காற்று
-ரிஷபன்
எல்லா யுகங்களிலும்
இருந்திருக்கிறது.
கடவுள்களை (நிஜமோ.. பொய்யோ?)
தரிசித்திருக்கிறது.
வன்முறை, மென்முறை
தெரியும்.
யுத்தம், சமாதானம்
இவற்றின் சாட்சியாய்
நின்றிருக்கிறது.
பிரளயங்களையும்
அது அறியும்.
எப்போதும் எல்லோரையும்
தொட்டுச் செல்லும்
காற்று
ஏன் சொல்வதில்லை...
சாஸ்வதம் எனும் நினைப்பில்
சண்டையிட்டுக் கொள்ளும்
நம்மிடம்...
நம் முன்னோரின்
மூச்சுக் காற்றும்
தன்னிடம் இருப்பதை?
******
மனிதத்தேடல்
- நிரந்தரி
மனிதத்தைக்
கல்லறைக்கு அனுப்பி வைத்த
கலியுகமே!
எனக்கொரு கருவி தா!
மரணத்தைத் தழுவிய
மனிதத்தை
மறு ஜனனம் செய்திட......
இயந்திரத்தனத்தில் இற்றுப்போன
மனிதனை மலர்விக்க.......
*******