திரைப்படம் தயாரிப்பதென்பது நுட்பமான கலை” – ‘வல்லமை தாராயோ’ பட இயக்குனர் மதுமிதா”

‘வல்லமை தாராயோ’ படத்தை இயக்கிய மதுமிதா சென்னையில் பிறந்தவர். தனது எட்டாவது வயதில் இந்தோனேஷியா சென்று பள்ளிக் கல்வியை கற்ற அவர், ஃபாஷன் மற்றும் மல்டிமீடியா படிப்பை சிங்கப்பூரில் தொடர்ந்து, பின்னர் அமெரிக்காவில் திரைப்படம் இயக்கும் கலையில் பட்டம் பெற்று மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார். சிங்கப்பூரில் இரண்டு குறும்படங்கள் எடுத்து அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். அவர் தனது இந்தோனேஷிய மற்றும் திரை அனுபவங்களைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

‘வல்லமை தாராயோ’ படம் நூறு நாட்கள் ஓடி வெற்றிவிழா கொண்டாடியதற்கு எங்கள் வாழ்த்துக்கள். உங்கள் முதல் படம் நூறு நாட்கள் ஓடும் என்று எதிர்பார்த்தீர்களா?

படம் எடுக்கும்போது ஒரு நல்ல படமாக, ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவில் யதார்த்தமான படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாயிருந்தது. ரசிகர்கள் ஆதரவினால் நூறு நாட்கள் ஓடியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

‘வல்லமை தாராயோ’ என்ற பாரதியாரின் பாடல் வரிகளை உங்கள் படத்தின் தலைப்பாக வைக்கக் காரணம்?

நான் பாரதியாரிடம் மிகவும் நாட்டம் கொண்டவள். நான் இந்தோனேஷியாவில் இருந்த காலத்தில் என் அப்பா ஒரு தமிழ் மன்றம் நிறுவி நடத்தி வந்தார். அதில் நிறைய விழாக்கள் நடத்துவோம். பாரதியார் பற்றிய நாடகங்களில் நான் பாரதியார் வேஷம் போட்டுப் பலமுறை நடித்திருக்கிறேன். செப்டம்பர் மாதங்களில் பாரதியார் விழா கொண்டாடுவோம். என் அப்பாவிற்கு பாரதியாரிடமிருந்த பற்றுதான் எனக்கும் தொடர்ந்தது என்று நினைக்கிறேன். மேலும், ‘வல்லமை தாராயோ’ என்பது வலிமை மிக்க படத்திற்குப் பொருத்தமான தலைப்பு என நினைத்தோம்.

நீங்கள் இந்தோனேஷியாவில் பல ஆண்டுகள் இருந்திருக்கிறீர்கள். அங்குள்ள இஸ்லாமியர்கள் கூட நம் நாட்டு இந்து கலாசாரத்தைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார்களே! அது பற்றி விவரமாகக் கூறுங்களேன்.

இந்தோனேஷிய மக்கள் ரொம்பவே அமைதியானவர்கள். அதட்டிக் கூடப் பேச மாட்டார்கள். எதற்கும் கவலைப்படாத நிம்மதியான வாழ்க்கை முறை. ரொம்ப அழகான, ஒற்றுமையான நாடு. முஸ்லீம் மதத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு சரஸ்வதி, விஷ்ணு என்று இந்துப் பெயர்களைச் சூட்டியிருப்பார்கள். அவர்களைக் கேட்டால், "ஹிந்து எங்கள் கலாச்சாரம், இஸ்லாம் எங்கள் மதம்" என்று சொல்வார்கள். நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயணமும் இருக்கும். நாம் இங்கு உபயோகப்படுத்தும் துனியா (உலகம்), திரை (screen) போன்ற நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் அங்கு இந்தோனேஷிய மொழியில் இருக்கின்றன. அவர்கள் ராமர் பாலி தீவில்தான் பிறந்ததாகக் கருதுகிறார்கள். ராமாயணம், மகா பாரதத்தின் முழுக் கதைகள் தெருக்கூத்துகளாக இந்தத் தீவில் பல இடங்களில், பல மணி நேரங்கள் நடக்கும். ராமனாக, ஹனுமானாக வேஷமிட்டு நடிப்பார்கள். நமக்கு பாஷை புரியாவிட்டாலும் அங்க அசைவு, நடிப்பிலிருந்து நாடகத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

எல்லா நாட்டையும் விட இந்துக்களுக்கு அதிக மதிப்புக் கொடுப்பார்கள். அங்கு ஒரு டாக்ஸியில் ஏறி நாம் இந்து என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் அவ்வளவு மரியாதை, சந்தோஷம். இஸ்லாமியர்களும் இந்துக்களும் அந்த அளவுக்கு ஒற்றுமையாக வாழ்கிறார்கள். நாம் இங்கு பொட்டு வைத்துக் கொள்வதுபோல அங்கு பெண்கள் அரிசியினால் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு கோவில் இருக்கும். காலையில் கடைகளைத் திறக்கும் முன்னர் தீபாராதனை காட்டுவார்கள். இஸ்லாமியர்கள் இவ்வளவு இந்துப் பழக்கங்களையும் கடைபிடித்து வருகிறார்கள். ரொம்ப ரொம்ப ரொம்ப ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். மற்ற மதத்தையும் மதிக்கின்ற மக்கள் அங்கு வாழும் இஸ்லாமியர்கள்.

அங்கே எவ்வளவு தமிழ்க் குடும்பங்கள் இருக்கும்?

