Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

கதை
கவிதை
தொடர்
உள்முகம்
கைமணம்
கைமருந்து
சுவடுகள்
ஸ்பெஷல்ஸ்
பூஞ்சிட்டு
மாணவர் சோலை
தமிழாய்வு
நேர்காணல்
தமிழ் வளர்க்கும் அறிஞர்கள்
ஆன்மீகம்
சாதனையாளர்கள்
கடவுள் எழுதிய கதைககள்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage
உடம்பெல்லாம் உப்புச்சீடை(2)
- வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன்
உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 323

30 ஜூலை 2007

Astrology consultation
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

<<<சென்ற வாரம்

"சூடான இட்லி, தோசை, வடை, காஃபி, டீ, சாயா" என்ற குரலுடன் இங்குமங்கும் ஒரு சில பணியாளர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர். வண்டி வேகம் குறைந்து ஒரு குலுங்கலுடன் நிற்கத் தொடங்கியது. வெளியே ஏதோ ஒரு ஸ்டேஷன் வந்துள்ளது. சாமி கண்ணைத் திறந்து ரவியின் தலைக்கு மேல் தன் தாடையை உரசியவாறு குனிந்து வெளியே பார்த்தார். "கூடூர்" என்று கூறிக்கொண்டு மணியைப்பார்த்து எட்டாகப் பத்து நிமிடம் உள்ளது என்று சொல்லிக்கொண்டார்.

வெளியே விற்கப்படும் கோன் ஐஸ்க்ரீம் ரவியின் பார்வையில் பட்டு விட்டது அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான், ரவி. அவர்கள் அவனிடம் கோபமாக இருப்பதாகத் தோன்றியது. "கமலா, கமலா, கோன் ஐஸ்க்ரீம் விக்குதுடி" ஆவலுடன் கூறினான்.

சாமி தன் இடுப்பிலிருந்து சுருக்குப்பையை அவிழ்த்துப் பிரித்து பணத்தை எடுத்து "மூன்று கோன் ஐஸ் கொடு' என்று கையை நீட்டினார். ரவிக்கு நாக்கில் எச்சில் ஊறி உடம்பெல்லாம் ஜில்லிட்டது போல குஷியானது. அவர் நீட்டிய கோன் ஐஸை வாங்கி ரவி உடனே கிடுகிடுவென சுவைக்க ஆரம்பித்து விட்டான். கமலா தயங்கியவாறே வாங்கி கையில் வைத்துக்கொண்டு அம்மாவையும், அப்பாவையும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்தாள். விமலா "தனக்கு வேண்டாம்" என்று உறுதியாக மறுத்து விட்டாள்.

"ஐயா உங்களைத் தயவுசெய்து கெஞ்சிக்கேட்டுக் கொள்கிறோம். இது போல எதுவும் வாங்கித் தராதீர்கள். எட்டாக்கைப் பயணம். குழந்தைகளுக்கு ஏதும் உடம்புக்கு வந்தால் நாங்கள் தான் கஷ்டப்படணும்" என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டனர், பெற்றோர்கள்.

"வெய்யில் காலம், குழந்தைகள் ஏதோ ஆசைப்படுது. ஒரே ஒரு ஐஸ்தானே, உடம்புக்கு ஒண்ணும் வந்து விடாது. அப்படியே ஏதாவது காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் என்றாலும் என்னிடம் எல்லா மருந்துகளும் உள்ளன. கவலையே படாதீங்கோ" என்று சொல்லி விட்டு, மீதியிருந்த மற்றொரு ஐஸையும் ரவியின் மற்றொரு கையில் திணித்தார்.

பொறுமையாகப் பல்லைக் கடித்துக்கொண்டு ரவியை முறைத்துப் பார்த்தனர். விவரம் புரியாத அவனைத் தனியே கூட்டிப் போய் நாலு சாத்து சாத்தவேண்டும் போலத் தோன்றியது பெற்றோர்களுக்கு.

வண்டி பெரிய ஒரு சத்தத்துடன் நகரத் தொடங்கியது.

"சாப்பாட்டு மூட்டையைப் பிரிச்சுடலாமா?" பட்டாபியிடம் வினவினாள் பங்கஜம்.

"அது ஒண்ணுதான் இப்பக் குறைச்சல். எனக்கு ஒண்ணுமே வாய்க்குப் பிடிக்காது போல உள்ளது. குமட்டிக்கொண்டு வாந்தி வரும் போல உள்ளது" என்றார் மிகுந்த எரிச்சலுடன், சற்று உரக்கவே.

