வாடிக்கையாளர் மற்றும் பணியாளர் நலன் தான் என்னுடைய பிசினஸ் சீக்ரட்” ஷோபா குவாலனி”

சென்னை உயர்தட்டு மக்கள் வசிக்கும் அபிராமபுரம், கூடவே சாப்ட்வேர் கம்பனிகள் என்று சுற்றிலும் நகர வாசிகளின் பரபரப்பான ஹைடெக் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே கஸ்டமர் வரும் போதே நாலு சிக்கன் ரோல் என்று கஸ்டமர்களை சின்ன ஸ்மைலில் வெல்கம் பண்ணிவிட்டு அவர்களைக் கேட்காமலே தன் செஃப்க்கு ஆர்டர் சொல்கிறார் ஷோபா குவாலனி. ரெகுலர் கஸ்டமர்களின் தேவை என்ன என்று இவருக்கு சரியாக தெரியும். ஷோபா ‘கிரிஸ்பி கிரிமி’ என்ற அந்த பேக்கரிக்கு சொந்தக்காரர். பேக்கரி உரிமையாளர் என்பது அவர் சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரிய போவதில்லை. தன் சக பணியாளர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே பிரட் டோஸ்டரில் பிரட்டை டோஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தவர் நம்மைப் பார்த்ததும் ஹாய் சொல்லிவிட்டு பழக்க தோஷத்தில் "ஹாட் ஆர் கூல்" என்று விசாரிக்கிறார். "சுடச் சுட உங்க இன்டர்வியு தான் வேணும்" என்றோம். "ஓ..எஸ்" என்று நம்முடன் வந்து உட்காருகிறார்.

"பெண்கள் எல்லோருக்கும் பொதுவா ஏதாவது ஒன்று பிடிக்கும். டிரஸ்ஸிங், கோலம், சமையல்னு ஒவ்வொருவர் ரசனைக்கேற்ப அது மாறுபடும். அப்படி எனக்குப் பிடித்தது உணவு வகைகள். விதவிதமாக சமைப்பதும் அதனை எல்லோருக்கும் பரிமாறுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். பெரிய குடும்பத்தில் பிறந்ததாலேயோ என்னவோ எனக்கு சிறு வயதிலேயே உணவு மீது அதிக ஆர்வம்" என்று சொல்கிறார் ஷோபா. சென்னையில் ‘பாம்பே அல்வா ஹவுஸ்’ என்று நீண்ட காலமாக இயங்கி வரும் ஸ்வீட் ஸ்டால் இவருடைய அப்பாவுடையது." எனக்கும் அதே வழியில் பிசினஸ் செய்யும் ஆசை வந்தது" என்கிறார்.

"நான் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்ல படிச்சேன். படித்தது ஆங்கில இலக்கியம் என்றாலும் எனக்கு தொழில் பண்ணனும்னு தான் இன்ட்ரஸ்ட். அதனால் அஞ்சு வருஷத்துக்கு முன்ன வீட்டிலயே எனக்கு தெரிஞ்ச பிரட், கேக் வகைகளை செய்து கொடுத்தேன். சுத்தத்தோடயும், ருசியோடும் அவங்கவங்க வீட்டில செய்து கொடுக்கிற மாதிரி செய்து கொடுத்தா நம்ம மக்கள் கண்டிப்பா ஏத்துக்குவாங்க. அதுவும் பெண்களுக்கு ஒரு விஷயம் புடிச்சிட்டா தன் அக்கம் பக்கம் உள்ளவங்களுக்கெல்லாம் சொல்லி பிரமாதப் படுத்திடுவாங்க. இப்ப நான் உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிகிட்டிருக்கேன்னா அதுக்கு காரணம் இந்த மாதிரி எனக்கு ஆதரவு கொடுத்த அந்த நல்ல உள்ளங்கள். வீட்டிலயே செய்த நான் எனக்கு திரும்ப திரும்ப கிடைச்ச கஸ்டமரை சரியான முறையில் பயன்படுத்திக்கிட்டேன். அது தான் என்னை பேக்கரி வைக்க தூண்டியது.

