அருகருகே எதிரெதிராய்..
- ரிஷபன்
காற்றை என்னால்
நிராகரிக்க முடிவதில்லை-
உன் நினைப்பைப் போல!
நாம் முரண்டு கொண்டாலும்
சுவாசித்தாக வேண்டியிருக்கிறது.
பேசிக் கொள்ளாமல் இருந்தாலும்
உன் நினைவு வந்து போகிறது.
இது உனக்குப் பிடிக்குமே
என்கிற நினைப்பில்
எனக்குப் பிடித்தவைகளை
ஏற்க மறுக்கிறேன்.
சேர்ந்து வாழத் தவறிய
நாட்களின் எண்ணிக்கை
கூடுதலாகிப் போய் விட்டன
அருகருகே இருந்த போதும்.
விடை
- நட்சத்ரன்
ஒன்றுக்கும்
சுழிக்குமான தொடுப்பென்ன?
யார் சுழி?
அதைத் தீர்மானிப்பதும் அவசியம்
நீயா? நானா?
உன் பின்னால் நானா?
என் பின்னால் நீயா?
முன்னேயிருக்கும் சுழி
பின்னேயிருக்கும் சுழி
வேறுபாடென்ன?
மிக எளிதுபோலிருந்தும்
இன்னும்தான் பிடிபட்டபாடில்லை
விடை-
பல்யுகங்கடந்தும்.
*******