சாமி, தன் ஏதோ ஒரு பையில் கையை விட்டு எதையோ எடுத்து, "இந்தாங்க ஸார் 'ஹாஜ்மோலா' ஆயுர்வேத மருந்து – இரண்டு வில்லைகள் வாயில் போட்டுச் சப்பினால் போதும். குமட்டல் போய் நல்ல பசியைக் கிளப்பிவிடும்" என்றார். இது பட்டாபிக்கு, பசிக்கு பதிலாகக் கடுங்கோபத்தைக் கிளப்பி விட்டது.

"ஐயா...சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என் தகப்பனார் செத்துப்போய் பதினைந்து நாட்கள்தான் ஆகிறது. அவரின் கடைசி ஆசைப்படி கர்மா செய்யக் காசிக்குப் போய் கொண்டு இருக்கோம். அது முடியும் வரை வெளி மனுஷ்யாள் யாரிடமும் பேசக்கூடாது. கண்டதைச்சாப்பிடக்கூடாது. நிம்மதியா எங்களைக் கொஞ்சம் தனியா இருக்க விடுங்கோ. எங்கள் பொறுமையைச் சோதிக்காதீங்கோ. ஏண்டா இந்த ரயிலில், இந்தப் பெட்டியில் முன்பதிவு செய்தோம்னு ரொம்பவும் வேதனைப்படறோம். நீர், வேறு எங்காவது ஒத்தை சீட் காலியாக இருந்தா, மாத்திண்டு போய்ட்டாக்கூட உமக்குப் புண்ணியமா இருக்கும்" என்று பட்டாஸ¤ போல வெடிக்க ஆரம்பித்தார் பட்டாபி.

இதுபோன்ற எவ்வளவோ பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் இதுவரை பலமுறை சந்தித்த அந்த ஆசாமிக்கு மனதிற்குள் வருத்தமாக இருந்தாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல், கழிவறைக்குச் செல்வது போல வெளியேறி இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார்.

வெகு நேரம் வரை சாமியைக் காணாததால் சற்று நிம்மதியடைந்தனர். "ஒரு வேளை நீங்க போட்ட சத்தத்தில் ஓடும் ரயிலிலிருந்து குதித்திருப்பாரோ?" பங்கஜம் மெதுவாகத் தன் கணவனிடம் கேட்டாள். "அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது. கழிவறைக்குத்தான் போய் இருப்பான் - வந்துடுவான்" என்றார் பட்டாபி.

"இப்போ சாப்பாடு மூட்டையை அவிழ்த்தால் உடனே வந்து, அது என்ன, இது என்ன என்று கேட்டுக் கழுத்தை அறுத்து, நம்மை சாப்பிட விடாமல் சங்கடப்படுத்தி விடுவான். என்ன பண்ணித்தொலைப்பது என்றே தெரியவில்லை. இவ்வளவு விகாரமாயிருப்பவன் ஏன் ரயிலில் நம்முடன் வந்து தொலைத்தானோ? நாம் பண்ணின பாவம் நம்மைக் காசி வரை துரத்துகிறது" பங்கஜம் மேலும் தூபம் போட்டாள்.

சற்று நேரத்தில் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் அவுட்டர் சிக்னல் கிடைக்காமல் நிற்க ஆயத்தமாகி இஞ்சின் பெருமூச்சு வாங்குவது போல சப்தம் கேட்டது.

அந்த சாமி மெதுவாக இவர்கள் இருக்குமிடம் வந்தான். ஏதோ ஒரு பையில் கையை விட்டு ஒரு பொட்டலத்தை வெளியில் எடுத்து அதை ஒரு கையிலும், குடிநீர் பாட்டிலை மறு கையிலும் வைத்தவாறு, தான் இங்கு அமர்ந்து சாப்பிடலாமா என்பது போல இவர்களை ஒரு பார்வை பார்த்தான். அவர்கள் வேறு எங்கோ பார்ப்பது போல பாசாங்கு செய்தனர்.

ஆசாமி ரவியைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு "தம்பி, நான் சப்பாத்தி சாப்பிடப் போகிறேன், சாப்பிடலாமா?" என்றார். கணவனும், மனைவியும் மீண்டும் ரவியைப் பார்த்து முறைக்க "சப்பாத்தி எனக்குப் பிடிக்காது. வேண்டாம்" எனச் சொல்லி விட்டான் ரவி.

