நான் யார்?
என்னுள் எந்தப் பிரக்ஞையுமில்லை
சுற்றிலுமிருந்தும்
ஈக்களாய் மொய்த்தவண்ணமிருக்கின்றன
கேள்விகள்!
சொரணையில்லாமல்
சுருள்கிறேன் மண்ணில்
புழுவென!
வலிப்பதென்னவோ உண்மைதான்!
வாய்விட்டுக் கதறவும் வழியில்லை
உள்ளெழும்
எதிர்துருவ இச்சைகள்
பல்லிவாலாய் அறுந்தறுந்து முளைக்கின்றன
எதையும் அறுதியிட இயலவில்லை
ஒன்று மட்டும்
என் எல்லாக் கேள்விகளினூடுமாய்:
நான் யார்?
****
கழித்தல்
சாப்பிட அமர்கிறேன்
பிடித்த பதார்த்தம் தட்டில் இல்லை
காபி குடிக்கிறேன்:சர்க்கரை இல்லை
விருந்தாளியுடனான பேச்சும்
சுத்தமாய்ச் சுகிக்கவில்லை!
தொலைக்காட்சி பார்க்கிறேன்
தொலைகிறது நிம்மதி!
பத்திரிக்கை புரட்டினேன்
பயங்கரத் தலைவலி!
வயிற்றைக் கலக்க-
கழிவறை செல்கிறேன்
கழிகின்றன என்
எல்லா வலிகளும்!
*******