என் பேக்கரியில் செய்யப்படும் பிரட், சாண்ட்விச், கேக், ஜூஸ் வகைகள் பிடித்துப் போனதால் எல்லோரும் திரும்ப திரும்ப என் பேக்கரிக்கு வருகிறார்கள். புதியதாக தினம் தினம் வரும் கஸ்டமர்களை விட திரும்ப திரும்ப நம் பேக்கரியை தேடி வந்து குறிப்பிட்ட சில வகைகளை விரும்பி சாப்பிடும் கஸ்டமர்கள் தான் பிசினஸ் சக்சஸ் என்று சொல்ல வேண்டும்" என்று காரணம் சொல்கிறார். "நம் பொருள் தரமாகவும், சுவையாகவும் இருந்தால் கண்டிப்பாக திரும்ப திரும்ப தேடி வருவார்கள்" என்று தனது பிசினஸ் சீக்ரட்டை சொல்கிறார்.

"’டுமேடோ துல்சி பிரட்’ என்பது எங்கள் கடையில் மட்டும் கிடைக்கும் ஸ்பெஷல் பிரட். ஈரோப்பியன் வகை ஸ்வீட் துளசியை கொண்டு அந்த பிரட் தயாரிக்கின்றோம். அது மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. புதிதாக உணவு வகைகளை அறிமுகப்படுத்தினால் தான் இன்றைக்கு இருக்கும் போட்டியில் நாம் ஜெயிக்க முடியும்" என்று சொல்லும் ஷோபாவின் பேக்கரியில் வாழைப்பழ கேக், சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சுகர் ப்ரீ பிரட் வகைகள் போன்றவை ஸ்பெஷல் ஐயிட்டங்கள்.

"உணவு பழக்கங்களில் இருந்து தான் நிறைய நோய்கள் வருகின்றன. அதனால் வயதுக்கு தகுந்த படி உணவு வகைகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.அப்படி சாப்பிடும் உணவு வகைகள் சுத்தமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருப்பது அவசியம். அதனால் தான் எங்கள் கடையை சுத்தமாக வைத்திருக்கிறோம். வரும் கஸ்டமர்கள் முகம் சுழித்துக் கொண்டு ஏதோ வந்து விட்டோம் என்பதற்காக உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு சென்றால் அடுத்த முறை வர மாட்டார்கள்.

இங்கு வருபவர்கள் வீட்டில் எப்படி உட்கார்ந்து ரசித்து சாப்பிடுகிறார்களோ அதே போல் எங்கள் கடையிலும் ரசித்து சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும்" என்று கஸ்டமர் பல்ஸ் ரேட்டையும் தெரிந்து வைத்திருக்கிறார் இந்த பிசினஸ் மேக்னட். "அதே நேரத்தில் நம்மிடம் வேலை செய்பவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சந்தோஷமாக திருப்தியாக வேலை பார்த்தால் தான் செய்யும் வேலையும் நன்றாக இருக்கும். அதனால் என்னுடைய செஃப், சர்வர் மற்ற எல்லா பணியாளர்களையும் ஒரே மாதிரி தான் நடத்துகிறேன். அவர்கள் தேவையை நாம் பூர்த்தி செய்தால் தான் நம் தேவையை அவர்களும் முழு மனதோடு பூர்த்தி செய்வார்கள். அவசரமாக ஒரு ஆர்டர் டெலிவரி கொடுக்க வேண்டும் என்றால் கடையில் ஆள் இல்லை என்றால் கூட நானே போயிடுவேன். சரியான நேரத்தில் கஸ்டமருக்கு கொண்டு போய் கொடுத்தால் அவர்களுக்கும் திருப்தி. நமக்கும் டென்ஷன் இல்லை.

என் குடும்பம் எனக்கு பெரிய சப்போர்ட். என் கணவர், ‘உனக்கு பிடித்ததை செய். அப்ப தான் நீ ஜெயிக்க முடியும்’ என்று சொல்லி எனக்கு பணம் கொடுத்தார். அதே போல் எங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் எனக்கு ஆதரவு கரம் நீட்டினாங்க. அவங்க கொடுத்த தெம்பு என்னோட தன்னம்பிக்கை, கடின உழைப்பு எல்லாம் சேர்த்து இன்றைக்கு என்னை ஒரு பேக்கரிக்கு உரிமையாளர் ஆக்கியிருக்கிறது. என்னை போல் நிறைய பெண் தொழிலதிபர்கள், நிர்வாகிகள், இயக்குனர்கள் உருவாக வேண்டும். பெண்கள் நினைத்தால் கண்டிப்பாக சாதித்துக் காட்டுவார்கள்" என்று சொல்லும் ஷோபாவிற்கு வரும் காலத்தில் தமிழ்நாடெங்கும் தங்களது பேக்கரி கிளையை பரப்ப வேண்டும் என்று ஆசை.