பிழைப்பிற்காக சென்றவர்கள் என்றால் மொத்தம் இந்தோனேஷியா முழுவதும் 1000, 1500 குடும்பங்கள் இருக்கும். இந்தியாவிலிருந்து அங்கு குடியேறிய பூர்விக மக்கள், அதாவது மூன்று தலைமுறைகளுக்கு முன்பே நிரந்தரமாகக் குடியேறியவர்கள் 50,000 அல்லது 75,000 பேர் இருப்பார்கள். அவர்கள் தாத்தா காலத்தில் தமிழ் பேசியிருப்பார்கள். ஆனால் இப்போது உள்ளவர்களுக்குத் தமிழ் தெரியாது.

அங்குள்ள பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாக இருக்கிறதா? தமிழைக் கற்பதற்கு என்ன வழி?

அங்கு பல பன்னாட்டுப் பள்ளிகள் இருக்கின்றன. ஒரு இந்திய பன்னாட்டுப் பள்ளியும் இருக்கிறது. ஆனால், அங்கு ஆங்கிலம் தான் முதல் மொழி. இந்தி இரண்டாவது மொழி. மற்றபடி, தமிழ் படிப்பதென்றால் என் அப்பாவின் தமிழ் மன்றம்தான். இந்தோனேஷியா செல்வதற்கு முன்னால் அவர் இங்கு பாம்பே கண்ணனின் பல மேடை நாடகங்களிலும், டி.வி நாடகங்களிலும் நடித்திருக்கிறார். இந்தோனேஷியா சென்றதும் அவருக்குக் கலை உலகைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அதனால்தான் தமிழ் மன்றம் நிறுவினார். அதன் மூலம் இந்தோனேஷியாவில் வாழும் தமிழ் மக்களுக்கு் தமிழ் பயிற்றுவிப்போம். பல கலை நிகழ்ச்சிகள் நடத்துவோம். இதுபோல் என் அப்பாவின் முயற்சியால்தான் நான் தமிழைக் கற்றுக் கொண்டேன்.

சிங்கப்பூரில் குறும்படங்கள் எடுத்து விருதுகள் பெற்றிருக்கிறீர்கள்! எப்படி உங்களுக்குப் படம் எடுப்பதில் திடீர் ஆர்வம் ஏற்பட்டது?

நான் சிங்கப்பூருக்கு ஃபாஷன் டிசைன் பற்றி படிப்பதற்காகத்தான் போனேன். முதலாண்டு எல்லாத் துறைகளைப் பற்றியும் அடிப்படைக் கல்வி கொடுத்தார்கள். அதில் படத்துறையும் ஒன்று. அதற்காக நான் எடுத்த முதல் படமே விருது பெற்றதினால், "இதுதான் நான் செல்லவேண்டிய பாதை" என்று தீர்மானித்தேன்.

நீங்கள் கவுதம் மேனனிடம் இணைந்து பணியாற்றியது இயக்குனராக வருவதற்கு உதவியாக இருந்ததா?

ஆமாம்! அவரிடம் ‘பச்சைக்கிளி முத்துச் சரம்’ படத்தில் சிறிது காலம் மட்டுமே வேலை செய்தேன். அதற்கு முன் அமெரிக்காவில் இயக்குனர் துறையில் படிக்கும்போது படத்தை எப்படி இயக்க வேண்டும் என்பது போன்ற நுணுக்கங்களை ஒரு படத்தில் பயிற்சியாளராக இருந்து கற்றுக் கொண்டேன். கவுதம் மேனன் ஒரு அமைதியான மனிதர். திட்டமிட்டு வேலை செய்வார். எல்லோருக்கும் மதிப்பு கொடுப்பார். இரைந்து பேசவே மாட்டார். ஆனால் வேலை மட்டும் ஒழுங்காக நடந்து கொண்டிருக்கும். நிச்சயமாக இந்தப் பயிற்சிகள் எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்தன.

பொதுவாக திரையுலகில் பெண்கள் இயக்குனராவது கடினமாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே சுஹாசினி, ரேவதி, ஸ்ரீப்ரியா போன்ற நடிகைகள் இயக்குனர்களானாலும் அவர்களுக்கு தமிழ்த் திரையுலகில் முன்பே நடித்துப் பரிச்சயமிருந்தது. தமிழ்த் திரையுலகுக்கே புதியவரான உங்களுக்கு ஏதும் கஷ்டமாக இல்லையா?

அப்படி எதுவும் கஷ்டமாக இல்லை. எதையுமே திட்டமிட்டு செய்ய வேண்டிய முறையில் சரியாக செய்தால் சிரமம் எதுவுமிருக்காது. அமெரிக்காவில் பயின்றபோதும் சரி, கவுதம் மேனனிடம் வேலை செய்யும்போதும் சரி, இதனை நன்றாகத் தெரிந்து கொண்டேன்.

நவம்பர் 23ம் தேதி படத்திற்கு பூஜை போட்டோம். மே 23ம் தேதி படத்தை முடிக்க வேண்டுமென்று திட்டமிட்டோம். அதுபோல் மே 23ம் தேதி படம் முடிந்து முதல் பிரதி தயாரானது. அப்புறம் பிரதிகள் போட்டு, நல்ல நாள் பார்த்து, மற்ற பெரிய படங்கள் ரிலீசாகாத சமயம் பார்த்து ஜூன் 28ம் தேதி படத்தை வெளியிட்டோம். திரைப்படம் தயாரிப்பதென்பது நுட்பமான கலை.

(மீதி அடுத்த இதழில்)

About The Author

1 Comment

  1. பழனிராஜன்

    ஹிந்து எங்கள் கலாச்சாரம், இஸ்லாம் எங்கள் மதம்” என்று சொல்வார்கள். நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயணமும் இருக்கும். இதைப் படிக்கும் பொழுது மனம் மகிழ்ச்சியில் பறக்கிறது. இந்து கலாச்சரத்தை அவர்களாது பின்பற்றுகிறார்களே.

    பழனிராஜன்
    மைசூர்

Comments are closed.