ஒன்றும் இல்லை
அள்ளி வீசுகிறாய்
அனைத்துக்குமான உதாரணங்களை
எப்போதாவது உரைத்துள்ளாயா
உதாரணத்துக்கான உதாரணத்தை?
உதாரணம் உண்மையாகில்
உதாரணத்தின் உதாரணம்
உண்மையாகும்தானே?
அதை விடு
எனக்கோ உனக்கோ
என்ன உதாரணம்?
எனக்கு நீயும் உனக்கு நானுமாய்
உதாரணமாவது சாத்தியமாகுமா?
உதாரணங்களின் மூல உதாரணத்தை
உய்த்தறியும்வரை
உனக்கும் எனக்கும்
ஒன்றுமில்லை போ!
ஒன்றுமேயில்லை
போ!போ!
சுழல்
பூமி சுத்துது
நிலவு சுத்துது
தலை சுத்துது
வால் சுத்துது
அது
இது
எல்லாம்
சுத்திச் சுழலுது
எல்லாம் சுழல்
சுழலே எல்லாம்
பின்
எப்படிப் பிடிபடும்
ஏதொன்றிலுமான
ஏகாந்த நிச்சலனம்?
இல்லாதது...
எண்ணெல்லாம் எண்ணா?
எழுத்தெல்லாம் எழுத்தா?
எண்ணென்ன எழுத்தென்ன
சொல்லென்ன பொருளென்ன
பேச்சும் மொழியும்
பேச்சும் மொழியும் ஆகுமா?
ம்ஹூம்,
சொல்லெல்லாம் சொல்லாயில்லை
பேச்செல்லாம் பேச்சாயில்லை
எண்ணெல்லாம் எண்ணாயில்லை
எழுத்தெல்லாம் எழுத்தாயில்லை
அட!
இல்லாததுக்குத்தான்
எத்தனை பேர்கள்!
*******