எங்க ஊரு காருகுறிச்சி!

திருநெல்வெலி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான காருகுறிச்சிதான் எங்கள் ஊர். எங்கள் ஊரைப் பற்றிய மலரும் நினைவுகளைத்தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

காருகுறிச்சி! அழகிய சிற்றூர். ஊருக்குள் நுழைந்தவுடன் குடியானவர்கள் வசிக்கும் பகுதியைக் காணலாம். உள்ளே வந்தால் கன்னடியன் வாய்க்காலும், குளத்தையும் காணலாம். அதைத்தாண்டி வந்தால் வடக்கு தெற்காக இரண்டு தெருக்கள். ஒன்று கிழக்குத்தெரு; மற்றொன்று மேற்குத்தெரு. இதுதான் அக்கிரகாரப் பகுதி. எங்கள் வீடு மேற்குத் தெருவில்தான் இருந்தது.

ஊரைச்சுற்றி பசுமையான வயல்கள். அவ்வயல்களுக்கு நடுவில் குளக்கரையில் சாஸ்தா கோவில். அந்தக் கரை மேலேயே மேற்கு நோக்கி நடந்தால் வீரவநல்லூருக்குப் போகலாம். மேலத்தெருவில் நுழைந்தவுடன் கிருஷ்ணன் கோவில். மேலத்தெருவின் தெற்குப் பகுதிக்கும் வடக்குப் பகுதிக்கும் இடையில் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. எதிரேயுள்ள குறுக்குச் சந்தில் போனால் சிவன் கோவிலுக்குப் போகலாம்.

மேலத்தெருவின் வடகோடியில் நடுநிலைப்பள்ளி அமைந்திருந்தது. எட்டாவது வகுப்பு வரை மட்டுமே இங்கு படிக்கலாம். மேற்பள்ளிப் படிப்புக்குப் பத்தமடைக்கோ, வீரவநல்லூருக்கோதான் போகவேண்டும். கல்லூரிக்குத் திருநெல்வேலிக்குத்தான் போகவேண்டும். மேலத்தெருவின் தெற்குக்கோடியில்தான் குளம் அமைந்துள்ளது. குளத்திற்கு எதிர்கரையில் இருந்து சென்றால் ‘கொழுந்திருந்தான் மலை’ அடிவாரத்தை அடையலாம். மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதி இது. எங்கள் ஊர் மலை, வாய்க்கால், குளத்திற்கெல்லாம் வரலாறு உண்டு.

அனுமன் ஔஷத மலையை இலங்கைக்கு எடுத்துச்சென்றபோது விழுந்த ஒரு சிறிய கல்தான் இந்த கொழுந்திருந்தான் மலையாம்! அதற்கேற்றபடி இந்த மலையில் இப்பொழுதும் மூலிகை மருந்துகள் கிடைக்கின்றன. கன்னடியன் என்ற பெயருடைய குறுநில மன்னர் மக்களின் நலனுக்காக குளங்கள் வெட்ட நினைத்தபோது அவரின் கனவில் அவர் ஒரு பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு அந்தப் பசு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் பின் தொடர்ந்து செல்வது போல் தெரிந்ததாம். செல்லும் வழியில் ஆங்காங்கே படுத்து பின் எழுந்து செல்லும் அப்பசு பிறகு ஒரு இடத்தில் மறைந்து விட்டதாம்! பசு போன வழியெல்லாம் வாய்க்காலும் படுத்த இடங்களில் குளங்களும் வெட்டும்படி கனவில் தோன்றியதால் மன்னரும் அதுபோலவே செய்தாராம். அவர் பெயரால் கன்னடியன் வாய்க்கால், கன்னடியன் குளம் என்று இன்றும் வழங்கி வருகிறது!

குளத்து நீர் பாசனத்திற்கும், இதர உபயோகங்களுக்கும் உதவின. வளமான வயல்களில் ஆனைக்கொம்பன், சம்பா நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தன. வயல்களில் நெல் அறுவடையானதும் சாக்கு மூட்டைகளில் எடுத்து வந்து நிலச் சொந்தக்காரர் வீட்டு வாயிலில் கொட்டி மரக்கால் அளவையால் அளந்து எடுத்துச் சென்று களஞ்சியத்தில் கொட்டுவார்கள். " காந்திமதியாம், ரெண்டுயாம்" என்று ராகத்துடன் நெல்லை அளப்பதைக் கேட்க இனிமையாக இருக்கும். எண்ணிக்கையை ஆரம்பிக்கையில், ஒன்று என்று சொல்லாமல் காந்திமதி அம்மன் பெயரைச் சொல்லுவார்கள். மேலத்தெருவிலும், கீழத்தெருவிலும் இரு வரிசைகளில் வீடுகள் அமைந்துள்ளன. எங்கள் ஊரில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் இருக்கிறது.

