நானும் கிரிக்கெட் விளையாடினேன்!

நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பது கிரிக்கெட். என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் கிரிக்கெட் மாட்ச் நடந்து கொண்டிருக்கும்போது ஸ்கோர் என்ன என்று தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போலிருக்கும்.

சர்ச்சில் ஒருமுறை சொன்னாராம், "பதினோரு முட்டாள்கள் விளையாடுவதை 11000 முட்டாள்கள் பார்த்து கைதட்டுவதுதான் கிரிக்கெட்” என்று. உண்மையிலேயே சர்ச்சில் அப்படி சொன்னாரா என்று எனக்குத் தெரியாது – கேள்விப்பட்டதுதான். அதுவும் இது மாதிரி கட்டுரைகளில் நான் சொன்னேன் என்று அதிகப்பிரசங்கித்தனமாக ஏதாவது சொல்லிவிட்டு உதை வாங்குவதை விட யாராவது பெரிய மனுஷன் பெயரைப்போட்டு அவர் சொன்னார் என்றால் யாராவது கேட்கவா போகிறார்கள் என்ற தைரியம்தான். யாராவது கேட்டால் அது கூகுள் ‘சர்ச்சில்’ என்று நான் எழுதியதை தப்பாக அர்த்தம் பண்ணிக் கொண்டுவிட்டீர்கள் என்று அரசியல்வாதிகளைப் போல் சமாளித்துவிட்டால் போகிறது!!

என் பெண் கூட பரீட்சைகளில் மகாத்மா காந்தி சொன்னது போல அல்லது நேரு சொன்னது போல என்று ஏதாவது கதை எழுதிவிட்டு வருவாள். ”ஏன் இப்படி எழுதினே?" என்று கேட்டால் , “உனக்கு ஒன்னும் தெரியாதுப்பா. (எனக்கு ஒன்னும் தெரியாது என்பது அவளுக்கும் தெரிந்துவிட்டது!) அப்படியெல்லாம் எழுதினாத்தான் மார்க் கிடைக்கும்" என்று சொல்லுவாள்.

இப்படித்தான் ஏதாவது சொல்ல வந்த விஷயத்தை விட்டு எங்காவது தாவிக் கொண்டிருப்பேன். கிரிக்கெட்டில் என்ன வசதி என்றால் அதைப் பற்றி பேச ரொம்ப விஷயம் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை. என்ன ஸ்கோர், யார் அவுட் போன்ற சில விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டுவிட்டால் ஏதோ ஞானஸ்தன் மாதிரி சமாளித்துக் கொள்ளலாம். அது இல்லாமல் யாராவது ”நேத்திக்கு சச்சின் ஆட்டத்தைப் பார்த்தியா..” என்று சொல்லும்போது "எந்த சபாவில?" என்பது போன்ற அபத்தமான கேள்விகளைக் கேட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது!

எனக்குக் கூட என் நண்பர்கள் கிரிக்கெட் விளையாடும்போது நானும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்ற ஆசை உண்டு சின்னவயதில். ஆனால் என் அம்மாவோ வெளியில் போனாலே பயப்படுவாள். “பாப்பா, (என்னை அப்படித்தான் கூப்பிடுவார்கள்!) நடக்காதே.. கால் வலிக்கும்" என்று சொல்லுமளவுக்கு எனக்கு வீரப் பாலூட்டி (Ball?!) வளர்த்தவள் என் தாய். அதனால் விளையாட்டுக்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லாமலே போயிற்று. அப்புறம் எனக்கும் கிரிக்கெட்டிற்கும் தொடர்பு ஏற்பட்டது, நான் காரைக்குடியில் வேலை பார்த்தபோதுதான். அது மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம். அங்கே நிர்வாகத்தின் செலவில் வருஷா வருஷம் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.

