குயிலோடு
உனக்குக் கோபம் என்பதால்
கழுதையிடமா போய்ச்
சங்கீதம் கேட்பாய்?
புலியோடு
முற்றிவிட்டது பகை என்றால்
போராடு! அதை விட்டுவிட்டு
ஓடிப்போய்
நரியிடம் நட்புக்கொள்ளாதே!
கடலிடம்
ஒரு முறை தோற்றால்
மறுமுறையும் மோது.
ஓடைகளோடு சேர்ந்துகொண்டு
அறிக்கை விடாதே!
நீ உயர முடியவில்லை
என்பதற்காக மலை மீது
கற்களை விட்டெறியாதே!
மற்றவர்களின்
மகுடங்களை மட்டம் தட்டக்
குப்பைக் கூடையைச்
சூட்டிக்கொள்ளாதே
உன் தலையில்!
உனக்கும்
உண்மைக்கும் ஊடல் என்றால்
பொய்யின் கன்னத்திலா
போய் முத்தமிட்டுக் கொண்டிருப்பாய்?
வாழ்க்கை உனக்கு
அறைகூவல் விட்டால்
நீயே சமாளி!
சாவிடம் போய்
யோசனை கேட்காதே!
("நடை மறந்த நதியும், திசை மாறிய
ஓடையும்" கவிதைத் தொகுப்பிலிருந்து)
*******