உனக்கான நூல்
உனக்கே உனக்கான
நூலொன்றை உருவாக்கு:
உன்னால் மட்டுமே
உருவாக்கிட இயலும்
உனக்கான நூலை
அதுவேறு நீவேறு அல்ல என்றாகும்படி
உன் உயிரைக் கரைத்து ஊற்று அதில்
பிடிபடாத மர்மங்களின் கதைகளை
அதன் பக்கங்களில் நிரப்பு
எழுத்து வரிகளுக்குப்பதில்
நெடிய நாகப்பாம்புகளை நெளியவிடு அதில்:
அழகாகவும் வீர்யமான விஷத்தோடும்
படமெடுத்தாடட்டும் அவை
சற்றே புரியாத மொழியைக் கையாண்டு
படிக்க முனைவோரைக் குழப்பிவிடு
கடைசியில்-
உனக்கான நூலை
தீக்கிரையாக்கிவிட்டு
கரைந்து கல நீயும்
ஆவியோடாவியாய்.
*******
ஜீரோவுக்கும் ஒன்றுக்குமான இடைவெளி
ஜீரோ
ஜீரோ
ஜீரோ...
எண்ணற்ற ஜீரோக்கள்...
எல்லா ஜீரோக்களும்
நிகழ்வுகள் ஏதுமற்று...
ஒன்று
ஒன்று
ஒன்று...
எண்ணற்ற ஒன்றுகள்...
எல்லா ஒன்றுகளும்
எல்லையற்ற நிகழ்வுகளுடன்...
....................................
....................................
யுகயுகமாய்
ஜீரோவுக்கும்
ஒன்றுக்குமிடையே
சிக்கித்திணறும்
உனக்கும் எனக்கும்
அவற்றூடே ஒளிரும்
அதிநுண்ணிய இடைவெளியொன்றில்
மின்னலென நிகழ்ந்தேறிவிடுகிறது
ஏதேனுமோர்
உன்னத நிகழ்வு
ஒரு கவிதையைப்போல.
*******