"ஒரிஜினல்
நற்பவழம், எங்க அண்ணன் வெளிநாட்டுக்குப் போய் வந்த போது,
எனக்காக ஆசையாக வாங்கி வந்தது என பங்கஜம் வழக்கம் போலத் தன்
பிறந்த வீட்டுப் பெருமையை, அக்கம் பக்கத்து வீட்டாரிடம்
பீற்றிக்கொண்டிருந்தாள்.
யார் போட்ட தூபமோ தெரியவில்லை. தலையணை மந்திரம் ஓதும்
வேளையில், அந்தப் பவழத்தில் தங்கம் தோய்த்து, மாலையாக்கிக்
கழுத்தில் போட்டுக் கொண்டால், ஒரு சில நோய்கள் நம்மைத்
தாக்காமல் காக்கும் என்றாள். நானும் நள்ளிரவில் ஏதோ ஒரு
ஜோரிலோ அல்லது தூக்கக் கலக்கத்திலோ "அப்படியே செய்து விட்டால்
போச்சு" என்று சொன்னதாக ஒரு ஸ்வப்ன ஞாபகம் மட்டும் உள்ளது.
மறு நாள் என் பர்ஸில் ஆயிரம் ரூபாய் குறைந்திருந்தது.
கேட்டதற்கு பவழ மாலை ஆர்டர் செய்து அட்வான்ஸ் கொடுத்து
விட்டதாகச் சொன்னாள். ஒரு வாரம் ஆனது. "பவழ மாலை ரெடியாகி
விட்டதாம். கடைக்காரர் போன் செய்து சொன்னார். ஆபீஸ் விட்டு
வரும் போது மறக்காமல் வாங்கி வந்துடுங்க. என் அண்ணனும்
அண்ணியும் இன்று இரவு நம் வீட்டுக்கு வரப்போறாங்க. அப்படியே
அதையும் கழுத்தில் போட்டுக் காட்டி விடலாம்" என்று அன்புக்
கட்டளை இட்டாள், பங்கஜம்.
கடைக்குப்போன பின் தான் எனக்குத் தெரியும் - பவழத்தின் மேல்
மூணே முக்கால் பவுன் தங்கம் போடப்பட்டுள்ளது என்று. அட்வான்ஸ்
ஆயிரம் போக கூலி, சேதாரம், வரி, சேவை வரி அது இது என்று
சுளையாக முப்பத்து நாலாயிரம் தரணும் என்றார் கடைக்காரர்.
பவழம் வாங்கி வந்த மச்சானை மனதிற்குள் திட்டியவாறே ஏ.டி.எம்
கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எல்லாவற்றின் மூலமும்
நகைக்கடைக்குத் தர வேண்டியதைப் பட்டுவாடா செய்து விட்டு, பவழ
மாலையுடன் வீட்டுக்கு வந்தேன்.
புதிய பவழமாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு, என் தோளில் தன்
தோளால் ஒரு இடி இடித்தபடி அக்கம் பக்கத்தாரிடம்
அலட்டிக்கொள்ளக் கிளம்பினாள் என்னவள். வழக்கமாகக் கிடைக்கும்
டிபன் காபி கூட கிடைக்காத கடுப்பைவிட, அவள் மற்றவர்களிடம்,
இந்தப் பவழ மாலை என் அண்ணன் வெளி நாட்டிலிருந்து வாங்கி
வந்தது என்று பெருமையாகச் சொன்னதில், சுளையாக
முப்பத்தைந்தாயிரம் கொடுத்த எனக்கு மிகுந்த கடுப்பு ஏற்பட்டது.
*****