தீர்ப்பு
மனிதம் மறந்த
கலவரக் கும்பல்
வான்நோக்கி உயர்ந்தன
காவலர் துப்பாக்கிகள்
படைத்தவனுக்குத் தண்டனை?
*****
நாணக்கூடல்
தழுவத் தயங்கி நிற்கும்
காற்றுப் பெண்ணை
காத்திருப்போர் மத்தியிலே
தள்ளி விடுகின்றன
தோழிகளாய்
மின்விசிறி இறக்கைகள்
*****
கரிசனம்
மின்விசிறி
வெட்டி வெட்டி அனுப்பும்
காற்றுக் கைக்குட்டைகள்
ஒற்றி எடுக்கின்றன
உடம்பின் வியர்வைத் துளிகளை.
*****
படிப்பாளி
ஆளில்லா அறையில்
மேசைமீதிருக்கும் புத்தகத்தைப்
புரட்டிப் புரட்டிப்
படித்துக்கொண்டிருக்கிறது
காற்று.
*******