சொந்தம்
- மங்கை
இத்தனை இரவுகள்
கடந்து வந்திருக்கிறேன்
எத்தனை சொந்தங்கள்
நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவே
நிலவு
இன்று ஏனோ உணர்கிறேன்
பிரிவை
சூரியனைப் பிரிந்து உறங்காமல்
தேய்ந்துகொண்டிருக்கும்
நிலவு!
என்னவள்
- ஜான் பென்னக்ட்
இரா உணவு முடித்து
துப்பட்டிக்குள் தஞ்சம் புகுந்து
துயில் விழையும் வேளையில்
தூங்க விட மறுக்கிறாய்!
எத்தனையோ நினைத்திருந்தேன்
என்னவென்று மறந்தே போனேன்
எப்போதும் உன் நினைவால்
என் கனவெல்லாம் கலைந்தே போனேன்
கண் மூடித் தூங்கும்போது
காதுக்குள்ளே ரீங்காரமிடுகிறாய்
கால் சதையைக் கடித்து
கதண்டு கதண்டாய் வீங்க வைக்கிறாய்
ஏய்... இரக்கமற்ற கொசுவே!
என்னை முழுவதுமாய்த் தந்துவிட்டேன்
என்னவளை மட்டுமாவது உறங்கவிடு
*******