எங்கள் ஊருக்குப் பல பெருமைகளுண்டு. வைணவர்களின் புனித இடமான அகோபில பீடத்தை எங்கள் ஊரிலிருந்து இரு அழகியசிங்கர்கள் (குருமார்கள்) அலங்கரித்திருக்கிறார்கள்.

நாதஸ்வர உலகின் சக்கரவர்த்தி என்று பெயரும் புகழும் பெற்ற நாதஸ்வர வித்வான் திரு. அருணாசலம் அவர்கள் எங்கள் ஊர்க்காரர்தான். வருடத்திற்கு ஒருமுறை மலை மேலிருக்கும் முருகப்பெருமான் வீதி உலா வருவார். ஊருக்குள் வரும் போது இரவு நெடுநேரம் ஆகிவிடும். கரகாட்டம், மயிலாட்டம் என கோலாகலப்படும் ஊரில் எல்லாவற்றையும் விட முக்கியமானதாக அருணாசலத்தின் நாதஸ்வரக் கச்சேரி அமைந்துவிடும். இரவு எந்நேரமானாலும் மலையிலிருந்து முருகப்பெருமானுடன் கூடவே நடந்து நாதஸ்வரம் வாசித்து வருவார். எங்கள் ஊர் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கீத ஞானமிக்கவர். அவர் வீட்டு வாயிலிலும், இன்னும் சில முக்கிய மனிதர்கள் வீடுகளின் முன்பும் அமர்ந்து சிறிது நேரம் நாதஸ்வரக் கச்சேரி செய்வார்.

மேலும், கோட்டுவாத்தியம், வயலின், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் இருந்தனர். அக்கிரகாரத்தின் இரண்டு தெருக்களிலும் இரண்டிரண்டு வரிசையில் வீடுகள். மேலத்தெருவின் மேல வரிசை வீடுகளின் பின்புறம் சிறிய பாசன வாய்க்கால் ஓடும். அந்த வீடுகளின் பின் வரிசை முழுவதும் தென்னை, மா போன்ற மரங்களும், செடி, கொடிகளும் நிறைந்து செழிப்பாக இருக்கும்.

வரதராஜப்பெருமாள் கோயிலிலும் திருவிழா, தேரோட்டம் எல்லாம் உண்டு. பத்து நாட்கள் திருவீதி உலா இருக்கும். வருடத்தில் ஒருநாள் சிவனும் வீதி உலா வருவார்.

குளத்தில் பதினோரு மாதங்கள் தண்ணீர் இருக்கும். ஒரு மாதம் தண்ணீர் இருக்காது. அந்த ஒரு மாதத்தில் தூரெடுத்து குளத்தை ஆழப்படுத்தி புது நீர் வரவுக்கு ஒழுங்குபடுத்தி வைப்பார்கள். மே மாத கோடைகாலத்தில் பெய்யும் மழையால் கன்னடியன் வாய்க்காலில் புது வெள்ளம் பாய்ந்து வரும். குளமும் நிறையும். ஊருக்கு சற்று தூரத்தில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது.

எங்கள் ஊர் அருகில் புதுக்குடி என்ற சிறிய கிராமம் இருக்கிறது. இங்கு தரமான மண்பாண்டங்களும் செங்கற்களும் கிடைக்கும். பக்கத்திலுள்ள பத்தமடை பாய் தயாரிப்பில் பிரசித்தி பெற்றது பலருக்கும் தெரிந்திருக்கக்கூடும். வீரவநல்லூர் வேஷ்டிகள், துண்டுகள் தயாரிப்பில் பெயர் பெற்றது.

சமீபத்தில் ஊருக்குச் சென்றபோது நிறைய மாற்றங்கள் தெரிந்தன. மண் தெரு சிமெண்ட் சாலையாக மாறியிருந்தது. தாமிரபரணி தண்ணீர் குழாய் மூலமாக ஊருக்குள் வந்து விட்டது. அக்கிரகாரத்தில் அந்தணர்களே இல்லை எனுமளவிற்கு ஆகிவிட்டது. காலம் மாறிக்கொண்டிருக்கிறது!

About The Author

3 Comments

  1. ganesh

    மிகவும் அருமை. நகற்புரதில் வளர்ந்த நங்கள் இதை படிக்கையில் இந்த கிரம வழ்க்கைகாக எங்குகிறோம்

  2. athinarayanan

    இப்போ எங்க அன்னாச்cசி கிராமட்தையும் கானோம் ஆதி

  3. saravanan

    சிறிய வயதில் அம்பையில் வாழ்ந்தோம்.அழகான ஊர் மட்டுமல்ல அழகான நாட்களும் கூட.

Comments are closed.