எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்” அண்ணா கண்ணன் – நேர்முகம்”

கவிஞர், இதழாளர், ஆய்வாளர், 18 நூல்களின் ஆசிரியர் அண்ணா கண்ணன். இவரின் இரு கவிதைகள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்ந்து இளம் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குத் ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பைப் பதிந்திருக்கிறார். அமுதசுரபியில் இரண்டரை ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றிவிட்டு, இப்போது இணைய இதழ் ஒன்றின் ஆசிரியராக இருக்கிறார்.

‘நான் பிறக்கும்போதே பேனாவோடுதான் பிறந்தேன், எனது லட்சியமே எழுத்து, எழுத்தே என் மூச்சு’ என்றெல்லாம் பிதற்றும் பிசுபிசுப்பில் சிக்கிக்கொள்ளாத, ஒரு பாசாங்கில்லாத கவிஞனை, எழுத்தாளனை அண்ணா கண்ணன் மூலமாகப் பார்க்கிறேன்.

"கிழிந்த ஆடைகளை என் அம்மா தைத்துப் பயன்படுத்துவார், நான் அவர் வழியில் வருகிறேன். கிழிந்த ஆடைகளைக் கூடுமானவரை தைத்துப் பயன்படுத்துவது, பொருளை முழுமையாகப் பயன்படுத்தும், எதையும் வீணென்று தூக்கி எறியாத குணத்தினாலேயே. அந்த நேரங்களில் விரும்பி இருந்தால், இன்னும்கூட தாராளமாகச் செலவு செய்திருக்க முடியும். ஆயினும் ஒவ்வொன்றிலும் சிக்கனம் பேணும் விருப்பத்தினால் அவ்விதம் வாழ்ந்தோம், வாழ்கிறோம். கைக்குட்டை உருவானதும் ஜன்னல் விரிப்புகள், பழைய சேலையிலிருந்து உருவானதும் இந்தப் பின்னணியிலேயே" என்று அவர் கூறும்பொழுது, அவரின் எளிமை என்னை பிரமிப்புக்குள்ளாக்குகிறது. ஏழ்மையால் எளிமை என்பது வேறு, அது சாத்தியம். ஆனால் எல்லாம் இருந்தும் எளிமை என்பது வேறு, அது அசாத்தியம். அண்ணா கண்ணன் அசாத்தியமான எளிமை மிக்கவர். அவர் நிலாச்சாரலுக்காக என்னோடு சேர்ந்து நினைத்துப்பார்த்தவை…

தங்களின் நூல்கள், பரிசுகள், விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்…

‘பூபாளம்’ (1996), ‘உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு’ (1997) ஆகிய கவிதைத் தொகுப்புகளை என் சொந்தச் செலவில் வெளியிட்டேன். ‘காந்தளகம் – 20 ஆண்டுகள்’ (நிறுவன வரலாறு), ‘தகத்தகாய தங்கம்மா’ (வாழ்க்கை வரலாறு), ‘கலாம் ஆகலாம்’, ‘டம்டம் டமடம்’ (சிறுவர் பாடல்கள்), ‘நூற்றுக்கு நூறு’ (சிறுவர் சிறுகதைகள்), ‘தமிழில் இணைய இதழ்கள்’ (எம்.ஃபில். ஆய்வேடு) ஆகிய நூல்களையும் படைத்துள்ளேன். கோலாலம்பூரில் உள்ள உமா பதிப்பகம், பழந்தமிழ்க் காப்பிய நூல்களை எளிய தமிழில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதற்கு இணங்க, இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, நள தமயந்தி, சூளாமணி, பாகவதம் உள்ளிட்ட 10 காப்பிய நூல்களை எழுதி வழங்கினேன்.

