உண்ணாவிரதமே வைபோகமே!

அரசியல்வாதி அறிவுடை நம்பி காலையில் நன்றாக டிபனை ஒரு கட்டு கட்டிவிட்டு, திருப்தியாக வாய் வழி ஒரு கர்ஜனையை வெளிப்படுத்தி விட்டுக் கிளம்புகிறார், போர்க்களத்திற்குச் செல்லும் வீரனைப் போல!!

"அம்மா, அப்பா எங்கே போறார்? சட்டசபைக்கா?" என்று பெண் கேட்க, அம்மா, "சே,சே, இல்லை சட்டசபைக்குன்னா சைக்கிள் செயினை எடுத்துட்டு போகமாட்டாரா? இன்னிக்கு உண்ணாவிரதம் இருக்கப்போறார்!"

"உண்ணாவிரதம்னா சாப்பிடாம இருக்கறதுதானே! ஆனா, அப்பா சாப்பிட்டுட்டுப் போறாரே!"

"அசடு… உனக்கு ஒண்ணும் தெரியாது. நீ சொல்றதெல்லாம் காந்தி காலம். இப்போல்லாம் உண்ணாவிரதம்னா காலைல ஒன்பது மணியிலிருந்து சாயங்காலம் நாலு மணி வரைக்கும்தான்!"

பெண் புரியாமல் விழிக்கிறாள் – அப்பாவி மக்களைப் போல!

இப்போதெல்லாம் உண்ணாவிரதம் என்பது ஒரு சடங்காகிவிட்டது – காந்தி, பாவம் தரையில் உட்கார்ந்து ராட்டையை சுற்றிக் கொண்டிருப்பார். அவர் செய்த உண்ணாவிரதம் பிறர் செய்யும் தவறுகளுக்காக தன்னை வருத்திக் கொண்டு கொடுத்துக் கொள்ளும் தண்டனை – ஒரு தவம்.

இப்போது தன்னையும் தன் கட்சியையும் வளர்த்துக் கொள்ளும் ஆயுதமாக அது உபயோகப்படுத்தப் படுகிறது. பிரச்சினை எதுவும் இல்லையென்றால் பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ஈழப் பிரச்சினை, காவேரி தகராறு, போலிஸ் மாணவர்களைத் தாக்கியது – நடவடிக்கை எடுத்தது அல்லது எடுக்காதது, கட்சித் தலைவரை எதிர்கட்சியினர் தரக்குறைவாகப் பேசியது என்று பிரச்சினைகளுக்கா பஞ்சம்?! இவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் நோக்கம் பிரச்சினை தீர்வதற்காக அல்ல- பிரச்சினைக்கு எண்ணை ஊற்றி வளர்ப்பதற்காகத்தான்!

உண்ணாவிரதம் நடக்கும் பந்தலில் ஒருவர் கேட்டார். "என்ன, உண்ணாவிரதம்னு சொன்னாங்க. ஒரு மணியிலேருந்து ஒருத்தரையும் காணோமே?"

அடுத்தவர் பதிலளித்தார், "அதுவா, ஒண்ணுலேருந்து ரெண்டு மணிவரைக்கும் லன்ச் பிரேக்" என்று.

இப்படிப்பட்ட கேலிக் கூத்துகள்தான் இன்றைய உண்ணாவிரதம்! சாகும்வரை உண்ணாவிரதம் என்பது போய், அடுத்தவேளை சாப்பிடும் வரை உண்ணாவிரதம் என்ற நிலை வந்தது. இப்போது, உண்ணாவிரதத்திற்குப் புது விளக்கம் , ஒருவேளை சாப்பாட்டிலிருந்து அடுத்து பசிக்கும் வரை ஒன்றும் உண்ணாதிருப்பது!!

உண்ணாவிரத்திற்கான காரணங்கள் அதிகமாகி வருவதால் இனி உண்ணாவிரதத்தை இரண்டு ஷிப்ட்டுகளாகப் போடலாம் என்ற எண்ணமும் இருக்கிறதாம் அரசியல்வாதிகளுக்கு. காலை 9லிருந்து 4 மணிவரையும்- பிறகு சாப்பிட்டுவிட்டு நாலு மணியிலிருந்து இரவு பதினொன்றுவரை.

ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்அறிக்கை விட்டார். "போராடும் தொழிலாளிகள் உண்ணாவிரதத்தைக் கைவிடவேண்டும் – இல்லையென்றால் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்" என்று. அதைக் கண்டு வருந்திய ஒரு தொண்டர், தலைவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தால் அதைக் கைவிடும் வரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்" என்று அறிவித்தார். எங்கே இவர்கள் உண்ணாவிரதம் இருக்காமல் விட்டு விடுவார்களோ என்று எண்ணிய எதிர்க்கட்சித் தலைவர் இவர்கள் இருவரும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டால் நான் அதை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பேன்" என்று அறிவித்தார்!

உண்மையிலேயே நடந்தது இது. ஒரு கட்சி தன் தலைவர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதை அறிவித்த போஸ்டரில் உண்ணாவிரதம் என்பதற்கு பதிலாக ‘உண்ணர’ விரதம் என்று துணைக்காலை ‘ர’வாக மாற்றி அச்சிட்டுவிட்டார்கள். அது காந்தி வழி வந்த கட்சியாதலால் சத்தியத்தையே பேசவேண்டும் என்று நினைத்தார்கள் போலிருக்கிறது!

நம் வீட்டிலெல்லாம் தாய்மார்கள், விரதம் என்ற பெயரில் கிருத்திகை, செவ்வாய்க் கிழமை என்று சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள் – சாப்பிடாமல் என்றால் சாப்பிடாமல் அல்ல – அதற்குப் பதிலாக கஞ்சி (என்ற பெயரில் பால், சர்க்கரை, முந்திரிப் பருப்பு, ஏலம் போட்டு சுவையான பாயசம்!) சாப்பிட்டுக் கொள்வார்கள். எப்போதும் சாதம், சாம்பார் என்று சாப்பிட்ட வாய்க்கு ஒரு மாற்றம் வேண்டாமா? அதுபோலத்தான் வீட்டு சமையலையே சாப்பிட்டு போரடித்தால் உண்ணாவிரதம் என்று சொல்லிவிட்டு வெளியில் சாப்பிடலாமே!

எது எப்படியோ சின்னத்திரையில் காமெடி சானல்கள் போரடிக்கும்போது இந்த நேரலைக் காமெடிகளை கண்டு ரசிக்க வாய்ப்பளித்திருக்கும் அரசியல்வாதி நடிகப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி!

About The Author

1 Comment

  1. afraj

    ஆமாம். ரொம்ப சரியான சவுக்கடி. வெட்கம், சூடு, சொரணை எல்லத்தையும் வித்தவங்களுக்கு என்ன இருக்குது?. ஏமாறும் மக்கள் இருக்கும் வரையில் ஏமாற்றும் அரசியல்வாதிகள் இல்லாமல் இருப்பார்களா என்ன?.

Comments are closed.