“ம்ம்ம்ம்.. எனக்கு ரசிகர்களின் பல்ஸ் தெரியும்” சென்டிமெண்ட் பேசும் சிம்ரன்

சிக்கென்று இருக்கிறார் சிம்ரன். அவரைப் போலவே அவ்வளவு ஷார்ப்பாக இருக்கிறது அவரது பதில் . உடம்பை அவர் மனக் கட்டுக்குள் வைத்திருக்கிறார். யாரைப் பார்த்தாலும் ஒரு புன்னகை உதிர்க்கத்தவறுவதில்லை அவரது இதழ்கள். நல்ல நடிகை, நல்ல டான்சர் இப்படி நிறைய எல்லோருக்கும் தெரிந்த நல்லது இருக்கிறது. அதற்கும் மேல் நல்ல பெண்மணி என்பது அவரிடம் பேசும் போது புரிகிறது. திருமணத்திற்குப் பிறகு நிறைய பொறுப்புகள் வந்திருப்பது அவருடைய வார்த்தைகளில் தெரிகிறது.

உச்சி வெயிலில் பீச் காற்றை குளுகுளு ஏசி அறையின் ஜன்னல் கம்பிகளுக்கிடையே ரசித்துக் கொண்டே கூலாக பேசுகிறார் சிம்ஸ். அந்த ஷூட்டிங் பங்களாவில் ஆட்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிம்ரன் திரை சீரியல் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது . இவர் ஷாட்டிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ஷூட்டிங் பார்க்க வந்த பெண்மணியின் குழந்தையை ‘சோ …. ச்சுவீட்’ என்று கொஞ்சுகிறது இந்த சுவீட் பார்ட்டி . லஞ்ச் பிரேக்கில் ஜாலியாக ஆரம்பித்தது அந்த கார சார லஞ்ச் சந்திப்பு .

எப்படி இருக்கிறது இந்த சின்னத் திரை அனுபவம் ?

ரொம்ப ஜாலியா திரில்லிங்கா இருக்கு. சினிமாவிற்கும் சீரியலுக்கும் நிறைய வித்தியாசம் . ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆரம்பித்து ரிசல்ட் வரைக்கும் இரண்டும் தனித்தனி டிராக் தான். சினிமான்னா அப்பவே ரிசல்ட் தெரிஞ்சிடும். பெரிய சஸ்பென்ஸ் எதுவும் இருக்காது . ஆனா சீரியல் என்பதை விட குறும்படம் என்று தான் சொல்ல வேண்டும். தினம் தினம் நடிப்பவர்களுக்கே தெரியாத நிறைய ஷாக், திரில்னு இருக்கு. இன்றைக்கு என்ன இருக்கும்னு தினம் யோசிக்க வைக்குது இந்த சின்னத் திரை. இன்னும் சொல்லப் போனால் இதற்கான ரசிகர்கள் வேறல்ல. சினிமாவை பார்ப்பவர்கள்தான் சீரியலையும் ரசிக்கிறார்கள். ஆனால் இந்த கேரக்டர்களை அவர்கள் வீட்டில் ஒருவராக பார்ப்பது தான் அதிக உச்சம். எங்கு பார்த்தாலும் இந்த படத்தில அந்த கேரக்டர்னு சொல்வதில்லை. இந்த சீரியலைப் பத்தி தான் ரசிகர்கள் பேசுறாங்க; பாராட்டுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நேரடியா ரசிகர்கள்கிட்டேயிருந்து கிடைக்கும் கமெண்டுகள் நம்மை இன்னும் நல்லா பண்ணனும்னு உற்சாகப்படுத்துகிறது .

இன்னும் சினிமாவில் உங்களுடைய இடத்தை யாரும் பிடிக்கவில்லையே?