மாணவப் பருவத்தில் கவிதை, கட்டுரை, பேச்சு, விளையாட்டு போன்றவற்றுக்காகப் பள்ளியிலும் மாவட்ட, மாநில அளவிலும் பல பரிசுகள் பெற்றேன். நீடாமங்கலம் இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய போட்டிகளில் வென்றேன். கல்லூரிப் பருவத்தில் பாரதியார் சங்கம், பாரதி இளைஞர் சங்கம் எனச் சில அமைப்புகள் நடத்திய கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசுகள் பெற்றேன். என் இருபதுகளில் பல கவியரங்குகளில் கலந்து கொண்டேன். அவை பெரும்பாலும், சிறந்த கவிதைக்குப் பரிசு வழங்கும் வழக்கம் கொண்ட அமைப்புகள். அப்படி கவிதை உறவு, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் எனச் சில அமைப்புகளின் கவிதைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளேன். சில போட்டிகளுக்கு என்னை நடுவராக இருக்குமாறு அழைத்தார்கள். அதன் பிறகு, போட்டிகளில் கலந்து கொள்வதிலிருந்து விலகிக் கொண்டேன்.

கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பு, ‘இளந்தென்றல்’ என்று அழைத்தது. பொன்னடியானின் தமிழ்க் கவிஞர் மன்றம், ‘கடற்கரை கவிமுத்து’ என்ற பட்டம் அளித்தது. வல்லிக்கண்ணன் முதலிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரின் பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஒரு முறை ஒரு கவியரங்கில் நான் கவிதை வாசித்த உடன், அங்கு முன்னிலை வகித்திருந்த கவிஞர் சுரதா, ஒரு ரூபாயை எடுத்து எனக்குப் பரிசாக அளித்தார். வெறும் வாயால் பாராட்டக் கூடாது, ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்ட வேண்டும் என்று அப்போது அவர் கூறினார். ஆயினும் அறிமுகம் இல்லாத ஒருவர், திடீரென நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ பாராட்டும்போது ஒரு புது உற்சாகம் ஏற்படுகிறது. என் சிறுவர் பாடல்கள் சிலவற்றைச் சில பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தும் விழாக்களில் பாடியும் வருகிறார்கள் என்று கேள்விப்படும்போது மகிழ்ச்சி உண்டாகிறது.

தங்களின் இரண்டு கவிதைகள் மட்டும் 32 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டதன் விசேஷ காரணம் என்ன?

என் கவிதைகள், பல மொழிகளுக்கும் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டு. என் கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என எண்ணியிருந்தேன். அப்போதுதான் முனைவர் சுந்தரம் என்ற இந்தி மொழி பெயர்ப்பாளரின் நட்பு கிடைத்தது. அவர் மூலம் இந்தி சார்ந்த மொழிகளின் அநேக மொழி பெயர்ப்பாளர்களின் தொடர்பு கிடைத்தது. அதே நேரத்தில் மாநிலக் கல்லூரி சமஸ்கிருதத் துறைத்தலைவர் முனைவர் தியாகராஜன், சென்னை பல்கலைக்கழகக் கன்னடத் துறைத் தலைவர் முனைவர் ஸ்ரீகிருஷ்ண பட், ஆங்கில மொழிபெயர்ப்பாளர் தி.ந.இராமச்சந்திரன், கானவன், சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி எனப் பலரின் தொடர்புகள் கிடைத்தன. இவ்வளவு மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற திட்டமில்லாமலே படிப்படியான தொடர்புகளின் மூலம் 32 மொழிகளில் மொழிபெயர்க்க முடிந்தது. ஆங்கிலம், சீனம் (மாண்டரின்), சமஸ்கிருதம், அரபி, பெர்சியன், உருது, இரஷ்யன், ஜப்பானியன், ஹீப்ரூ, ஸ்பானிஷ், சிங்களம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, கொங்கணி, இந்தி, குஜராத்தி, மராத்தி, அவதி, பிரஜ்பாஷா, வங்காளம், லடாகி, இராஜஸ்தானி, பீஹாரி, பஞ்சாபி, மைதிலி, ஒரியா, காசி (Khasi), செளராஷ்டிரா உள்ளிட்ட மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் சேர்த்து ஒரே தொகுப்பாகக் கொண்டுவர வேண்டும் என்பது என் விருப்பம். இது, மொழியியலில் ஒரு புது முயற்சியாக இருக்கும்.

