காலையில் கல்லூரி மாலையில் கச்சேரி! பாடகி கல்பலதிகா – ஓர் சந்திப்பு

அபஸ்வரம் ராம்ஜி அவர்களுடன் பாடகி கல்பலதிகா

வளரும் கலைஞர்களின் வசந்த மேடை வி.டி.எஸ். கலை மன்றம். எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி (ஜெமினி) வளாகத்தில் எந்நாளும் இளங்குயில் ஒன்று நம் நரம்புகளை மீட்டிக் கொண்டிருக்கும். ஆண்டின் சிறந்த பத்து கலைஞர்களை அதில் தேர்வுசெய்கிறதும், அதில் மகத்தானவரை ‘பாலபாஸ்கரா’ விருதளித்து கௌரவிப்பதும் வி.டி.எஸ்.சுக்கு விருப்பமான விஷயம்.

இந்த ஆண்டின் வித்தகி கல்பலதிகா. சென்னை அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் முதலாண்டு ஆங்கில இலக்கிய மாணவி. இசைப்பயணத்தைக் கல்வி குறுக்கிட்டு விடுமோ என தொழிற்கல்வி ஆசையைத் தூர வைத்தவர்.

அப்பா நாத உபாசகர். அம்மா சங்கீத ஆசிரியை. கல்பலதிகாவுக்கு அமுதுடன் சங்கீதத்தையும் ஊட்டியே வளர்த்திருக்கிறார்கள். வீடுநிறைய அந்தக் காலத்திலேயே எல்.பி. தகடுகள், ஒலிநாடாக்கள். எப்போதும் அப்பா வாயில் வெற்றிலையும், காதில் சங்கீதமுமாய் இயங்குவார். நாலைந்து வயசிலேயே, ராகம் தெரியாவிட்டாலும் ஒரே ராகத்தில் அமைந்த பல்வேறு பாடல்களை கல்பலதிகா அடையாளங் காட்டி ஆச்சர்யப்படுத்தினார்.

முதல் குரு அம்மா ஸ்ரீமதி உமா ராதாகிருஷ்ணன், கீர்த்தனை வரை. பிறகு அரியக்குடி பாரம்பரியத்தில் ஸ்ரீமதி சகுந்தலா சேஷாத்ரியிடம் பாடம். செப்டம்பர் 3, 1999 மறக்க முடியாத நாள். குரு ஆதரவில் வி.டி.எஸ். கலை மன்றத்தில் முதல் முழுக் கச்சேரி. அப்போது வயது பத்து. முன்னிலை தில்லி பல்கலைக்கழக இசைத்துறை முன்னாள் தலைவர் டி.ஆர்.எஸ்.

இப்போது வயது பதினெட்டு. வருடத்துக்கு சுமார் ஐம்பது கச்சேரிகள்!

அவ்வப்போது ஸ்ரீமதி சௌம்யா, சசிகிரண், சஜீவ், ஸ்ரீமதி வசுந்தரா ராஜகோபால் எனப் பலரிடமும் அபூர்வ ராகங்களும் கீர்த்தனைகளும் கற்றுக் கொண்டார்.

முதல் மேடையேறிய அதே வருடம் ராஜ் தொலைக்காட்சியில் ‘ராகம் சங்கீதம்’ நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசு. வழங்கியவர் சித்திர வீணை ரவிகிரண். பிற்பாடு 2003ல் அதே நிகழ்ச்சியில் முதல் பரிசு பெறவும் வாய்த்தது. முதல்பரிசு பெற்றவருக்கு ராஜ் தொலைக்காட்சி முழுக் கச்சேரி வாய்ப்பு தருகிறது. அவரது முதல் தொலைக்காட்சி வாய்ப்பு. அதைப் பார்க்க என்றே வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார்கள். பிறகு ஜெயா தொலைக்காட்சியில் இரு முறை ‘பாலபிரும்மம்’ நிகழ்ச்சி வாய்ப்பும், வளரும் கலைஞர் என பொதிகையில் வாய்ப்பும், சப்தகிரி, தற்போதைய மெகா தொலைக்காட்சி என வாய்ப்புகள் தொடர்கின்றன. விருதுகளும்!

போட்டிகளில் உற்சாகமாய்ப் பங்கு கொள்வேன், என்கிறார் கல்பலதிகா. தந்தையின் BSNL நிறுவன கலைப்போட்டிகளில் தவறாமல் பரிசு பெறுகிறார், ஒருமுறை அகில இந்திய அளவில் முதல் பரிசு கிடைத்தது.

மறக்க முடியாத கச்சேரி எது?

ஒவ்வொரு கச்சேரியும்தான், எனப் புன்னகைக்கிறார். சிறிதுநேரம் பாடினாலும் திருவையாறு தியாகராஜ ஆராதனையையும், குருவாயூர் செம்பை சங்கீத உற்சவத்தையும் மறக்கவே முடியாது, என்கிறார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் தேர்வாகி, திருச்சி, நெல்லை, கோபிசெட்டிபாளையம், பெரம்பூர் என்று சங்கீத சபைகளில் கச்சேரிகள் கொடுத்திருக்கிறார். தவிர உமாஷங்கரின் ‘பூதசஞ்சாரம்’ பரதநாட்டிய நிகழ்ச்சிக்கும், சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் திருமதி லதா ரவியின் நிகழ்ச்சிக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.

வாழ்வின் திருப்பு முனை என எதை நினைக்கிறீர்கள், கல்பலதிகா?

சந்தேகம் இல்லாமல் அபஸ்வரம் ராம்ஜி சாரின் ‘இசை மழலைகள்’ குழுவில் இடம் கிடைத்ததுதான். அவர் ஏற்பாடில் எப்படியும் மாதம் இரண்டு மூன்று கச்சேரிகள் எங்கள் எல்லாருக்கும் எப்படியும் வாய்த்து விடுகின்றன. மும்பை ஷண்முகானந்தா அரங்கத்திலும், விசாகப்பட்டினத்தில் தெலுங்கு அகாதெமி கச்சேரியும் கூட வாய்த்தன. கல்யாணக் கச்சேரிகளும் தமிழ்நாடு முழுவதும் இருந்து அன்போடு அழைக்கிறார்கள்.ராம்ஜி சார் எங்களுக்கு பெரிய வித்வான்களுடன் சந்திப்புகளுக்கும், ராக நுணுக்கங்கள் பற்றிய சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடுகள் செய்கிறார்.

இசைத்தகடுகள், ஸ்டூடியோ அனுபவங்கள்…

ஸ்ரீ அரவிந்த அன்னையின் ‘நிசப்த ரீங்காரம்’ தகடில் பாடியிருக்கிறேன். நடிகர் நெப்போலியனின் ‘வீரண்ணா’ படத்துக்கு டைட்டில் சாங், சௌந்தர்யன் இசையில் டிராக் பாடினேன். திரை இசை பிடித்த விஷயம்தான்.

இசைக்காகக் கல்வியை ரெண்டாம்பட்சமாக்கியகச் சொல்லிவிட்டீர்கள்… படிப்பெல்லாம் எப்படி?

நல்ல மதிப்பெண்கள்தான், எனப் புன்னகைக்கிறார் கல்பலதிகா. அதைவிட எங்கள் கல்லூரி எனக்கு அளிக்கிற ஆதரவும் அரவணைப்பும் மறக்க முடியாத ஊக்கம், என நெகிழ்கிறார்.

தற்போது சங்கீத சபாக்களில் மதியக் கச்சேரி என வளைய வருகிறார் கல்பலதிகா. விரைவில் தன் இடத்தை அவர் கண்டுபிடிப்பார், என அமுதசுரபி வாழ்த்துகிறது.

சந்திப்பு : சைதன்யா

About The Author