நான்கு சப்பாத்திகளை கொத்துமல்லித் துவையலுடன் சாப்பிட்டு விட்டு, குடிநீர் பாட்டிலையும் காலி செய்தார். சூடான பால் ஒரு கப் வாங்கிக் குடித்து, பெரிய சைஸ் பச்சை மோரிஸ் பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, பொடியன் ரவியைப் பார்த்து, "ரவி, நீங்களெல்லாம் ஒரே குடும்பம். ஜாலியாக பயணத்தை அனுபவியுங்கள். நான் அப்பர் பெர்த்தில் போய்ப் படுத்துக் கொள்கிறேன்" என்று சொல்லி எல்லா சாமான்களுடனும், மேல் தட்டுக்குக் குடிபெயர்ந்தார், அந்த சாமி.

இது தான் சமயம் என்று சோத்து மூட்டையைப் பிரித்து இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டது பட்டாபி கோஷ்டி.

"நாளைய ஒரு நாள் முழுவதும் ரயிலிலேயே கழித்தாக வேண்டும். அது கீழே இறங்காம மேலேயே படுத்துக் கொண்டு விட்டால் தேவலாம்" என்று நினைத்துக் கொண்டார்கள் பட்டாபியும் பங்கஜமும்.

அதன்படியே மறுநாள் 'பல்ஹர்ஷா'வில் காலை டிபனும், 'நாக்பூர்' இல் மதிய உணவும், 'இட்டார்ஸி' யில் மாலை டிபனும், 'ஜபல்பூர்' இல் இரவு சாப்பாடும் என இவர்கள் நிம்மதியாக உண்டு களித்தனர். இடையிடையே தட்டை, முறுக்கு, உருளைக்கிழங்கு சிப்ஸ் முதலிய கரமுராக்களும் கொறித்துக் கொண்டு வந்தனர்.

அந்த மனிதர் இவர்கள் பக்கமே வரவில்லை. வண்டி நிற்கும் ஸ்டேஷன்களில் மட்டும் மெதுவாக இறங்கி, காலார நடந்து, கதவு வரைச் சென்று எந்த ஊர் என்று தெரிந்து கொண்டு, கழிவறை காரியங்களையும் கையோடு முடித்துக் கொண்டு பரணையில் ஏறும் பூனை போல மெதுவாக ஏறிப் படுத்து வந்தார். நாக்பூரில் மட்டும் மற்றொரு பொட்டலத்தைப் பிரித்து சப்பாத்தி சாப்பிட்டது போல கொத்துமல்லித் துவையல் வாசனையை மோப்பம் பிடித்த பங்கஜம் தெரிந்து கொண்டாள்.

நிறைய பச்சை வாழைப்பழம் போட்டுத் தொங்கவிடப்பட்டிருந்த அவரின் கேரி பேக் இப்போது மிகவும் சுருங்கி ஓரிரு பழங்களை மட்டுமே தன் வசம் வைத்துக்கொண்டு பார்க்கவே பரிதாபமாகக் காட்சியளித்தது. அவர் இரண்டொருமுறை சூடாகப் பால் கேட்டு வாங்கி அருந்தியதை பட்டாபி பார்த்திருந்தார்.

மொத்தத்தில் பட்டாபி தம்பதிகளுக்கு நேற்றைய அளவு ரத்தக் கொதிப்பு இன்று இல்லை. அவர் தன் லோயர் பர்த்தை விட்டுக் கொடுத்தது, என்னவோ இவர்களுக்கு அவர் தன் சொத்து பூராவும் உயில் எழுதிக் கொடுத்தது போன்ற (அல்ப) சந்தோஷத்தை அளித்தது. அந்த சாமியை மனதிற்குள் கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்.

இரவு 10.45 க்கு 'கட்னி' என்ற ஸ்டேஷன் வந்ததும் விளக்குகளை அணைத்துவிட்டு, அனைவரும் படுக்கத் தொடங்கினர். சாமி அதற்கு முன்பாகவே தூங்கி விட்டிருந்தார்.

பட்டாபி தான் கொண்டு வந்திருந்த அலாரத்தைச் சரியாக அதிகாலை 4.30 மணிக்கு அடிக்குமாறு முடுக்கி விட்டார். 4.50க்கு அலஹாபாத்தில் இறங்க வேண்டும் அவர்கள் அனைவரும்.

(அடுத்த இதழில் முடியும்)

நன்றி: "மங்கையர் மலர்"

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X