‘தகதோம்’, ‘தித்தித்தோம்’ என்ற தலைப்பிலான மரபுக் கவிதைகள் இரண்டினை இதற்குத் தேர்ந்தெடுத்தேன். அவை ஒரு படைப்பாளி தன்னைப் பற்றிப் பேசும் தொனியிலான கவிதைகள். பல்வகைத் தத்துவங்களின், உலகப் பேருண்மைகளின் சாரத்தை இந்தக் கவிதைகளில் கண்டுணரலாம். ஒரு முழு நூலை இவ்வளவு மொழிகளில் மொழி பெயர்ப்பது சற்றே சிரமமாக இருக்கும் என்பதால் முதலில் இரண்டு கவிதைகளில் தொடங்குவோம், பிறகு வாய்ப்பிருந்தால் முழு நூல் அளவுக்குச் செல்லலாம் எனக் கருதினேன். இந்த 32 மொழிபெயர்ப்புகளையும் ஒரே நூலாகக் கொண்டு வரவேண்டும் என்பதே என் திட்டம். இந்த முயற்சிக்கு ஒத்துழைத்த மொழிபெயர்ப்பாளர்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தாங்கள் பத்திரிகைகளில் பணியாற்றியது, எழுத்துத் துறையில் எந்த விதத்தில் உதவுகிறது?

நான் முதலில் கவிதையில்தான் என் படைப்புத் திறனை வெளிக் காட்டினேன். பத்திரிகைகளில் தொடக்கத்தில் புரூஃப் ரீடிங் எனப்படும் மெய்ப்புத் திருத்தினேன். நிகழ்ச்சிகளுக்குச் சென்று அங்கு நடந்தவற்றைக் கட்டுரையாக்கினேன். ஒரு கேள்வியுடன் பலரைப் பேட்டி எடுப்பது, ஒருவரிடம் பல கேள்விகளைக் கேட்பது, பலரிடமும் பல கேள்விகளைக் கேட்பது, 50 பேர் – 100 பேர் கொண்ட பெரும் கூட்டத்தைப் பேட்டி எடுப்பது என விதவிதமாகப் பேட்டி எடுத்தேன். தேர்தல் நடக்கும் முன் கருத்துக் கணிப்பு எடுத்தேன். நடந்த பின் மக்கள் பிரதிநிதியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என மக்கள் கருத்து அறிந்தேன். திரை விமர்சனம், நூல் விமர்சனம், ஓவிய விமர்சனம் செய்தேன். இப்படி ஏராளம். பின்னர் வெளியே சுற்றுவது குறைந்து மேசை முன் அமர்ந்து பணியாற்றினேன்.

ஆசிரியப் பொறுப்பு ஏற்றவுடன் ஒவ்வொரு நாளும் வரும் நூற்றுக்கணக்கான கடிதங்கள், படைப்புகள், விசாரணைகள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றை எதிர்கொண்டேன். ஒரு பத்திரிகையில் வரக்கூடிய துணுக்குச் செய்தி, சிரிப்பு என இடம் நிரப்பிகளில் தொடங்கி, தலையங்கம் எழுதுவது வரை அனைத்தையும் செய்தேன். மெய்ப்பாளர், ஓவியர், புகைப்படக் கலைஞர், பக்க வடிவமைப்பாளர், விளம்பரப் பிரிவினர், விற்பனையாளர், முகவர் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் நமக்குத் தேவையானவற்றை வெளிக் கொணருவது முக்கியம். இந்தப் பணிகள் யாவும் எனக்கு நல்ல பயிற்சியாக அமைந்தன.
பத்திரிகைப் பணியில் உள்ள மிக முக்கிய சவால், குறித்த காலத்திற்குள் ஒரு பணியை முடிக்கும் நெருக்கடிதான். நாளிதழ், வார இதழ், மாத இதழ் என ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு விதமான நெருக்கடி இருக்கும். அச்சு நேரம் நெருங்க, நெருங்க, பக்கங்களை விரைவில் முடிக்க வேண்டும் என்ற அவசரம் உண்டாகும். அது 20-20 கிரிக்கெட் பந்தயத்தில் கடைசி ஓவர்களை ஆடுவது போல் பரபரப்பாக இருக்கும். இந்த நெருக்கடிகளுக்குப் பழகிவிட்டால் பிற நெருக்கடிகளை நாம் எளிதாகச் சமாளிக்க முடியும்.

