அக்கா
-
கார்த்தியாயினி மைந்தன்
என்
வீட்டில் டிவி ரிமோட்டுக்காய்
என்றும் சண்டைகள் வருவதில்லை.
அம்மா செய்யும் பலகாரங்களைச் சாப்பிட
என்னுடன் போட்டிக்கு யாருமில்லை.
அப்பா வாங்கித்தரும் பட்டாசுகளை
பங்கு
போடவும் ஆளில்லை.
தோழியைப் பார்க்க என எந்தப் பெண்ணும்
என் வீட்டிற்கு வருவதில்லை.
உடன் விளையாட, கேலி செய்ய,
சிரிக்க, கோபப்பட,
பழி போட, அடிக்க, திட்ட,
வீட்டுப்பாடங்கள் எழுதித்தர,
பாடங்கள் சொல்லித் தர,
கல்லூரிக்குச் செல்கையில்
பஸ்ஸ்டாப் வரை துணை
செல்ல,
நான் காதலிப்பதைச்
சொல்ல,
கல்யாணத்துக்கு செலவு
பண்ண,
மறுவீடு போகயில்
அழ,
வளைகாப்பு செய்ய,
குழந்தைக்குச் சோறுட்ட,
என என் எல்லா ஆசையிலும்
மண் அள்ளிப்போட்டு,
நீ மட்டும் ஏனக்கா
சீக்கிரமே செத்துப்போனாய்??
*******
காதல் கடவுள்
-
சிவசங்கரி
என்
காதலைப் பொறுத்தவரை
நானும் என் பாட்டியும் ஒன்றுதான்
என் பாட்டியோ
காலையில் எழும்போதும் "முருகா" என்கிறாள்
படுக்கையில் விழும்போதும் "முருகா" என்கிறாள்
இடைப்பட்ட நேரமெல்லாம் முருகனை அழைத்த பின்பும்
இறுதியாய்க் கேட்கிறாள்
எப்போ என்னை உன்னிடம் அழைத்துக்கொள்ளப் போகிறாயென்று
நானும் அவள் போல் தான்
காலையில் எழும்போதும் "முருகா" என்கிறேன்
படுக்கையில் விழும்போதும் "முருகா" என்கிறேன்
இடைப்பட்ட நேரமெல்லாம் உன்னை அழைத்தபின்பும்
இறுதியாய்க் கேட்கிறேன்
எப்போ என்னை உன்னிடம் அழைத்துக்கொள்ளப் போகிறாயென்று!
*******