புதன்கிழமை ராத்திரி பத்துமணிக்கு நான் ரேபானைப்
பட்டணத்துக்கு என் எப்-250 வண்டியில் கூட்டிப்போனேன்.
அவனது விநோத அனுபவத்தை அதற்கு முன்னமே அங்கே சிலர்
கேள்விப்பட்டிருந்தார்கள். நாங்கள் ஊர்ப்போய்ச்
சேருமுன்னிருந்தே அவர்கள் அதைப்பற்றி வார்த்தையாடிக்
கொண்டிருந்தாலும், நடந்தது அவர்களுக்குப்
புரிந்திருக்கவில்லை. எனக்கே கதையில் பாதிதான்
தெரியும். அவனைக் கண்டுபிடித்தது நான்தான். இப்ப
மட்டுமல்ல எப்பவுமே அவன் நல்ல நண்பனாக யாருக்குமே
இருந்ததில்லை. நிதானமா இருந்தான்னா எரிச்சலூட்டுவான்.
குடிபோதையிலோ எதுக்கும் லாயக்கில்லாதவனாய் ஆகிப்
போனான். சிரமதசையில்தான் வாழ்ந்தான் என்று தோணுகிறது.
ஆனால் கஷ்டம் யாருக்குத்தான் இல்லை?
புதன்கிழமை காலை, பதினேழாம் எண் காற்றாலைவரை நான்
வாகனமெடுத்துப் போனேன். எங்கள் குடோனுக்குத் தேவையான
தண்ணீர் சரியாக வந்து கொண்டிருக்கிறதா என்று பார்க்க
வேண்டியிருந்தது. காற்றாலை அருகில் ஒரு இருநூறு
மீட்டர் கிட்டத்தில் போயிருப்பேன். அதோ கார்
ரேடியேட்டரின் குழாய் போல எதோ ஒன்று. எவருடைய காராவது
வழியில் பிரேக்டெளன் ஆகி வில்லங்கப்பட்டிருப்பார்களோ!
அது ஒரு நீண்ட கருத்த பல்லி. அப்படியே அந்த
மட்டப்பாறைமேல் செத்தசவமாய்ச் சுருண்டு கிடக்கிறது.
அடிக்கிற வெயிலுக்கு அது நிழலைவிட்டு வெளியே வந்து
இப்படி மாட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அதுக்கே
தெரிய வேண்டாமா?
பக்கத்திலேயே நொந்து மெலிந்த சில கால்நடைகள் தள்ளாடி
ஆலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. பட்டணத்தில்
வாகனப்புகைபோல அப்போது புழுதி மேலெழுந்தது. அவை
தண்ணித் தொட்டியை அடைந்து வாயை வைத்து அந்த வெந்நீரை
வயிறார உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்தன. சரியான தாகம்
போல. களைத்திருந்த சில பட்சிகளும் கீழிறங்கி வந்தன.
தாகசாந்தி பண்ணிக் கொண்டன. பின் மீண்டும் நிழல்தேடிப்
பறந்து போயின. அறிவாளிப் பறவைகள். வெக்கையில் இருந்து
தப்பிக்க அவை வழிவகை தேடின. மனிதனுக்கு இந்தளவு உஷார்
கிடையாது. நானே வெந்துக்கிட்டிருந்தேன். மணி
ஒன்பதரைதான் ஆகிறது.
என் வண்டிக்குத் திரும்புகிறேன். மாட்டுக்
கூட்டத்துக்குள் தடுமாறியபடி ஒரு காளைமாடு முட்டிமோதி
ஊடறுத்து வந்தது. ஒட்டலும் உரசலும் மறுத்தலும்
முரண்டுதலும் இடித்து நகர்த்தலுமாய் ஒரே களேபரம்.
கொம்புச்சண்டையாகி ரகளையாகி விடுமோ என்றிருந்தது. ஆடி
அசைந்து தள்ளாடி அவை தண்ணீர்த் தொட்டியை நெருங்கின.