தட்டச்சு செய்யும்போதே, ஒவ்வொரு பக்கத்திலும் ஏராளமான பிழைகள் ஏற்படுவது இயல்பு. மெய்ப்பாளர் பார்த்துக்கொள்வார் என விட்டுவிடாமல் ஒவ்வொரு சொல்லையும் சரிபார்க்க வேண்டும். சில நேரங்களில் மூலத்திலேயே தவறு இருக்க வாய்ப்புண்டு. ‘வசதியோடு வாழ்ந்தான்’ என வர வேண்டிய இடத்தில் ‘வசந்தியோடு வாழ்ந்தான்’ என ஒருமுறை அச்சாயிற்று.’மதிமுக பொதுச்செயலாளர் வைகோ’ என வர வேண்டிய இடத்தில் ‘மதிமுக தலைவர்’ என ஒரு முறை அச்சாயிற்று. இன்னும் ஆண்டுப் பிழைகள், பெயர்ப் பிழைகள் என எண்ணற்ற பிழைகள், எப்போதும் நம்மை விழுங்கக் காத்திருக்கும். இவை அனைத்தையும் திருத்திச் செம்மையாக்குவது பெரும் பணி. இந்தத் திறன் கைவரப் பெற்றால், எல்லாவற்றிலும் ஒரு விழிப்புணர்வு உண்டாகும்.

பத்திரிகையில் மட்டுமின்றி, பல்வேறு நூல்களுக்கும் நான் மெய்ப்பு பார்த்துள்ளேன். இது மொழியில் என் கவனத்தைக் கூர்மையாக்கியது. படைப்புகளைத் தேர்ந்தெடுப்பது, திறனாளர்களிடமிருந்து கேட்டுப் பெறுவது, சுருக்குவது, திருத்துவது ஆகியவை மிக முக்கிய பணிகள். ஒரு சிறுகதைப் போட்டி வைக்கிறோம். வந்து சேரும் நூற்றுக்கணக்கான கதைகளில் சிறந்தவற்றை எப்படி தேர்ந்தெடுப்பது? அவை அனைத்தையும் படித்துப் பார்த்தால் யார், எங்கே, எப்படி, பிழை விட்டிருக்கிறார்கள் என நமக்கே தெரிந்துவிடும். என்னென்ன உத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? எப்படி பலரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள்? என நம்மால் உணர முடியும். அதன் பிறகு அத்தகைய பிழைகளுக்கு நாம் இடம் கொடுக்க மாட்டோம் இல்லையா?