இந்த மாதிரி பதினோரு பேர் விளையாடும் டீம்களுக்கு ஆள் தேடி அலுத்துப் போவார்கள். எனக்கு மேலே இருந்த அதிகாரி வேணுகோபால் என்பவர்; அப்போது 45 வயசிருக்கும் – அவரும் என்னைப் போலவே விளையாட்டுக்களில் ஞானசூன்யம்தான்! ஆனாலும் “சார், உங்களை ஃபுட்பால் டீமில் சேர்த்துக் கொள்ளலாமா?" என்று டீம் அமைப்பாளன் கேட்கும்போது "ஃபுட் பால்? காலால உதைச்சு ஆடுவாங்களே அந்த விளையாட்டுத்தானே? ஊம் சேர்த்துக்கொள்" என்பார். அது போலத்தான் டேபிள் டென்னிஸ், பாஸ்கெட் பால், கிரிக்கெட் என்று எல்லாவற்றிலும் பெயரைக் கொடுத்து விடுவார்.

என்னையும் கிரிக்கெட் டீமில் சேரும்படி கேட்டபோது ஒரு நப்பாசை இருந்தாலும் அதுவரை ‘பேட்’டைத் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை. ராமச்சந்திர ராவ் என்று நினைக்கிறேன். அவன்தான் "ஒன்னும் கவலைப்படாதே. இன்னும் பதினைந்து நாள் இருக்கு மாட்சுக்கு. தூள் கிளப்பலாம்” என்றான். எனக்கென்ன?

கவலைப்படவேண்டியது அவன்தானே என்று "ஊம்.. எழுதிக்கொள் என் பெயரை" என்று சொல்லி விட்டேன்! ஆனால் பாவி, மாட்ச் ஆரம்பிக்கும் நாள்வரை என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. மாட்ச் அன்றைக்குத் தட்டுத் தடுமாறி எப்படியோ 11 பேரை லகான் படத்தில் பிடித்து வருவதைப் போலப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டான். அப்புறம்தான் எனக்குத் தெரிந்தது இரண்டு மூன்று பேரைத் தவிர எல்லாருமே என்னைப் போலத்தான் என்று!

முதலில் எங்கள் அணி ஃபீல்டிங் செய்தது. கேப்டன் ராவ் ‘நீ மிட் ஆன்ல நில்லு, நீ மிட் ஆஃப் ல" என்றவாறு சொல்லி வந்தவன் என்னிடம் வந்தவுடன், நீ ‘சில்லி’ என்றான். எனக்கு வந்ததே கோபம். “நீ சொல்லித்தானே நான் ஆட வந்தேன். இப்போது நீ என்னை சில்லிங்கறே? நான் வரமாட்டேன்” என்று அடம் பிடித்தேன். “டேய் ‘சில்லி’ ன்னா ‘சில்லிபாயின்ட்’ னு நான் நிற்கவேண்டிய இடத்தை அடையாளம் கட்டினான். அதுபோலத்தான் மற்றவர்களும் விழித்துக் கொண்டிருக்க, அவன் இது வேலைக்கு ஆகாது என்று, "ஏய்ய், நீ அங்க நில்லு, சார் நீங்க இங்க நில்லுங்க" என்று எங்களுக்குத் தெரிந்த கிரிக்கெட் பாஷையில் பேச ஆரம்பித்தான்!!