கால்பந்தாட்டம் முடிந்தபின் ரசிகர்கள் வளாகத்துக்குள்
நுழைகிறதைப் போல அவை ஒருசேரத் தொட்டியை எட்ட முயன்றன.
எதிர்பார்க்கவேயில்லை. தொட்டியின் துருப்பிடித்த
இரும்புக் கால்கள் சட்டென நொறுங்கின. தோட்டதில்
உட்காரும் பெரிய பெஞ்சை மடித்தாப் போல தொட்டி
சரிந்தது. உள்ளேயிருந்த பழுப்புத் தண்ணீர் சரிந்து
மண்தூசியில் குட்டையாய்த் தேங்கியது. காற்றாடி
இன்னும் சுழன்று கொண்டிருந்ததால், உடைந்த தண்ணீர்க்
குழாயில் இருந்து இன்னமும் தண்ணீர் கொட்டிக்
கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
சோனி
மாடுகள் எல்லாம் அசந்துபோய் அந்தத் தரையை வெறித்தன.
சட்டென்று விடுபட்டாற்போல அவை காலை உதறி தூசியெழுப்பி
தெற்கு நோக்கி நடையிட்டன. எங்காவது நிழலோ தீவனமோ தேடி
அவை புறப்பட்டிருக்கலாம். என்னிடம் அந்தத் தொட்டியைச்
சரிசெய்ய கருவிகள் இல்லை. அந்த சோலி காத்திருக்க
வேண்டியதுதான். சுவரில் ஏறி அந்தக் குழாயை நேராக்கி
வைத்தேன். இதாவது மேலும் சேதமடையாமல் மிஞ்சட்டும்.
அடுத்த வேலை இருந்தது. கிளம்பினேன்.
ரேபான் ஒண்ணு ஒண்ணரைக் குப்பி ரம் செவ்வாய் மாலையில்
குடித்துத் தீர்த்திருந்தான். கீழ்ப்பக்கம் முக்னித்
நிலையத்தில் ரேபான்தான் பொறுப்பாளன். புதன் காலையில்
கிடங்கின் கட்டாந்தரையில் அவன் படுத்துருண்டு
கொண்டிருந்தான். அதிர்ஷ்டம்தான். அவன் கூரையடியில்
இருந்தான். இல்லாட்டி அந்தக் கருத்த பல்லிபோல அவனும்
வெயிலில் வெந்து விரைத்துத் துவண்டிருப்பான்.
குறட்டை!வாயிலிருந்து கெட்டியான கூழாய் வழியும்
ஜொள்ளு. பிறகு அந்தக் காலைநேர உஷ்ணம் நாற்பதுக்கு
எகிறியது. மனுசனால் பழக்கப்படாத ஒரு ஓட்டகமந்தை
பதினேழாவது காற்றாலை நோக்கி நடையிட்டது.
முள்ளுக்காட்டு வழி. துருப்பிடித்த காலித் தொட்டிதான்
அவற்றுக்கு வாய்த்தது.
பாலைவனப்
பிராணிகள். தண்ணீரை அவை மோப்பம் பிடிக்க வல்லவை.
ஆனால் குடிக்கத் தண்ணீர் இல்லை. கடும் தாகத்தில் அவை
வந்திருக்கலாம். வெப்பச்சூழலில் ஒட்டகங்கள் பத்து
பன்னிரெண்டு நாளுக்கொருதரம் தண்ணீர் அருந்த வேண்டும்.
ஆனால் பாலைவனத்தின் சுதந்திரமான இந்தப் பிராணிகள்
மேலதிக நாள்கூட தாக்குப் பிடித்து வந்திருக்கலாம்.
அடுத்துத் தண்ணீர் கிடைக்கிற இடம் என்றால் பக்கத்தில்
பொறுப்பாளன் வீடு, பதினோரு கிலோமீட்டர் தூரத்தில்.