இதே போன்று மொழிபெயர்ப்புகளிலும் கவனமாக இருக்க வேண்டும். மூல ஆசிரியரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? மொழிபெர்ப்பு சரியாகச் செய்யப்பட்டுள்ளதா? நடை சரியாக உள்ளதா? மூல ஆசிரியரின் புகைப்படம், அவருடையதுதானா? எனப் பல்வேறு கோணங்களில் சரிபார்க்கவேண்டும். பத்திரிகைகளில் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்துவது சாதாரணமாக நடக்கிறது. புகைப்படமோ, ஓவியமோ பயன்படுத்தும்போது அதற்கு உரியவரின் அனுமதி பெற்று, இன்னாருக்கு நன்றி எனக் குறிப்பிட வேண்டும். ஒரு பத்திரிகை ஆசிரியராக இருக்கையில் காப்புரிமை சார்ந்தவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
இவை மட்டும் அல்லாமல் விளம்பர வாசகங்கள் எப்படி அமைய வேண்டும், கலை-இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவது, அலுவலக நிர்வாகம் எனப் பல பணிகள் இருக்கும். இப்படிப்பட்ட வேலைகளில் பயிற்சி பெற்றதால் துணிச்சல், இரவு பகல் பாராமல் உழைக்கும் தன்மை, நிறைய தொடர்புகள், நண்பர்களைப் பெறுவது, பணியின் நிமித்தம் நிறைய படிப்பது, பலரையும் சந்திப்பது எனப் பல நன்மைகள் விளைந்தன. இவை என் எழுத்துக்கும் உதவிகரமாய் இருக்கின்றன. முக்கியமாக, கட்டுரை எழுதுவதில் எனக்கு உள்ள ஆற்றலுக்குத் தீனி போட்டுக் கூர் தீட்டியதில் இதழியலுக்குப் பெரும் பங்குண்டு. இந்தத் துறையில் நான் பெற்ற அனுபவங்களை இன்னும் முறையாகப் பதியவில்லை. இதழியல் தந்த அனுபவங்கள், நெடுங்காலப் பயன்கள் கொண்டவை. எழுத்துக்கு மட்டும் அல்லாமல், மேலும் பல துறைகளுக்கும் பயன்தர வல்லவை.

தங்களின் சாதனை என்று எதனைக் குறிப்பிடுவீர்கள்?

சாதனை எதையும் நான் இன்னும் படைக்கவில்லை. 27 வயதில் அமுதசுரபியின் ஆசிரியரானது, என் இரு கவிதைகள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது, தமிழில் இணைய இதழ்கள் என்ற தலைப்பில் எம்.ஃபில் ஆய்வு மேற்கொண்டது எனக் குறிப்பிடத்தக்க சில பணிகளை ஆற்றியுள்ளேன். இப்போது அடித்தளம் அமைத்து வருகிறேன். எதிர்காலத்தில் என் கட்டடம் எழும். சாதனை என்ற சொல்லின் கன பரிமாணத்தையும், ஆழம், அடர்த்தியையும் நான் அறிவேன். பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற கனவை மட்டும் இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளேன்.

(மீதி அடுத்த இதழில்) 

About The Author

4 Comments

  1. Girijamanaalan

    அண்ணா கண்ணன் அவர்களைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆவலாயிருந்த ஓர் படைப்பாளனாகிய எனக்கு இந்த இணையதளம் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது. நன்றி!
    – கிரிஜா மணாளன். திருச்சிராப்பள்ளி. இந்தியா.

  2. S. Balasubramanian

    திரு. அண்ணா கண்ணன் அவர்களின் நேர் காணல் பற்றி.
    என்னை பொருத்தவரையில் ஒரு படைப்பாளன் ஆண்டவனைவிட உயர்ந்தவன் ஏனெனில் படைப்பாளந்தான் அதிக அவதாரம் எடுக்கிறான் ஆண்டவனைவிட. அவரின் பேனா இந்த சமூகத்தை மாற்ற வல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் சிறந்த கேள்விகல் பிறக்கும்பொதுதான் நல்ல பதில் கிடைக்கிறது. திரு அண்ணா கண்ணன் அவர்களின் பேட்டிக்கும். பிரசுரித்த நிலாசாரலுக்கும் என் நன்றியை உரித்தக்கிகிரேன்.

  3. K.V.PATHY

    32 மொழிகளில் சௌராஷ்ட்ர மொழி பெயர்ப்பைப் பார்க்க ஆவல்.

  4. K.V.Pathy

    32 மொழி பெயர்ப்புகளில் சௌராஷ்ட்ர மொழி பெரர்ப்பைக் காண ஆவல்.

Comments are closed.