்டியாக.

காந்தி பதிலேதும் சொல்லாமல் மேலும் கண்ணீர் விட்டபடி படுத்திருக்க, "என்ன பிரச்சனை உங்களுக்கு? எதுக்கு இப்படி ஒரு ஆர்ப்பாட்டம்?"

"எங்க பொண்ணு எங்களுக்கு இல்லாமப் போயிட்டாளே, வருத்தமா இருக்காதா?" அழுகையின் சுருதி கூடியது.

சுவாதிக்குப் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள சிரமமாயிருந்தது.

"உங்களை மாதிரியே சிந்திச்சாதான் உங்க பொண்ணா? எனக்குன்னு கருத்தொண்ணும் இருக்கக் கூடாதா?"

காந்தி பேசாமல் இருந்தாள்.

"உங்களுக்கு தியாகராஜ பாகவதர் பிடிக்கும்னா எனக்கும் அவரைப் பிடிச்சுதான் ஆகணுமா? என்ன இது சின்னப்புள்ளத் தனமா இருக்கு" சூழலை இலகுவாக்க முயன்றாள்.

"மனுஷங்களும் கடவுளும் ஒண்ணா?"

"கண்ணுல தெரியற மனுஷங்களே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா தெரியறாங்கன்னா, கண்ணுக்கே தெரியாத கடவுளை நீங்க பாக்கற மாதிரியே நானும் பாக்கணும்னா எப்படிம்மா?"

காந்திக்கு அவள் பேசுவது புரிவது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது. ஆனாலும், "கல்யாணம் ஆகற வரைக்கும் நீ எங்க பொறுப்பு. நாங்க சொல்றபடி கேட்டு நடக்கணும். அப்புறம் நீயாச்சு உன் புருஷனாச்சு" என்றாள் விட்டுக் கொடுக்காமல்.

"உங்களுக்கோ அல்லது நாளைக்கு என் ஹஸ்பெண்டுக்கோ பிடிக்கணும்கறதுக்காக சாமி நம்பிக்கை இருக்கற மாதிரி ஒரு நாள், ஏன் ஒரு வருஷம் கூட பாசாங்கு செய்யலாம். ஆனா அதுக்கப்புறம் மூச்சு முட்ட ஆரம்பிச்சிரும். மனசில நம்பிக்கை இல்லைன்னா இல்லைதான். பால் வெள்ளைங்கற மாதிரி இதுவும் ஒரு உண்மை. யதார்த்தமா இதை ஏத்துக்கணும்"

"சாமி இல்லைங்கறியா?" காந்தி காட்டமாய்க் கேட்டாள்.

"அந்தப் பிரச்சனைக்கே நான் வரலை. நீங்க சாமி இருக்குன்னு நினைக்கிறீங்களா, நினைச்சுக்கோங்க... நான் இல்லைன்னு நெனைக்கிறேனா... நெனச்சிட்டுப் போறேன். அப்படி அப்படியே இருக்கறதுல என்ன தப்பு?"

காந்தி பதில் சொல்லாமல் அவளை முறைத்தபடி இருந்தாள்.

"சரி, உங்க ஸ்டைலுக்கே நானும் வர்றேன். நான் நம்பாத ஒரு விஷயத்தை நீங்க நம்பறதுனால உங்ககிட்ட கோவிச்சிக்கிட்டு நான் இந்த நிமிஷத்திலிருந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போறேன். நீங்க சாமி இல்லைன்னு ஒப்புக்கற வரைக்கும் ஒரு துளி தண்ணி கூட குடிக்கப் போறதில்ல. பாப்போம் நம்மள்ல யாரு வின் பண்றாங்கன்னு" சொல்லிவிட்டு விடுவிடுவென வெளியேறினாள் சுவாதி.

காந்தி பதட்டமும் கோபமுமாய் எழுந்தமர்ந்தாள். "என்ன பேச்சு பேசறா, பாருங்க"

கதறிய தொலைபேசி சூழலின் பதட்டத்தை இன்னும் அதிகரித்தது. அரைமனதாய் ரிசீவரை எடுத்துப் பேசிய சிவராமனின் முகத்தில் புன்னகைக் கீற்றுவிட்டுக் கிளை பரப்பிக் கொண்டே வந்தது. காந்தி குழப்பத்தோடு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பேசி முடித்ததும் "உன் பொண்ணு சரியான விளையாட்டுக்காரி. காலையிலேயே நம்ம சரத்கிட்ட திருப்பதில ஸ்பெஷல் தர்ஷன் ஏற்பாடு பண்ணச் சொல்லி கேட்டிருந்தாளாம். ஏற்பாடு பண்ணிட்டு பையன் கிட்ட டீடெய்ல்ஸ் குடுத்துவிட்டிருக்கறதா சொன்னான். காரும் அரேஞ்ச் பண்ணியாச்சாம்." என்றார் லேசான சிரிப்போடு.

காந்தி அசடு வழிந்த முகத்தோடு விழித்தபடி நிற்க, சிவராமன் "சரி, இனியாவது சாப்பிடு, வா" என்று சமையலறைக்கு அவளை வலுக்கட்டாயமாய் இழுத்துக் கொண்டு சென்றார்.

"சுவாதியையும் கூப்பிடுங்க... தண்ணி கூட குடிக்க மாட்டேன்னு சொன்னாளே" கூச்சத்துடன் மெல்லிய குரலில் சொன்ன காந்தி டைனிங் டேபிளில் அமர்ந்து ஐஸ்க்ரீமை விழுங்கிக் கொண்டிருந்த மகளைப் பார்த்ததும் பக்கென்று சிரித்தாள்.

"இதுதான் உண்ணாவிரதம் இருக்கிற அழகா?"

"தரையில உருண்டு உருண்டு கோவிலைச் சுத்த ஸ்ட்ரெங்க்த் வேண்டாமா பின்னே?" வார்த்தைகள் ஐஸ்க்ரீமில் நீந்தி குழறலாய் வெளி வந்தன. அவளே தொடர்ந்து, "ஒண்ணு ஞாபகம் வச்சுக்கோங்க, நான் இந்த முறை உங்களுக்காக வேஷம் கட்றேன். எனக்கு எப்பவாவது 'கடவுள் ஒழிக'ன்னு கோஷம் போட ஆள் வேணும்னா அப்ப நீங்க வந்தாகணும்" குறும்புச் சிரிப்போடு சொன்ன மகளின் பேச்சில் பொதிந்திருந்த ஆயிரமாயிரம் அர்த்தங்களைக் கிரகிக்கத் திணறினார்கள் பெற்றோர்கள் இருவரும்.

(கருவறைக்கடன் சிறுகதைத் தொகுப்பிலிருந்து)

****

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide