திரு. அசோகமித்திரன் அவர்களுடன் ஒரு நேர்முகம்

சக கால எழுத்தாளர்களில் அசோகமித்திரன் அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ‘அன்பின் பரிசு’ என்ற வானொலி நாடகத்துடன் தனது இலக்கியப் பயணத்தைத் துவங்கிய அசோகமித்ரன் அவர்கள், அதைத் தொடர்ந்து, ‘கரைந்த நிழல்கள்’ , ‘பதினெட்டாவது அட்சரக் கோடு,’ ‘தண்ணீர்.’ ‘விழா மாலைப்பொழுதில்’, ‘விடுதலை’ போன்ற பிரசித்தமான நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். ‘அப்பாவின் சினேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றிருக்கிறார். அவருடன் ஒரு உரையாடல்.

நீங்கள் முதன் முதலில் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்? உங்களை எழுத்தாளராக்கிய முக்கிய சம்பவங்கள், ஊக்கம் அளித்தவர்கள்?

எனக்கு எழுதுவதிலே ஒரு சந்தோஷம் இருந்தது.

நீங்க எந்த வயதிலே எழுத ஆரம்பிச்சிங்க?

என்னுடைய விஷயத்திலே அது 26 வயதிலேதான் நடந்தது. முதல்லே ஆங்கிலத்திலேதான் எழுதினேன். தமிழ்லே நன்னா எழுத வரல்லே. அப்புறம் தான் எழுதி எழுதி பழக்கமாச்சு. அதுனால் 50 வயதில் ஒருவ்ர் திடீரென எழுத்தாளராக ஆனார்னு சொல்ல முடியாது! முதல்லே ஆரம்பிக்கும் போது வருஷத்துக்கு இரண்டு அல்லது மூனுதான் வரும். கதைகள் என்பது எல்லாருக்கும் ஒரேமாதிரியாக பிடிக்கும்னு சொல்ல முடியாது. ஆனா கட்டுரைனா ஒருவிதத்திலே எல்லாருக்கும் சம்பந்தப் பட்டிருக்கும்.

உங்களுடைய முதல் கதை…

என்னுடைய முதல் படைப்பு ‘அன்பின் பரிசு’ என்கிற ரேடியோ நாடகம் . அதற்கப்புறம் முதல் கதை வெளியானது ஜூலை 57ல் ‘ஒரு நாடகத்தின் முடிவு’ங்கிற கதை. கலை மகளில் வெளியானது. அந்தக்காலத்துலே கலைமகள்ளே கதை வரதுன்னா அது பெரிய விஷயம்.

பிறகு நீங்கள் ஜெமினி ஸ்டூடியோவிலே பொது மக்கள் தொடர்பு அதிகாரியா பணிபுரிந்த அந்த அனுபவத்தை ‘கரைந்த நிழல்கள்’ என்ற நாவலாக எழுதினீர்களா?

ஆமாம். சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். காலங்களும் மாறலாம். ஆனால் மனிதர்களிடையே உள்ள உறவுதான் சாஸ்வதமானது. களன் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. திரைப்படங்களுக்குப் பின்னால் இருக்கும் மனிதர்களின் வாழ்கையை, அவர்களின் ஊறவுகளைச் சித்தரிக்கும் கதை. அதை பின்பு ஆங்கிலத்தில் ஆல்பர்ட் ப்ரான்க்ளின் என்பவர் Cast of character என்ற பெயரில் மொழிபெயர்த்தார். அந்தக் காலத்திலேயே ஸ்டெர்லிங் 3500 பிரதிகள் போட்டார்கள். அதில் 1000 தான் விற்றது. பிரதி ஏழு ரூபாய். அப்புறம் சென்னையிலேயே வீதிகளில் பிரதி ஒரு ரூபாய்க்கு கிடைச்சுது. அதை நான் திருப்பி வாங்கி விட்டேன். இப்போ புதிதாக மொழிபெயர்த்து New horizon publisher பத்ரி நாராயணன் போட்டிருக்கார்.

அதிகமான புத்தகங்கள் வருவது நன்மையா, கெடுதலா? தரம் பார்த்துச் செய்கிறார்களா?

நிறைய எழுத்தாளர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். என் காலத்தில் நிறைய கஷ்டப்படனும். இப்போது பத்திரிகைகளும் நிறைய இருக்கிறது. உண்மையான் அங்கீகாரம்னு பார்த்தால் ஆங்கில எழுத்தாளர்களிலே லட்சம் பேர் எழுத்தினாக் கூட இரண்டு அல்லது மூன்று பேருக்குத்தான் கிடைக்கிறது. நகையிலே சேதாரம் என்று சொல்வதைப் போல, எல்லா கண்டத்திலேயும் , நாடுகளிலேயும் அப்படித்தான். பிரேம் சந்த் என்ற நல்ல எழுத்தாளர். அவர் ஹிந்தியிலேயே எழுதினார். அதனால் இந்தியா முழுவதும் அங்கீகாரம் கிடைத்தது. எனக்கு எனது நாவல்கள் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் வாய்ப்புக் கிடைத்தது.

வெளி நாட்டு எழுத்தாளர்கள் மிகுந்த ஆராய்ச்சி செய்து நாவல் எழுதுகிறார்கள், உதாரணமாக ‘டா வின் சி கோட் போல’. நம் தமிழில் அதுபான்ற நாவல்கள் வருவதில்லையே?

அதைபற்றி எனக்கு ரொம்ப நம்பிக்கை இல்லை. அனுபவங்கள் சேரச் சேர அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே பலர் கதை எழுதுகிறார்கள். சிலர் ஆராய்ச்சி செய்து எழுதுகிறார்கள். இரண்டாம் உலக யுத்தத்தின் அடிப்படையில் வந்த நாவல்கள் ஏராளம். இது அவரவர்களின் மனோபாவத்தையும் திறமையையும் பொறுத்தது.

ஒருவர் முழு நேர எழுத்தாளராக வெற்றிகரமாக இருக்க முடியுமா?

முழுநேர எழுத்தாளர்களாக இருந்தால் மக்கள் தொடர்பு அதிகம் இருக்காது. ஒரு எழுத்தாளர் இன்னொரு முழு நேர எழுத்தாளருடன்தான் தொடர்பு கொண்டிருப்பார். இப்போ ஜெயகாந்தனுக்கு நிறைய வாசகர்கள் இருந்தார்கள். ஆனால், தேர்தலில் நின்ற போது மிகக் குறைந்த ஓட்டுதான் கிடைக்கிறது. இதுதான் உண்மை.

எழுத்தாளர்களுடைய எழுத்துக்கள் நிலைத்து நிற்குமா?

இது மாதிரி மயக்கங்கள் நமக்கு நிறைய இருக்கு..

பின் எழுத்தாளர்கள் ஏன் எழுதறாங்க?

எழுதற சமய்த்துலே ஏற்படும் ஒரு மகிழ்ச்சி – அதுவே அவங்களுக்கு ஒரு மோடிவேஷன். அது ஒரு சுய வெளிப்பாடு- ஒரு சுய திருப்தி

நீங்க இவ்வளவு பெரிய எழுத்தாளர்- ஒரு பந்தா இல்லாமே, அலட்டல் இல்லாமே பேசறீங்க..

இதுதான் உண்மை. முதலிலேயே ஒரு தெளிவு இருந்தா இந்தப் பக்குவம் வந்துவிடும்.

முன்னுரை எழுதுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முன்னுரை எழுதச் சொல்வதென்பது ஒரு குரூரமான இம்சை . மற்றவர்கள் தங்கள் எழுத்துக்களைப் படிபார்களோ மாட்டார்களோ என்ற கவலையினால் ஒருத்தனாவது படிப்பானே என்ற நம்பிக்கைதான். கைலாசபதி என்ற ஒரு இலங்கை பத்திரிகைக்காரர். 40 பக்கம் அணிந்துரை எழுதுவார். ஆனால் பாவம் அவர் அற்பாயுளிலேயே போய்விட்டார். முன்னுரை என்பதை சில சமயம் படிக்காமலேயே கூட எழுத முடியும்.

நீங்கள் சுதேச மித்திரன் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் கூட எழுதியிருக்கிறீர்கள்..அந்த அனுபவம் பற்றி…

ம்… அது ஒரு தமாஷான அனுபவம். அப்போது 1960களில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த பத்திரிகை அது. அங்கு சிதம்பரம், பக்த வத்சலம் போன்றவர்கள் வருவார்கள். நான் கிங்கரன்ங்கற பேரிலே அரசியல் கட்டுரைகள் எழுதினேன். அதை ரொம்ப ரசிச்சாங்க. பிறகு அந்த பத்திரிகை காணாமலேயே போயிடுத்து.

நாவல் சிறுகதைகள் இவைகளில் எதை எழுதுவது சுலபம் என்று நினைக்கிறீர்கள்?

ஒவ்வொன்றும் ஒரு மாதிரியான வடிவம். நாவல் நல்ல வடிவம்தான். நாவல் என்றால் தொடர்ச்சி இருக்க வேண்டும். முதல் அத்தியாயத்தில் ‘நிர்மலா’ என்று எழுதிவிட்டு பிறகு அடுத்த அத்தியாயங்களில் சந்திரா என்று மாறிவிடக்கூடாது. Consistency வேணும்.. எது கஷ்டம் எது சுலபம் என்று சொல்ல முடியாது. எதை எழுதினாலும் சீராக இருக்க வேண்டும்.

தங்களைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று தயாரித்திருக்கிறார்கள். அதைபற்றி தங்களின் கருத்து..

நன்றாகவே வந்திருக்கிறது. அரைமணி நேரம் அளவிற்கு அதை எடுத்திருக்கிறார்கள். அன்ஷன் குமார் என்பவர் அதை எடுத்தார்.

தங்களுக்கு சாகித்ய அகாடமி விருது ‘அப்பாவின் சினேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்குக் கிடைத்தது.. அது பற்றிய தங்கள் எண்ணங்கள்

அதில் சில சிறுகதைகளும் ஒரு குறு நாவலும் இடம் பெற்றிருக்கிறது. ஆங்கிலம் , ஹிந்தி மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது. ஹிந்தியில் நல்ல வரவேற்பு. ஹிந்தியில் பெயர் வாங்குவது ரொம்ப கஷ்டம்.. நிறைய பிரதிகள் விற்றன.

‘இருட்டிலிருந்து வெளிச்சம்’ என்ற தங்கள் தொகுப்பில் சினிமா பற்றிய கட்டுரைகள் அடங்கியிருந்தன அது பற்றி…

அதை மாசிலாமணி என்பவரின் குமாரர் நந்தா கலைஞர் பதிப்பகத்தில் வெளியிட்டார். புத்தகமாக வந்தது. வரவேற்பு இருந்தது.

உங்கள் எழுத்துக்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?

எந்தக்கதை எனக்கு ரொம்பப் பிடிச்சுதுன்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மனதுக்குப் பிடித்தால்தான் நாம் எழுத வேண்டும். மனதுக்குப் பிடித்தது என்பது ஒரு துக்ககரமான நிகழ்ச்சியாகக் கூட இருக்கலாம்.

ஓர் எழுத்தாளனை எவ்வளவு விரிவாகப் பேட்டி கண்டாலும் அது அரைகுறையாகத் தான் இருக்கும். ஆனால் ஒரு சிறுகதையைப் படித்தால் கூட அந்த எழுத்தாளர் பற்றி நிறைய அறிய முடியும்.

இந்த நேர்காணல் மூலம் அன்பர்களுக்கு நான் சொல்லக் கூடியது இது தான்: என் வீடு தேடி வந்து இந்த நேர்காணல் கண்டதற்கு என் நன்றி.

*****

About The Author

1 Comment

  1. பூவேந்திரன்

    பேட்டி நன்ட்றாக உள்ளது. இந்த பேட்டியை ம்ப்3 ஒலி கோப்பாக இணைக்க முடியுமா? அவரின் குரலாலே கேட்பது ரொம்ப சந்தோசமாக இருக்கும். பூவேந்திரன்

Comments are closed.