உண்ணியேறிய அந்தப் பிராணிகள் சாவதானமாக ரேபானின்
கீழ்ப்பக்கக் குடியிருப்பு நோக்கி வாகனத்தடத்தைப்
பார்த்துக் கிளம்பின. அப்புறமாய் நான் அந்த
மூன்றுகுளம்பு பாதத் தடங்களை கவனித்தபோது நினைத்தேன்.
இருபதும் அதற்கதிகமாகவும் ஒட்டகங்கள் வந்திருக்கலாம்.
வரைபடமோ தெருவில் வழிகாட்டும் அடையாளங்களோ இல்லாமல்
அவை போகுமிடம் அறிந்தவை. தேவை தண்ணீர். அந்த அவசரமே
அவற்றுக்கு வழி காட்டிப் போக வல்லதாய் இருக்கலாம்.
நீங்கள் இதை மறுக்கலாம்!
குடிபோதைத் தூக்கத்தில் இருந்து ரேபான் கண்
விழித்தான். எப்படியோ எழுந்து உட்கார்ந்து விட்டான்.
வியர்வை பெருகிச் சட்டையே நனைந்திருந்தது. முகத்தில்,
கண்களில், உதடுகளில் என்று டஜன் கணக்கில் ஈக்கள்
வந்து மொய்த்தன. தகரக்கூரையில் இருந்து வெல்டிங்
செய்கிறாப் போல வெப்பம் இறங்கிக் கொண்டிருந்தது.
உலர்ந்துபோன எலும்புத் துண்டாய் அவன் தொண்டையே வறண்டு
கிடந்தது.
மூலையில்
சில பெட்டிகள். அவற்றில் சில வாகன உதிரிப் பகுதிகள்,
சமையலறையில் கழுவ உதவும் உபகரணங்கள் மற்றும்
கொண்டுவரப்பட்ட சில சாமான்களும் சுவரோரம் அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பக்கமாய் முப்பது நாற்பது
பெரிய எண்ணெய்ப் பீப்பாய்கள். மோட்டார் ஆயில்.
ரசாயனப் பொருட்கள். சில காலியாகவும் இருந்தன. அவரச
ஆத்திரத்துக்கு அந்தக் காலி பீப்பாய்களில் தண்ணீர்
எடுத்து வருவதும் உண்டு. அடிக்கடி அவன்போய்க் கொண்டு
வருவான்.
ரே
எழுந்து வாசலை நோக்கித் தள்ளாடிப் போனான். தலைபாரம்.
முந்தைய ராத்திரியின் போதை இன்னும் விலகவில்லை போல.
பிற்பாடு நான் அவனோடு பேசிக் கொண்டிருந்தபோது,
அப்போதுகூட அவன் அந்த அதிர்ச்சியில் இருந்து
மீண்டிருக்கவில்லை. பதட்டம் விலகாமல் அவன் சொன்னது
சரியாக விளங்கவில்லை. கிடங்கின் கதவை அவன்
திறக்கிறான். நேரே முகம் நீட்டும் பயங்கரமான பாலைவன
ஒட்டகம். அதன் பிளந்த, எச்சில் ஒழுகும் உதடுகள்.
தடுமாறும் காலுடன் பின்வாங்கினான். டஜனோ அதற்கு மேலோ
ஒட்டகங்கள் ஒடுங்கிய வாசலுக்குள் பிதுக்கிக்கொண்டு
புகுந்தன. முதலில் அவை அவனைச் சட்டை செய்யவில்லை.
அவனுக்குப் புரிந்தது, எல்லாப் பிராணியும் இப்படி
உள்ளே புகுந்தால் கிடங்கின் கதி அதோகதி.
''வெளிய போங்க பேமானி முண்டங்களா! போங்க. போங்க
வெளிய!'' என்று அலறினான்.
(மீதி அடுத்த இதழில்)