ஒவ்வொரு
வியாழனும் உன் நினைப்பாகவே...
தட்சிணாமூர்த்தியை
வியாழக்கிழமைகளில்
பார்க்கும்போது
'உங்க ஆளு' என்று
வம்பிழுத்த நாட்கள்
வந்து போகும் நினைவில்.
'அதென்ன சாமியை உங்காளுன்னுகிட்டு'
'பின்னே எனக்கா முல்லைப் பூ,
கொத்துக்கடலை மாலை, சூடம், விளக்கு...
என்னைப் பார்த்த நேரத்தை விட
அவரைப் பார்த்த நிமிஷம்தான் அதிகம்'
சீண்டும் வார்த்தைகளில்
உள்ளூர இழையோடும் தவிப்பு.
சாமிகூட நம்ம குறுக்கே
வரக்கூடாதுன்னு சொல்லும் மனசு!
அதான் உன் கல்யாணப் பேச்சப்ப
கண்டுக்காம நின்னுச்சோ சாமி?
இப்பவும் ஏதோ ஒரு ஊர்ல
ஒரு தட்சிணாமூர்த்தி
உங்கையால மாலை வாங்கிப்
போட்டுக்குது தவறாம(ல்).
அது எங்கழுத்து தவற விட்ட
மாலைன்னு
யார் போய்ச் சொல்றது
ஜோடி பிரிச்சு விட்ட
தட்சிணாமூர்த்திகிட்ட!
****
நினைவுப்
பரிசு
எல்லா பிறந்த நாட்களிலும்
உன் நினைவுப் பரிசு
என்னிடம்.
அவற்றை விட
நீ எனக்கில்லை என்றான
நாள் மட்டும்
முதன்மையான
நினைவுப் பரிசாய்!
*******