அது தான் என்னை மீண்டும் சினிமாவிற்கும், சின்னத் திரைக்கும் கொண்டு வந்தது. என்னுடைய ரீ என்ட்ரிக்கு முதல் காரணம் எனக்கான இடம் எனக்காகவே ரசிகர்கள் மனதில் இருப்பது தான். அந்த வகையில் என்னுடைய ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்லனும். அவர்களுடைய கனவுக்கன்னியாக இன்னும் என்னை வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் எனக்கு என்னுடைய ரசிகர்களின் பல்ஸ் தெரியும் . அப்படி நான் தேர்வு செய்து நடித்த என்னுடைய படங்கள் எல்லாவற்றையும் வெற்றி மாலை சூடி ரசித்திருக்கிறார்கள்.

நீங்கள் ஹீரோயினாக, சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது எப்படி ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ போன்று அம்மா கேரக்டர் உள்ள கதையைத் தேர்வுசெய்தீர்கள் ?

என்னைப் பொறுத்த வரை நான் என்னுடைய கதாபாத்திரத்தை மிக தைரியமாக தேர்வு செய்கிறேன். கதை உண்மையாகவே அதிக ஸ்ட்ராங்கா இருந்தால் என்னை ரொம்ப யோசிக்க வைக்கும். கதை கேட்டதும் அதே கேரக்டருக்குள் நான் சுற்றிக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக நடிக்க ‘டபுள் ஓகே’ சொல்லிவிடுவேன். ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’ போன்ற கதைகளை அப்படித்தான் தேர்ந்தெடுத்தேன். . ‘ கன்னத்தில் முத்தமிட்டால்’ கதை சொன்னதும் நான்கு குழந்தைகளுக்கு அம்மா என்பது பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. என்னுடைய கதாபாத்திரம், அதற்கு இருக்கும் பவர், இதெல்லாம் தான் என்னை ஓகே சொல்ல வைத்தன. கதை தான் நம் நடிப்பை நிர்ணயிக்கும் .

ஆல் தோட்ட பூபதி மாதிரி இப்ப இருக்கும் ஆட்களில் யாரு ஆடுவாங்க ?

உடம்பை ஷேக் பண்ணினாலே அது டான்ஸ்னு சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தன்னை சந்தோஷமாக்கி தன் நடனத்தால் அடுத்தவர்களையும் சந்தோஷப்படுத்தினால் தான் டான்ஸ். இப்போது நல்ல பிளாட்பார்ம் டான்ஸ் ஆடுபவர்களுக்கு கிடைத்திருப்பது வரவேற்கத் தக்கது. அதே நேரத்தில் டான்ஸ் ரிலாக்ஸ் பண்ணி நம்மை உற்சாகப்படுத்துவதா அமையணும். அப்படி இல்லாம, வேலையா பார்த்தா அதில் செயற்கைத் தனம் வந்துவிடும். இப்போது நல்ல டான்சர் என்று சொன்னால் தனுஷையும், சிம்புவையும் சொல்லலாம். இரண்டு பேர் ஆடும் போதும் கண்டிப்பா ஒரு பீல் இருக்குங்க. அப்படி பார்ப்பவர்களை பீல் பண்ண வைத்தால் டான்சிற்கும் அதை ஆடினவங்களுக்கும் பிளஸ்.

உங்களுக்குக்கிடைத்த சிறந்த விமர்சனம் எது? அதே நேரத்தில் உங்களுக்குக் கிடைத்த மோசமான விமர்சனம்?

என்னைப் பொறுத்தவரை எனக்கு எல்லாமே பாசிட்டிவா இருந்தா தான் பிடிக்கும். எதுக்கு கெட்ட விஷயத்தில் இருந்து கத்துக்கணும். எனக்கு நல்ல விஷயங்களை நல்ல விமர்சனங்களில் இருந்து கற்றுக் கொள்ளத் தான் பிடிக்கும். நம்ம மனசு அப்பதான் அமைதியா இருக்கும். நல்ல எனர்ஜி கிடைக்கும். அப்படி நீங்களும் முயற்சி செய்யுங்கள். உங்களைச் சுற்றி நல்ல அலைவரிசை இருந்து கொண்டே இருக்கும். என்ன? நான் சொல்வது சரியான்னு நீங்க முயற்சி செய்துட்டு சொல்லுங்க. அப்புறம் நீங்களும் சிம்ரன் ரூட்டுக்கு மாறிடுவீங்க.