ஆர்வமுடன் கடினமாக உழைக்கவும் காத்திருக்கும் பெண்களுக்கு தங்களது கிளையை ஆரம்பித்து தரவும் ரெடியாக இருக்கிறார் ஷோபா. அது மட்டுமல்லாமல் முறைப்படி கேட்டரிங் கற்று இதே துறையில் காலூன்ற நினைப்பவர்களுக்கு ஏணிப்படியாக இருக்கும் விதத்தில் ஒரு கேட்டரிங் இன்ஸிடிடியூட் ஆரம்பிக்கும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்.

"பெண்களுக்கு உணவுத் துறைதான் சிறந்த பிசினஸ் வழி. வீட்டில் உள்ளவர்களுக்கு அளவு பார்த்து, ருசி பார்த்து சமைக்க இயல்பாகவே பெண்களுக்கு தெரியும். உணவை பதப்படுத்துதலில் இருந்து எப்படி பரிமாற வேண்டும் என்பது வரை அவர்களுக்கு அத்துபடி. அதனால் பெண்கள் இந்த துறையை தேர்ந்தெடுத்து தொழில் செய்வது அவர்களுக்கு கண்டிப்பாக வெற்றியை தரும்" என்று சாதித்த ஒருவர் சொன்னால் நமக்கெல்லாம் கசக்கவா செய்யும். ஷோபாவின் கடை ஸ்வீட்டை போலவே ச்சோ சுவீட்டாக… இருந்தது அவரது பிசினஸ் டிப்ஸும்.

பேக்கரி தொழில் செய்ய தேவையானவை பற்றி சென்னையில் பேக்கிங் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஏபி மௌரி நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டு இயக்குனர் பினு வர்க்கீஸ் கூறுகிறார்:
"இந்த நிறுவனம் பேக்கரி தொழில் செய்ய முன் வருபவர்களுக்கு அவரவர் ஏரியாவில் உபகரணங்கள் வழங்கி பயிற்சியும் கொடுத்து உதவுகிறது.

பேக்கரி பிசினஸை முதலில் வீடுகளில் செய்து அக்கம் பக்கம் அனைவருக்கும் சப்ளை செய்து நல்ல பேர் வாங்கிய பிறகு பெரியதாக கடை வைத்து பிசினஸை செய்தால் நல்லது. கடை வைக்கும் போது ஏரியா எப்படிப்பட்டது என்று தெரிந்து அதற்கேற்றவாறு கடையை ஆரம்பிப்பது நல்லது.

பேக்கரி பொருட்கள் உட்படபேக்கிங் உபகரணங்கள் வாங்க சுமார் 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் தேவைப்படும். இங்கு குறிப்பிட்டிருக்கும் தொகையானது சிறிய பேக்கரி வைப்பதற்கு மட்டுமே பொருந்தும். உயர்தர வகையில் பேக்கரி வைக்க 40 லட்சம் முதல் 80 லட்சம் வரை கூட ஆகும். பேக்கிங் உபகரணங்களில் நமக்கு எது தேவை என்று பார்த்து வாங்குவது அவசியம்.

பணம், பொருட்கள் இவை அனைத்துக்கும் மீறி நல்ல கலையும் கற்பனை திறனும் இந்த தொழிலுக்கு தேவை. புதிதாக ஒரு உணவு வகையை தயாரிக்கும் ஆர்வமும் இருப்பது இந்த தொழிலுக்கான கூடுதல் தகுதி. கேட்டரிங் படித்தவர்களை வேலைக்கு வைக்கும் போது இப்போது வந்திருக்கும் அனைத்து வகையான உயர் வகை உணவு வகைகளை செய்ய முடியும். சுத்தமான சுகாதாரமான உணவு பொருட்களை விற்பது அவசியம். இந்த விஷயத்தில் மட்டும் எப்போதும் கவனிப்புடன் இருக்க வேண்டும்."

"பார்ட்டி ஆர்டர்கள் மற்றும் நிறுவனங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் எடுத்தால் கஸ்டமர்கள் பிடிக்கலாம். தன்னிடம் வரும் பிறந்த நாள், திருமண நாள் ஆர்டர்களை குறித்து வைத்துக் கொண்டு அடுத்த வருடம் வரும் போது ஒரு வாரத்திற்கு முன்னர் அவர்களைத் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசி அவருடைய விஷேச நாளன்று நாமே செய்து கொடுக்கலாம்."  

About The Author