அப்புறம் விளையாட்டு ஆரம்பித்தது. எதிரணியினர் பந்தை அடிக்கும்போது கைகளால் தடுக்க முயன்றால் அது என்னவோ வழுக்கிக் கொண்டு என் கையில் பிடிபடுவேனா என்பதுபோல் இருந்தது. பந்தை ஒரு பேட்ஸ்மென் தூக்கி அடித்தான். அது என்னை வெறுப்பேற்றும் வகையில் என் கைக்குப் பக்கத்தில் வந்தது. நானும் கையை தாமரைபோல் குவித்து வைத்தேன். என்ன ஆச்சு என்று தெரியவில்லை. என் கைக்குள் அது விழுந்து குவிந்திருந்தது. நான் சந்தோஷமாக அதைப் பிடித்துக் கொண்டு காப்டன் அருகில் வருகையில் எல்லாரும் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். அம்பையர் கைகளை விசிறி போல் வீசி ‘நாலு ரன்கள்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். என்ன ஆயிற்று என்று என் கைகளை விரித்துப் பார்த்தேன். அது ஒரு அழுகிய ஆரஞ்சு!! அங்கு பார்க்க வந்திருந்த ஏழெட்டு பேர்களில் ஒருவன் என் விளையாட்டுத் திறமையைப் பார்த்து வீசியது! பந்து என்னவோ வாய்க்கால் வழியோடி பவுண்டரியைக் கடந்திருந்தது.

அடுத்தது எங்கள் அணி பாட்டிங். யாரை முதலில் அனுப்புவது என்று தெரியாமல் அந்த ராவ் என்னைப் பலிகடாவாக முதலில் "நீ போ, நீதான் ஓப்பனிங்” என்றான். எனக்கு ஓப்பனிங் என்றால் என்ன.. க்ளோசிங் என்றால் என்ன – அதெல்லாம் தெரியாது. எப்படியோ நானும் விளையாட்டில் ஒரு பரிசு வாங்க வேண்டுமென்றால் ஆடித்தான் ஆகவேண்டும். இதில் முதலென்ன முடிவென்ன என்று "சரி’ என்றேன். அப்போதெல்லாம் எஞ்சினீயர், குந்தேரன், ஜெய்சிம்மா போன்ற விளையாட்டு வீரர்கள் ஆடிய காலம்.

எதிர் அணியருக்கு என் விளையாட்டைப்பற்றி எதுவும் தெரியாது (எனக்கே தெரியாது!!). ‘ஓபனிங் பாட்ஸ்மனாக வருகிறானே! ஏதோ தெரியும் போல!’ என்று தப்புக் கணக்கு போட்டு விட்டார்கள் போலிருக்கிறது!! பந்து வேகமாக வர – அதற்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டேன். அடுத்த பந்து நான் வலை வீசுவது போல வீசிய பாட்டின் மீது பட்டு என் முன்னாலேயே விழுந்தது. ஆசாமியை கணித்த அந்த பவுலர் ஃபீல்ட் செய்பவர்களை என்னைச் சுற்றி பத்ம வியூகம்போல் நிற்க வைத்து பந்து பாட்டில் பட்டவுடன் பக்கத்திலேயே நின்று பிடிக்க வைத்துவிட்டான்! ஒரு ரன்னாவது எடுக்கவேண்டும் என்ற என் கனவும் கலைந்தது. ஆனால் என்ன? டெஸ்ட் மாட்சில் கூட எத்தனை தரம் ஆனானப்பட்ட ஓப்பனிங் பாட்ஸ்மன்கள் ரன் எடுக்காமல் அவுட் ஆகியிருக்கிறார்கள். அந்த வரிசையில் என் பெயரும் இடம் பெறும் என்று எண்ணிக்கொண்டேன்.

எப்படியோ தட்டுத் தடுமாறி ஒரு ரன் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்று, நான் பரிசையும் வாங்கிவிட்டேன்!! இதை வைத்துக் கொண்டு அடுத்த கம்பெனிக்கு வேலைக்குப் போகும்போது ‘கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வென்றிருக்கிறேன்’ என்று எனது சர்டிஃபிகேட்டில் சேர்த்துக் கொண்டது தனிக்கதை!!

About The Author

4 Comments

  1. Me

    ரொம்ப நல்லாயிருந்தது. அலுவலகத்தில் சிரித்துக்கொண்டே படித்ததை பார்த்து மற்றவர்களும் படிக்க ஒரே சிரிப்புதான்

Comments are closed.