ரியாலிட்டி ஷோ பண்ற அனுபவம் எப்படி இருக்கு ?

அது ஒரு புது விதமான அனுபவம். ஒரு ஜட்ஜா இருக்கும் போது நமக்கு நிறைய பொறுப்புகள் இருக்கும். இது போட்டியாளர்களின் எதிர்காலத்தை, வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஒரு நிகழ்ச்சி. அதனால் ரொம்ப கவனமா கையாள வேண்டிய விஷயம். ஒரு திறமைசாலி வெளிச்சத்திற்கு வராமல் மறைவதை என்றைக்கும் ஒரு ஆர்டிஸ்டா நான் செய்யக் கூடாது என்பதில் ரொம்ப தெளிவாக இருக்கிறேன். நிறைய பேர் இன்னும் மேடை ஏற பயப்படுகிறார்கள். நம்முடைய திறமையை வெளிக் கொண்டு வரலன்னா அதற்கு முழுக்க நாம தான் காரணம். பயம் தான் முதல் எதிரி. அதனால் எல்லோரும் வந்து பங்கு பெற வேண்டும். அனுபவம் தான் நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கும்.

மேக்கப் இல்லாம, ஸ்கிரீனுக்கு பின்னால் யார் இந்த சிம்ரன் ?

ரொம்ப சிம்பிளான ஆளுங்க. எதுக்கும் பறக்கிற ஆள் கிடையாது. எப்போதும் உஷாரா என் கண்ட்ரோல் தரையில இருக்கும். என் குழந்தைக்கு ஒரு நல்ல அம்மாவாக, என் கணவருக்கு ஒரு நல்ல மனைவியாக, எங்கள் குடும்பத்திற்கு ஒரு நல்ல குடும்பத் தலைவியாக இருக்கிற திருப்தி எனக்கு இருக்கிறது. நான் ஷூட்டிங் முடிந்து வீட்டிற்குப் போகும் போது என்னை உற்சாகப் படுத்த என் குழந்தை காத்துக் கொண்டிருக்கிறது. குழந்தையுடன் வீட்டில் எப்போதும் பிசியாக இருப்பேன். நல்ல டயர்டாகிற வரை குழந்தையோடு விளையாடுவேன். அந்த சோர்வில் எதைப் பற்றியும் கவலையில்லாமல் என் குழந்தையுடன் தூங்கும் போது உன்னதமான ஸ்பரிசத்தை உணர்கிறேன். நல்லா அசைவம் சாப்பிடுவேன்.

அவிச்ச முட்டையும், அவிச்ச காலிபிளவரும் என் பிட்னஸ் சீக்ரட். எனக்கு ஊர் சுற்றுவது மிகவும் பிடித்த ஒன்று. சும்மா ஒரு நாள் இரண்டு நாள் எல்லாம் போய்ட்டு ஸ்டார் ஹோட்டல்ல தங்கிட்டு வருவது பிடிக்காது. 15 நாள் நல்ல டிரிப், ரொம்ப ஜாலியா, பயமில்லாம, ரிஸ்க்கான இடங்களுக்கு போவது எனக்கு பிடித்த விஷயம். நல்ல பயணங்கள் தான் பெரிய அளவில எனர்ஜி தரும்.

நல்ல புத்தக வாசகின்னு சொல்ல முடியாது. நிறைய சினிமா பார்ப்பேன். ஹாரர் மூவிஸ்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். திரில்லிங் தாங்க வாழ்க்கையோட சுவாரஸ்யம். கமர்சியல் படங்களும் பார்ப்பேன். ஆர்ட் படம் பார்ப்பது தான் போர். எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலும் முழு ஈடுபாட்டோடு செய்வேன். எதிர்காலத்தை பற்றி எதையும் பிளான் பண்ற ஆள் கிடையாது. வாழ்க்கை எப்படி வருகிறதோ அப்படியே போகட்டும் என்கிற ‘ஜஸ்ட் லைக் தட்’ பார்ட்டி தான் நான்.

About The Author